Mar 28, 2018

சம்மாந்துறை பிரதேச ஆட்சியில் செல்வாக்கு செலுத்தியது யார் ? ஏன் மு.காவினால் ஆட்சியமைக்க முடியவில்லை ?சம்மாந்துறை பிரதேசசபையின் ஆட்சியானது இரண்டாவது முறையாகவும் முஸ்லிம் காங்கிரசிடமிருந்து கைநழுவிப்போய் உள்ளது. புதிய தேர்தல்முறையும், மு. காங்கிரசின் உள்ளூர் பிரமுகர்களுக்கிடையில் இருக்கின்ற குத்து வெட்டுக்களும், பேரினவாதிகளின் ஊடுருவலும் ஒரு காரணமாகும்.

கடந்த 2௦11 இல் நடைபெற்ற உள்ளூராட்சிமன்ற தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணி 12,358 வாக்குகளை பெற்று நவுசாத் அவர்கள் தவிசாளரானார். அந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் 10,078 வாக்குகளை பெற்றிருந்தது. 

இந்த தேர்தலில் அதிகூடிய 13,034 வாக்குகளை மு. கா பெற்றிருந்தும், அதனைவிடவும் குறைந்த வாக்குகளை பெற்றுக்கொண்ட நவுசாத் தலைமையிலான கூட்டணியே சம்மாந்துறை பிரதேசசபையை ஆட்சியமைத்துள்ளது. 

இதில் நவுசாத் அணியுடன் கூட்டணி அமைப்பதற்கு SLFP உறுப்பினர்களுக்கு ஏராளமான பணம் வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றபோதிலும், மு.கா ஆட்சி அமைப்பதனை தடுப்பதற்கு பேரினவாத சக்திகள் பின்னணி வகித்துள்ளது. 

அன்வர் இஸ்மாயிலின் மறைவுக்கு பின்பு சம்மாந்துரையின் பிரதேச அரசியலை தீர்மானிக்கின்ற சக்தியாக நவுசாத் அவர்கள் காணப்படுகின்றார். அவரது மாமனாரின் பின்னணியே இதற்கு காரணமாகும்.

“றிசாத் பதியுதீனை ஒருபோதும் தலைவராக நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன், அவருக்கு கீழே செயல்படுவதுக்கு நான் தயாராக இல்லை” என்று மேட்டுக்குடி அரசியல் பேசிய நவுசாத் அவர்கள், தேர்தலுக்கு முன்பாக மு. காங்கிரசில் இணையும் பொருட்டு தலைவர் ரவுப் ஹக்கீமை சந்தித்திருந்தார். 

அந்த சந்திப்பில் அவரது தேவைகளையும், நிபந்தனைகளையும் விதித்திருந்தார். அதில் பலவற்றை நிறைவேற்ற மு. கா தலைவர் ஏற்றுக்கொண்டாலும், நிபந்தனைகளுக்கு அடிமைப்பட மு.கா ஒருபோதும் தயாராக இருக்கவில்லை.

அவ்வாறு நவுசாத் அவர்களின் கோரிக்கைகள் முழுவதையும் ஏற்றுக்கொண்டிருந்தால் இந்த தேர்தலில் நவுசாத் மு.கா வேட்பாளராக களம் இறங்கியிருப்பார்.

முஸ்லிம் காங்கிரசுக்கென்று ஓர் பாரம்பரியம் இருக்கின்றது. அதாவது பணம் மற்றும் நிபந்தனைகளைக் கொண்டு எவரையும் கட்சியில் இணைத்துக் கொள்வதில்லை. அவ்வாரானவர்களுக்காகவே பலதரப்பட்ட தனிநபர் வளிபாட்டுக் கட்சிகள் இருக்கின்றது.   

இந்த நிலைமையிலேயே அங்கிருக்கின்ற ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களின் வாக்குகளை கவரும்பொருட்டு மு.கா யானை சின்னத்தில் போட்டியிட்டது.

ஆனால் சம்மாந்துறையில் ஐ.தேக அமைப்பாளர் ஹசனலி கடைசி நேரத்தில் கழுத்தறுப்பு செய்திருந்தார். அதாவது மு.காங்கிரசை தோற்கடிக்கும் பொருட்டு ஐ.தே கட்சி ஆதரவாளர்களுடன் அக்கட்சியைவிட்டு வெளியேறினார். இது மு.காங்கிரசின் தேர்தல் வியூகத்தை கேள்விக்குட்படுத்தியது.

அத்துடன் வெற்றிபெற்றால் யார் தவிசாளராவது என்ற பனிப்போர் மு.கா வேட்பாளர்களுக்கு இடையில் மலிந்து காணப்பட்டது.

எனவேதான் சம்மாந்துறை பிரதேச சபையை நவுசாத் தலைமையில் ஆட்சி அமைத்திருப்பது புதியவிடயமல்ல. அதற்காக எந்த கட்சியும் எந்த தலைவரும் உரிமைகோர முடியாது. கூட்டணி அமைப்பதில் நடைபெற்ற பணப் பரிமாற்றத்தில் அவர்களின் செல்வாக்குகள் இடம்பெற்று இருக்கலாமேதவிர மக்கள் செல்வாக்குகளில் அல்ல என்பதுதான் யதார்த்தமாகும். 

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network