நல்லாட்சியில் நம்பிக்கை இழந்து விட்டோம்-சுஐப் எம்.காசிம் , ரி.எம் இம்தியாஸ்- 

கண்டி திகன மற்றும் தெல்தெனிய பிரதேசங்களில் சேதப்படுத்தப்பட்ட பள்ளிவாசல்கள், முஸ்லிம்களின் வியாபார ஸ்தலங்கள் மற்றும் வீடுகளை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்து நடந்த நிலைமைகளைக் கேட்டறிந்தார்.
இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் இஷாக், மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், பிரதேச சபை உறுப்பினர் அன்சில் ஆகியோர் உட்பட இன்னும் சிலர் அமைச்சருடன் இணைந்திருந்தனர்.
கண்டி திகனைக்கு நேற்று மாலை (05) அமைச்சர் விஜயம் செய்த போது, இடைநடுவில் கட்டுகஸ்தோட்டையிலும் இனவாதிகள் பள்ளிவாசல்களை தாக்கியுள்ளதாகவும், இன்னும் பல கிராமங்களில் ஆங்காங்கே பள்ளிவாசல்களும், வியாபார நிலையங்களும் தாக்கப்பட்டுள்ளதாகவும் கேள்வியுற்று, கட்டுகஸ்தோட்டை, கஹல்லவுக்குச் சென்றார்.
அங்கு இனவாதிகளால் சேதமாக்கப்பட்டிருந்த கஹல்ல மஸ்ஜிதுல் ரஹ்மானியா பள்ளிவாசலுக்குச் சென்றபோது, அங்கிருந்தவர்கள் நடந்த அசம்பாவிதங்களை விபரித்தனர்.
“20 பேர் கொண்ட குழுவினர் கத்திகள், பொல்லுகள், தடிகளுடன் பள்ளிக்குள் அத்துமீறி, கீழ்மாடி, மேல்மாடியை முற்றாக அடித்து நொருக்கிய போது, இங்கிருந்த நாம் ஐவரும் மூன்றாம் மாடியிலிருந்து, பின்பக்கத்திலிருந்து குதித்து தப்பியாதல் உயிர் பிழைத்தோம்” இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த போதும், இந்தச் சம்பவம் நடந்து முடியும் வரை அந்த இடத்திலோ அல்லது அண்டியுள்ள பகுதிகளிலோ பொலிஸாரோ, படையினரோ இருந்திருக்கவில்லை எனவும், சம்பவம் நடந்து நாசகாரிகள் தப்பிச் சென்ற பின்னரேயே, அவர்கள் இங்கு வருகை தந்ததாகவும் குறிப்பிட்டனர்.
அமைச்சரும் அவரது குழுவினரும் அங்கு நின்ற போது, கண்டிப் பிரதேசத்தில் பரவலாக பள்ளிவாசல்களும், முஸ்லிம்களின் வியாபார நிலையங்களும் ஆங்காங்கே தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றன என்ற செய்தி தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்தன.
தென்னக்கும்புரையில் பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டு எறியப்பட்டதாகவும், குருநாகல் மெல்சிரிபுர உஸ்வத்துல் ஹஸனா அரபிக் கல்லூரி மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சருக்கு தகவல் கிடைத்தது. அல்தெனியவில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கும் பெற்றோல் குண்டு வீசப்பட்டு, அந்த பள்ளிவாசலின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டிருந்தன. அதேநேரம் கண்டி, ஹேதெனிய பிரதேசத்தில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான ஹாட்வெயார் நிறுவனத்துக்கும் இனவாதிகள் பெற்றோல் போத்தலை வீசியிருந்தனர்.
கட்டுகஸ்தொட்டையிலிருந்து, குருநாகல் வீதியில் சென்றுகொண்டிருந்த போது, அங்கிருந்த தக்கியா பள்ளிக்கு பெற்றோல் குண்டுகளை வீசி சேதப்படுத்தி இருந்தனர்.
“மூன்று மோட்டார் சைக்கிள்களில் 06 பேர் வந்து இந்தத் தாக்குதலை நடாத்தி விட்டு சென்றனர். ஆங்காங்கே, பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதும், இவர்கள் எந்தவிதமான பதட்டமும் இன்றி தமது காரியத்தை முடித்து விட்டு சென்றனர்” இவ்வாறு அங்கிருந்த முஸ்லிம்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.
பள்ளிவாசலுக்கு முன்னே கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸாரிடமும், இராணுவத்தினரிடமும் அமைச்சர் பாதுகாப்பை பலப்படுத்துமாறு வலியுறுத்தியதோடு, கண்டியின் பதட்டமான நிலை, மக்களின் பாதுகாப்பின்மை குறித்து பொலிஸ்மா அதிபரிடம் அமைச்சர் எடுத்துரைத்து, ரோந்து நடவடிக்கைகளில் தொய்வு நிலையை விபரித்து, பாதுகாப்பை மேலும் பலப்படுத்துமாறு வலியுறுத்தினார்.
அதன் பின்னர் திகனை, தெல்தெனிய பிரதேசத்துக்குச் சென்ற அமைச்சர், பாதிக்கப்பட்ட மக்களுடனும் வேதனைகளைப் பகிர்ந்துகொண்டார்.
கண்டிப் பிரதேசத்தில் அமைச்சர் ரிஷாட் களத்தில் நின்று கொண்டிருந்த போதே, அந்தப் பிரதேசத்து மக்கள் படுகின்ற கஷ்டங்களையும், பீதியையும் உணர்ந்தார்.
இரவு நேரத்தில் எந்த நிமிடத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற நிலையே அங்கு காணப்பட்டது. இனவாதிகள் பள்ளிவாசல்களையும், முஸ்லிம்களின் சொத்துக்களையும் அழிக்க வேண்டுமென்பதில் குறியாக செயற்படுவது, அவர்களின் சரமாரியான பெற்றோல் குண்டுத் தாக்குதல்களிலிருந்து உணரக் கூடியதாக இருந்தது.
திகனையில் அமைச்சர் நின்றபோது, அக்குரனையை தாக்குவதற்கு இனவாதிகள் திட்டமிடுவதாகவும், அங்கு பெரும் பதற்றம் நிலவுவதாகவும் செய்தி ஒன்று பரவியது. அமைச்சர் அங்கு விரைந்த போது, நள்ளிரவு 12.00 மணியாக இருந்தது. அக்குரனை வீதியின் இரு மருங்கிலும் பெரியவர்களும், இளைஞர்களும் குழுமியிருந்தனர்.
அக்குறணை ஹஸனா பள்ளிவாசலுக்கு அமைச்சர் சென்ற போது, அங்கு திரண்டிருந்தவர்கள் அமைச்சரிடம், நிலைமைகளை விபரித்தனர். இனவாதிகள் எந்த நேரமும் இந்தப் பிரதேசத்துக்குள் நுழைவதாக தகவல் கிடைத்துள்ளதால், தாங்கள் தற்பாதுகாப்புக்காக வீதியில் நிற்பதாக அவர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.
பொலிஸார் மீதோ, இராணுவத்தினர் மீதோ நாங்கள் நம்பிக்கை வைக்கவில்லை எனவும், அவர்கள் பெரிதும் கவலையுடன் தெரிவித்ததுடன், மொத்தத்தில் இந்த நல்லாட்சி நமக்குத் துரோகம் இழைத்து வருகின்றது என்றனர்.   
Share on Google Plus

About NEWS

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment