Apr 19, 2018

தோற்றுப் போகும் ப(B)ங்கர் போராட்டம்!-சுஐப் எம்.காசிம்-

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காத கட்சிகள், பிறகட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கும், அரசியல் கலாசாரம் எமது நாட்டுக்குப் புதிதல்ல. ஆனால், தேசிய அரசியலில் பகையும், புகையுமாக உள்ள கட்சிகள், உள்ளூராட்சி சபைகளில் கைகோர்த்துள்ளமை அரசியல் கலாசாரத்தின் புதிய பிரசவமாகவுள்ளது.

 இந்தப் பிரசவ வலிகளை உணர்ந்த கட்சிகள் அரசியல் அதிகாரத்தை உண்மையாகப் பங்கிடுமா? என்பதை கட்சிகளின் அணுகுமுறைத் தளத்திலிருந்து பார்க்க வேண்டும். அதிகாரத்தை கையளித்தல், விட்டுக்கொடுத்தல், புரிந்துணர்வு என்ற பதங்களில் இவ்வாறான ஆட்சிப் பரிமாற்றங்கள் உள்ளூராட்சி சபைகளில் நிகழ்கின்றன.

வரலாறு நெடுகிலும் ஒன்றிணையச் சாத்தியமற்ற பல கட்சிகளும், உள்ளூராட்சி மன்றங்களில் கூட்டணி அமைத்துள்ளன. எனினும், முஸ்லிம் காங்கிரஸும், மக்கள் காங்கிரஸும் எங்கேயாவது ஒரு சபையில் கூட்டிணைந்ததா? ஏன் இணையவில்லை? இதில்தான், இந்த அரசியல் பிரசவத்தின் எதிர்காலம் தங்கியுள்ளது. தனித்துவ தலைமையின் இமேஜும், மவுஸும் மக்கள் காங்கிரஸின் அதிரடிப் பாய்ச்சலால் பலமிழக்கின்றது.

இவ்வாறான பாய்ச்சலுக்கு இனியும் இடம் விட்டால், பதுங்கு குழிக்குள் தற்கொலை செய்யும் நிலை தனித்துவத் தலைமைக்கு ஏற்படும். இவ்வாறு தற்கொலைக்குப் போன தலைமைதான், பங்கருக்குள் இருந்தவாறு மாற்று யோசனைகளை மடியில் சுமந்து வந்துள்ளது. வடக்கு, கிழக்கில் தமிழ் தேசியத்துக்கு எதிராகவும், தென்மேல் மாகாணங்களில் தேசப்பற்றுக்கு இடையூறாகவும், மக்கள் காங்கிரஸை சித்தரித்து, உருவம் அமைப்பதும் முஸ்லிம் காங்கிரஸின் “பங்கர் டிஸ்கஸில்” உள்ளவையே. இவ்வாறு செய்து மக்கள் காங்கிரஸின் பாய்ச்சலை, பின்னிழுப்பதும் பங்கர் டிஸ்கஸ்தான். 

வில்பத்துவில் என்ன நடந்தது? என்பதை விட, ஏதாவது நடந்திருக்கும் என்பதே பொதுவான கருதுகோள். முப்பது வருடங்களாக பராமரிக்கப்படாத வீடுகள், வாசல்களில் காடுகள், புற்கள், புதர்கள், வளர்ந்திருக்கும். இதையாவது துப்புரவு செய்ய முஸ்லிம் காங்கிரஸின் பங்கர் டிஸ்கஸ் முன்வரவில்லையே. மாறாக வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிம்களின் காணி மீட்புப் போராட்டம் மற்றும் மீள் குடியேற்றங்களுக்கு எதிராக வட மாகாண சபையுடன் இணங்கி, இடையூறு செய்கிறது இந்த தனித்துவத் தலைமை.

மன்னார், சன்னாரில் முன்னாள் போராளிகளைக் குடியமர்த்த முடிந்தால், முப்பது வருடங்களாக இருப்பிடத்தை தொலைத்து, தெருக்களில் அலையும் வடபுல முஸ்லிம்களின் சொந்தக் காணிகளை கையளிக்க, தனித்துவ தலைவருக்கு தடையாகவுள்ளது எது? பங்கர் டிஸ்கஸ் தடையெனில் மௌனித்திருங்கள்.

உதவாவிட்டாலும், உபத்திரம் தரக்கூடாது என்பதே வடபுல முஸ்லிம்களின் ஆதங்கம்.

மக்கள் காங்கிரஸ் தலைமையின் செயற்பாடுகளைத் தடுத்து, தமிழ்ப் பெரும்பான்மை வாதத்துக்கு முஸ்லிம்களை தாரை வார்க்கக் கூடாது. பங்கர் டிஸ்கஸுக்குள் மறைந்துள்ள சங்கதிகள், மக்கள் காங்கிரஸின் தர்மப்போரில் தகர்க்கப்படும் நாட்கள் நெருங்குகின்றன. வடபுல முஸ்லிம்களின் மீட்சிக்கான போராட்டத்தை அரசியலாக நோக்காது, சமூகமாகப் பார்ப்பதே தனித்துவ தலைமைக்குள்ள தார்மீக அழகு. ஆனால், பங்கர் டிஸ்கஸ் இந்த தார்மீக உணர்விலிருந்து முஸ்லிம் காங்கிரஸை தூரப்படுத்தியுள்ளது. இந்த பங்கர் டிஸ்கஸ் காலப்போக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் காலையும் வாரிவிடும்.

கல்முனை, கந்தளாய், கிண்ணியா, திருமலை, மூதூர், பொத்துவில் உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியத்தோடு தனித்துவத் தலைமை கைகோர்த்துள்ளது. ஆட்சி அதிகாரம் கைகூடாத சபைகளில் கைகோர்ப்பது, கைகூடிய சபைகளில் கைவிடுவது இவையே தனித்துவக் கட்சியின் அரசியல் கலை. கல்முனை, கிண்ணியா, கந்தளாய். திருமலை பிரதேச தமிழர்கள் விரைவில் இதை உணர்வர்.

பங்கர் டிஸ்கஸ் தமிழரையும் ஏமாற்றும் என்பதாலே மக்கள் காங்கிரஸுடன் தமிழர்கள் கைகோர்க்கின்றனர். கைகோர்த்த தமிழர்களை கைவிடாத மக்கள் காங்கிரஸ், அவர்கள் தவிசாளர்களாக, தலைவர்களாக அரியணையேற்றி அழகு பார்த்துள்ளது.

கல்முனை மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்கான மயிலின் பாய்ச்சல் தருணம் தப்பிய முன்நகர்வே! கல்முனை கழுத்தறுப்பு, மக்கள் காங்கிரஸுக்கு படிப்பினையாக அமையட்டும். அரசியலுக்காக மட்டும் தமிழர்களை அரவணைக்கும் கலாசாரத்தையும், போராட்டங்களுக்காக மட்டும் முஸ்லிம்களை பங்காளர்களாக்கும் போக்குகளையும் பங்கர் டிஸ்கஸ் கைவிட வேண்டும்.

வடபுலத்தில் தமிழர்கள் ஆளச்சாத்தியமான சபைகளில், தமிழர்களை அரியணையேற்றியது மக்கள் காங்கிரஸே! பங்கர் டிஸ்கஸில் விரக்தியடைந்த தமிழர்கள், வன்னியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விரட்டி, ஆனந்த சங்கரியை ஆட்சி பீடமேற்றியது ஏன்? புலிகளின் பங்கர் சிந்தனைகள் தோல்வியடைந்ததன் வெளிப்பாடா இது?


SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network