Apr 4, 2018

சாய்ந்தமருது பிரிந்தால் கல்முனைக்கு பாதிப்பா?

புதிய முஸ்லிம் மேயர் தெரிவு எதைக் காட்டுகின்றது?


வை எல் எஸ் ஹமீட்

சாய்ந்தமருது சுயேற்சைக்குழுப் போராட்டத்திற்கு சொல்லப்பட்ட காரணங்களுள் ஒன்று; சாய்ந்தமருது பிரிந்தாலும் கல்முனை ஒரு முஸ்லிம் மேயரைப் பெறுவது பாதிக்கப்படாது; என்பதாகும். இதற்கு சொல்லப்பட்ட நியாயம் வெறும் எண்கணிதமாகும். இந்நியாயம் தொடர்ச்சியாக சொல்லப்பட்டுவந்து தற்போது சாய்ந்தமருது இல்லாமல் கல்முனை முஸ்லிம் மேயரைப் பெற்றநிலையில் தங்களின் எதிர்வுகூறல் சரியென நிறுவப்பட்டதாகவும் சாய்ந்தமருது பிரிந்தால் கல்முனைக்குப் பாதிப்பு என்று சொன்னவர்களின் வாதம் பிழையென நிறுவப்பட்டுள்ளதாகவும் எனவே, இதற்குமேலும் சாய்ந்தமருதிற்கு தனியான சபை வழங்குவதை தாமதிக்கக்கூடாது; என்றும் பிரச்சாரம் செய்யப்படுகின்றது.

வெறும் எண்கணித அடிப்படையில் செய்யப்பட்ட எதிர்வுகூறல் அதே எண்கணித அடிப்படையில் நிறுவப்படவில்லை. மாறாக இம்மேயர் தெரிவின் யதார்த்தம் அதன் மறுதலையையே நிறுவி இருக்கின்றது; என்பதை இவர்கள் புரியாமல் பேசுகின்றார்களா? அல்லது புரிந்தும் புரியாததுபோல் நடிக்கின்றார்களா? என்பது தெரியவில்லை.

கல்முனை மாநகரசபைக்கான மொத்த உறுப்பினர்கள் 41. இவற்றில் தமிழர்கள் 13. எஞ்சியது 28. சுயேச்சை ஒன்பது. மிகுதி 19. இவர்களின் எண் கணிதக்கணக்கு 19 பெரிதா? 13 பெரிதா? எனவே, சாய்ந்தமருதை விட்டுவிட்டு ஏனையவர்கள் ஒன்று சேருங்கள்; என்பதாகும். இது ஐந்தாம் வகுப்புப் பிள்ளைக்கும் தெரிந்த கணக்கு. இதனைச் சொல்வதற்கு ஒரு சுயேச்சைக்குழுவும் ஒரு தேர்தலும் ஏன் தேவைப்பட்டது? என்பது தெரியவில்லை.

இப்பொழுது ஒன்றுசேர்ந்து மேயரைப் பெற்றுவிட்டார்கள். எனவே, அவர்களது ஐந்தாம் வகுப்புக் கணிதம் சரியாகிவிட்டது. எனவே, சாய்ந்தமருது பிரிந்தால் கல்முனைக்கு ஆபத்து; என்பது பிழையென்று நிருபிக்கப்பட்டு விட்டது. இவ்வாறு ஒரு தப்புக் கணக்கைப் போட்டு மக்களை மடையர்களாக்க முற்படுகின்றார்கள்.

19 எண்ணிக்கையில் பெரிதாக இருக்கின்ற அதேவேளை அரசியல் யதார்த்தத்திலும் பெரிதாக இருந்திருந்தால் கல்முனையில் கடந்த சில தினங்களாக எத்தனையோபேர் ஒரு பதட்டமான சூழ்நிலையில் எத்தனையோ பேர்களிடம் கெஞ்சவேண்டி ஏன் ஏற்பட்டது? ஹென்ரி மகேந்திரனுடன் கல்முனையில் சில பிரதி அமைச்சர்களும் தோப்புக்கண்டத்தில் சில அமைச்சர்களும் ஏன் பேச வேண்டி ஏற்பட்டது? ஆனந்தசங்கரியுடன் ஏன் பேசவேண்டியேற்பட்டது?

கல்முனைக்குடி ஜும்ஆப்பள்ளிவாசலில் கல்முனையின் தலைவிதி எவ்வாறு ஆகப்போகின்றது; என்ற கவலையில் மக்கள் ஏன் கூடவேண்டியேற்பட்டது? குழுக்குழுவாக அந்த அமைச்சருடனும் இந்த அமைச்சருடன் மக்களும் பள்ளிநிர்வாகமும் ஏன் பேசவேண்டி ஏற்பட்டது? கடந்த இரண்டு மூன்று நாட்களாக கல்முனையில் ஒரு பதட்டமான சூழ்நிலையில் கவலையடைந்தவர்களாக தூக்கத்தைத் தொலைத்தவர்கள் எத்தனைபேர் எனத்தெரியுமா? ஏன் இந்த நிலை?

“ நாங்கள் ஒற்றுமைப்பட்டதுபோல் நீங்களும் ஒற்றுமைப்பட்டு கல்முனைக்கு முஸ்லிம் மேயரைப் பெற்றுக்கொள்ளுங்கள்; எங்களில் ஏன் தங்கியிருக்கிறீர்கள்? உங்களால் ஒற்றுமைப்பட முடியாது; என்பதற்காக எங்களது நியாயமான போராட்டத்தைக் குறைகூறாதீர்கள்” என்கின்றனர் சிலர்.

ஏன் கல்முனை மக்கள் ஒற்றுமைப்படவில்லையா? சாய்ந்தமருதில் சுமார் 80% மக்கள் ஒற்றுமைப் பட்டபோது பள்ளிவாசல் தலையீடு இல்லாமல் சுயேச்சையில்லாமல் சுமார் 75% மக்கள் ஒரு கட்சியின் பின்னால் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் ஒற்றுமைப்படவில்லையா? அவ்வாறு ஒற்றுமைப்பட்டும் ஏன் அவர்களுக்கு இந்த திண்டாட்டநிலை ஏற்பட்டது?

இங்குதான் இவர்களது வெற்று எண்கணிதத்திற்கும் யதார்த்தத்திற்கும் இடையில் உள்ள இடைவெளியைப் இவர்கள் புரிந்துகொள்ளத் தவறுகின்றார்கள்.

இவர்கள் கூறுகின்ற 13 இலும் பெரிதான 19 இல் மு கா விடம் 10, வன்னி அமைச்சரிடம் 5, தே கா விடம் 1, ந தே மு இடம் 1, ஶ்ரீ சு க இடம் 1, சுயேச்சையிடம் 1.

வன்னி அமைச்சர் மேயர் தெரிவு தினத்தன்று (2/4/18) பகல் 2.15 மணிவரை எந்த ஒற்றுமை உடன் பாட்டுக்கும் வரவில்லை என மு கா தரப்பு தெரிவிக்கின்றது. தே கா சபையையே பகிஷ்கரிப்பு செய்துவிட்டது. ந தே மு வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. எனவே, இவர்களிடம் ஓர் ஒற்றுமை நிலைப்பாட்டிற்கு வரக்கூடிய நிலை இருக்கவில்லை; என்பது தெளிவு. மருதமுனை சுயேச்சை மட்டுமே ஆரம்பமுதல் ஆதரவளிக்க முன்வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்த்தரப்பிடம் 13. மு கா விடம் 11. எஞ்சியிருப்பது 8. இந்நிலையில் தமிழ்த்தரப்பை உடைத்து தன்பக்கம் கவரவேண்டிய நிலை ஏற்படுகின்றது. எந்தத் தரப்பு எங்களுக்கு ஆபத்து என்று கூறினோமோ அந்தத்தரப்பை அதன் எண்ணிக்கையை குறைப்பதற்காகவும் தன் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகவும் நாடவேண்டி ஏற்படுகிறது. 19 இன் அரசியல் பலம் கல்முனையில் பெரிதாக இருந்திருந்தால் ஏன் இந்த நிலை? இவர்கள் கூறுகின்ற ஒற்றுமை ஏன் ஏற்படவில்லை? இதற்கு கல்முனை மக்கள் எந்தவிதத்தில் குற்றவாளிகள்?

கல்முனை மக்கள் ஒற்றுமைப்படாமல் இருந்து இந்தநிலை ஏற்பட்டிருந்தால் அது கல்முனை மக்களின் பிழை. ஆனால் அவர்கள் 75% வீதம் ஒற்றுமைப்பட்டும் ஏன் இந்த நிலை? ஒற்றுமையாக கல்முனை மக்கள் வாக்களித்தும் கல்முனையின் தலைவிதியைத் தீர்மானிக்க வன்னியிடமும் கண்டியிடமும் உதிரிக்கட்சிகளிடமும் ஏன் கல்முனை மக்கள் கெஞ்சவேண்டும். கல்முனை மக்களின் இக்கட்டைப் புரிந்துகொண்டும் இவர்கள் ஏன் பகிஷ்கரிப்புச் செய்யவேண்டும்? மேயர் தெரிவு தினத்தன்று 2.15 வரை ஏன் இழுத்தடிக்க வேண்டும்? இப்பொழுது புரிகின்றதா 19 எண்கணித்ததில் பெரிதானாலும் அரசியல் யதார்த்தத்தில் அது பெரிதல்ல; என்பதை.

சற்று சிந்தித்துப் பாருங்கள்; ஒவ்வொரு ஆசனத்தைப் பெற்றுக்கொண்டு இந்த பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட அல்லது வாக்களிப்பில் கலந்துகொள்ளாத கட்சிகளுக்கு இன்னும் தலா இரண்டு மூன்று ஆசனங்கள் கிடைத்து அவர்கள் இவ்வாறு நடக்க, த தே கூட்டமைப்பிற்கே மொத்த 13 தமிழ் ஆசனங்களும் கிடைத்திருந்தால் நிலை என்ன? இவை நடைபெற சாத்தியமற்றவை என யாரும் கூறமுடியுமா?

ஒரு தமிழ்சகோதரனின் முகநூலில் தமிழர்களுக்கு ஒரு மேயரைப்பெற்றுக்கொள்ள ஓர் அரிய சந்தர்ப்பம் இருந்தும் சூரியனில் போட்டியிட்ட இருவர் முஸ்லிம் தரப்பிற்கு ஆதரவு வழங்குகின்றனர், என்று எழுதப்பட்டு இருந்தது. எவ்வாறான ஆபத்தில் இருந்து கல்முனை மீண்டிருக்கின்றது; என்று சிந்தித்துப் பாருங்கள்.

முன்னாள் கல்முனை பட்டினசபை இன்றைய மாநகரசபையாக இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா? 75% அவர்கள் ஒற்றுமைப்பட்ட நிலையில் எவ்வளவு அழகாக பாடிப்பாடி அவர்கள் ஆட்சியமைத்திருப்பார்கள். கல்முனை மக்கள் வாக்களித்துவிட்டு கல்முனையின் தலைவிதியைத் தீர்மானிக்க ஏன் யார் யாரிடமோ கையேந்த வேண்டும்?

அன்றையப் பட்டினசபை மீது இரு பக்கமும் சுமையை அன்றைய அரசு தூக்கிவைத்தது. அதை கல்முனை தாங்கிக்கொண்டது. இன்று ஒரு பக்கம் விலகினால் எந்த வகையில் நியாயம்? அதனால் ஏற்படப்போகும் விளைவு என்ன? என்பதை இந்த மேயர் தெரிவின் இழுபறி துல்லியமாக உணர்த்தியும் ஏன் விதண்டாவாதம்?

மேயருக்கு கிடைக்கப்பெற்ற வாக்குகள் 22. இவற்றில் ஐந்து வாக்குகள் இறுதி நேரத்தில் முஸ்லிம் மேயர் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது; நாமும் பெயரைப் பதிவு செய்துகொள்வோம்; என அளிக்கப்பட்ட வாக்குகள் என்பது மு கா தரப்பின் ஒலிப்பதிவுகள் தெளிவுபடுத்துகின்றன. இது அடுத்த தரப்பால் இதுவரை மறுதலிக்கப்படவில்லை.

அதேநேரம், இறுதி நேரத்தில் உதிரியாக வந்தவைபோக, மேயரை உறுதிப்படுத்த 16 அங்கத்தவர்கள் ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டிருந்திருக்கின்றனர். அவர்களுள் ஐந்து தமிழ் வாக்குகள். எஞ்சிய முஸ்லிம் வாக்குகள் 11 மாத்திரமே! 2.15 வரை கல்முனையைப் பாதுகாக்க முன்வராதவர்கள் இன்னும் சற்றுநேரம் அதை நிலைப்பாட்டில் இருக்க, அல்லது சிலவேளை சபை பகிஷ்கரிப்பு முடிவெடுக்க தமிழ்த்தரப்பு ஐந்தும் அடுத்த பக்கம் மாறி வாக்களித்திருந்தால் இந்நேரம் கல்முனை பறிபோய் இருக்கும். ஓர் பிரளயம் ஏற்பட்டிருக்கும்.

கல்முனைக்கு இது தேவையா? அன்று இரு பக்கமும் சுமைகளை ஏற்றிய அரசு இன்று ஒரு பக்கம் மாத்திரம் சுமையை இறக்கினால் என்ன நடக்கலாம்; என்பதற்கு இதைவிட அத்தாட்சிகள் தேவையா? ஏன் இதை சிலரால் புரிந்துகொள்ள முடியவில்லை. எண்கணிதம் படிப்பிக்கின்றார்கள்.

இப்பொழுதாவது இடைவெளி 19-13= 6. சாய்ந்தமருது தனியாகப் பிரிந்தால் மொத்தம் 30. அதில் தமிழ் 13. அவர்களது வாக்களிப்பு வீதம் கூடினால் 14 ஆகவும் மாறலாம். இதுதொடர்பான புள்ளி விபரங்களை ஏற்கனவே வெளியிட்டிருக்கின்றேன். எனவே, இந்நிலையில் இடைவெளி 2, சிலவேளை 4. சிலவேளை அவர்கள் overhang ஐப்பெற்றால் இடைவெளி ஒன்றாகவும் மாறலாம். இரண்டு கட்சிகள் ஒவ்வொரு அல்லது இவ்விரண்டு ஆசனங்களைப் பெற்றுக்கொண்டு பகிஷ்கரிப்பு செய்துவிட்டால் நிலைமை என்ன? அதோகதிதான். இவர்களுக்கு கல்முனையின் நிலையைவிட அவர்களது அரசியல் முக்கியம்; என்பதை அவர்கள் நிரூபிக்கவில்லையா? எலிக்கு மரணம், பூனைக்கு விளையாட்டு என்பார்கள். இத்தேர்தலிலும் கிட்டத்தட்ட அதுதான் கல்முனையின் நிலை.

கல்முனை மக்கள் ஒற்றுமைப்பட்டு வாக்களித்துவிட்டு தங்களுக்கு மேயர்கூட கேட்கவில்லை. ஒரு கலிமாச்சொன்னவனை, எந்த ஊராக இருந்தாலும் மேயராக்குங்கள்; என்றுதானே கேட்டார்கள். ஆனால் கட்சிக்காரர்கள் கட்சி அரசியல் செய்தார்கள்.

எனவே, யார் ஒற்றுமைப்படவில்லை. கல்முனை மக்களா? கட்சிகளா? ஒற்றுமைப்படுங்கள் என்பவர்களால் இந்தக்கட்சிகளை ஒற்றுமைப்படுத்த முடியுமா? எனவே, கல்முனைக்காக கட்சிகளும் ஒற்றுமைப்படமாட்டார்கள். ஊர்களும் ஒற்றுமைப்படாது. கல்முனைக்காக கல்முனை மாத்திரம்தான் ஒற்றுமைப்படலாம்.

இன்றைய அனுபவம் கல்முனைக்கு ஒரு செய்தியைச் சொல்லியிருக்கின்றது. அதாவது கல்முனையை எத்தனையாகவேண்டுமானாலும் பிரிக்கட்டும். ஆனால் கல்முனைக்கென்று அன்றைய பட்டினசபை எல்லையுடன் தனியான மாநகரசபை வழங்கப்படவேண்டும். இதுதான் கல்முனையின் கோரிக்கை.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network