BREAKING NEWS

Apr 24, 2018

மக்கத்துச் சாம்பிராணியும் அரசியல் அஸ்தமிப்பும்!-சுஐப் எம்.காசிம்- 

மக்கள் காங்கிரஸைப் பற்றி வடமாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் தெரிவித்து வரும் கருத்துக்கள் சந்தர்ப்பவாதத்தின் விசுவாசங்கள். பதவியைத் தக்கவைக்கும் தந்திரங்களின் வெளிப்பாடுகளும் இந்த விசுவாசத்துக்குள் மறைந்துள்ளன. நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உடன்படிக்கையின் விசுவாசப் பிரமாணத்தினூடாக, இரண்டு வருடங்களுக்கு வழங்கப்பட்ட மாகாண சபை பதவியில், தொடர்ந்து ஒட்டிக்கொள்ளும் இவரது அரசியல் ஆசைகளின் கடைசி மூச்சுக்கள், நினைவிழந்து பேசுகின்றதோ! என்றும் கவலைப்பட வேண்டியுள்ளது.

தமிழ் தேசியத்தின் பலத்துக்குள் மறைந்திருந்து வடபுல முஸ்லிம் தலைமையைக் கொச்சைப்படுத்தும் இவருக்கு, வெளிநாடுகளில் தஞ்சம் வழங்கப் பலர் முன்வந்துள்ளதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தமிழ் டயஸ்போராக்களின் தாளத்துக்கு ஆடும் ஐயூப் அஸ்மின், மாகாண சபை கலைந்ததும் குடும்பத்தோடு புலம் பெயரவுள்ளதாகக் கதைகள் உலாவுகின்றன. இதற்காக வடபுல முஸ்லிம்கள் அனைவரும் மக்கள் காங்கிரஸை நிராகரித்து, தமிழ் பெரும்பான்மைவாதத்துக்கு சிரம்சாய்க்க வேண்டுமென்பது, சுயநலத்துக்காக சமூகத்தை ஏலம்கூவி விற்பது போன்றது.
தானும், தனது குடும்பமும் வெளிநாடுகளில் சுகபோகம் வாழ்வதற்காக, வடபுல முஸ்லிம்களின் தலைமை மற்றும் மக்களை, புலிகளின் சிந்தனையில் வளர்ந்துள்ள தமிழ் பெரும்பான்மைவாதிகளின் பொறிக்குள் திணிக்க முனையும் ஐயூபின் அந்தகாரச் செயலால், அவரது அரசியலும் அஸ்தமிக்க ஆரம்பித்துள்ளது.

தன்னை வளர்த்து வழிகாட்டிய கட்சிக்கு (என்.எப்.ஜி,ஜி - NFGG) துரோகமிழைத்து, கட்சியின் அமானிதம், நம்பிக்கை வாக்குறுதிகளை மீறிப் பதவியில் ஒட்டியுள்ள ஐயூப், தான் பின்பற்றும் இஸ்லாத்தின் உன்னத கோட்பாடுகளையும் களங்கப்படுத்திவிட்டார்.  நம்பிக்கை, வாக்குறுதி, அமானிதம் என்பவை முஸ்லிம்களின் ஈமான், ஆத்மாவோடு இழையோடியுள்ள உணர்வுகள். இதைக்கூட மதிக்காமல் சமூகத்தைக் காட்டிக்கொடுத்து மடிப்பிச்சையேந்தி அரசியல் செய்யும் ஐயூபை, சமூகப்பிரதிஷ்டை செய்ய வடபுல முஸ்லிம்கள் தீர்மானித்துள்ளனர்.

தலைமைகளின் முரண்பாடுகள், பிளவுகளை அரசியல் மூலதனமாகவும், முஸ்லிம்களை கவர்ந்திழுக்கும் விளம்பரமாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாவிப்பதாக, ஐயூப் அஸ்மின் கொக்கரிப்பது முட்டையிடாத மலட்டுக் கோழியின் குடல் கொழுத்த கதையை ஞாபகமூட்டுகிறது. தமிழ்த் தேசியத்தை பிளவுபடுத்தி, முஸ்லிம் தேசியத்தை வெற்றிப்பாதையில் நகர்த்த முடியாது.

பேரினவாதிகளின் பிரித்தாளும் தந்திரங்களுக்குள் விழுந்ததால், தமிழ்மொழிச் சமூகத்தின் ஒற்றுமை ஒரு தசாப்தத்திற்கு மேலாக சாத்தியப்படாமல் போயிற்று. யுத்தத்திற்குப் பின்னரான இன்றைய சூழலில் தமிழ் மொழியினர் ஒன்றுபடுவதைப் பற்றிய சிந்தனைகள் மேலோங்கியுள்ளன. முசலி தவிர ஏனைய தமிழ்ப் பிரதேசங்களில் மக்கள் காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றி, தமிழ் மக்கள் வெளிப்படுத்தியுள்ள மீள் இணைவு, தமிழ் மொழிச்சமூகங்களின் ஒன்றுபடலுக்கான நல்லதோர் சமிக்கையாகவே பார்க்கப்பட வேண்டும்.

தமிழ் கட்சிகளுக்கு தமிழர்களும், முஸ்லிம்கள் முஸ்லிம் கட்சிகளுக்கும் வாக்களிக்க வேண்மென்ற ஐயூபின் சிந்தனைகள், புதிய அரசியலமைப்பினூடாக அரசாங்கம் கட்டி எழுப்ப காத்திருக்கும் இன நல்லிணக்கத்துக்கான சாவு மணியாகவேயுள்ளது.

“சாகப்போகும் பிச்சைக்காரனுக்கு முதலாளி வாய்ப்பதில்லை” என்பார்கள். இதுபோல் அரசியலில் இறுதி மூச்சுக்களை எண்ணிக்கொண்டிருக்கும் ஐயூபும், மக்கத்துச் சாம்பிராணியையும் மௌலவியையும் நினைத்துப்பார்க்க வேண்டும். மேலும், வடமாகாணத்தில் சிங்களக் கட்சிகளை காலூன்ற வைக்க மக்கள் காங்கிரஸ் முனைவதென்பது, தமிழர்களின் விடுதலை உணர்வுகளுக்கு வைக்கப்படும் மறைமுக வேட்டுக்களாகும்.

தமிழர் தாயகத்தில் பேரினவாதிகளுக்கு இடம் அளிக்குமளவுக்கு தமிழ் மக்கள் மலின சிந்தனையுள்ளவர்களா? தன்னைப்போன்று தமிழர்களையும் மலின, எளிய, சந்தர்;ப்பவாத சிந்தனையாளர்களாகக் கருதியுள்ள ஐயூபுக்கு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழர்கள் பற்றிய ஐயூபின் கருத்தை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டதாக அர்த்தப்படும்.

முப்பது வருட உரிமைப் போராட்டத்தில் எதையாவது பெறுவதற்கு தியாகத்துடன் செயற்படும் தமிழர்களை, கேவலம் மாகாணசபை பதவிக்கு ஏமாந்த ஐயூப், எடைபோடுவதற்கு எந்த உரிமையும் இல்லை. இவர் மொத்தத்தில் தமிழர்களதும், முஸ்லிம்களதும் உரிமைகளை ஏலம் விடும் சாதாரண தெரு அரசியல் வியாபாரியே.

மூலதனம் முடங்கி, வியாபாரம் நஷ்டமடைந்த ஐயூப், வெளிநாடுகளில் புலம்பெயர வைத்துள்ள பொறிக்குள் அவராக விழுந்து அஸ்தமிக்கப்போகிறாரோ தெரியவில்லை!!!

Share this:

Post a Comment

 
Copyright © 2014 Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA. Designed by | Distributed By