Apr 23, 2018

சண்டியனுக்கு சந்தியில் சாவு, உலமாக்கள் வாய்திறப்பார்களா?

Related image

வை எல் எஸ் ஹமீட்

ஒன்றிற்கு மேற்பட்ட கருத்துக்களுக்கு இடம் வழங்குவதுதான் ஜனநாயகமாகும். ஒரு கருத்திற்கு மாத்திரம் இடம் இருந்தால் அது ஜனநாயகம் இல்லை. உதாரணமாக கம்யூனிச நாடுகளில் ஒரு கருத்துக்கு மாத்திரமே இடம் உண்டு. அதனால்தான் அவை ஜனநாயக நாடுகள் இல்லை. அதேபோன்றுதான் மன்னராட்சி நாடுகளும்.

ஜனநாயகம் மனித உரிமையை உயர்த்துகின்றது. மனித உரிமை ஜனநாயகத்தை மேம்படுத்துகின்றது. ஏனெனில் கருத்துச் சுதந்திரம் மனித உரிமை. அதேநேரம் கருத்துச் சுதந்திரம் ஜனநாயகத்தின் ஆணிவேர். ஆனால் கருத்துச் சுதந்திரம் அதன் எல்லையைத் தாண்டக்கூடாது.

ஜனநாயக அரசியலில் பல அரசியல் கட்சிகள் தொழிற்படுகின்றன. சில மக்களின் வாக்குகள் மூலம் அதிகாரத்தை அனுபவிக்கின்றன. இந்த அதிகாரத்தின் மூலம் மக்களுக்கு அவர்கள் உரிய சேவையை வழங்க வேண்டும். அதில் அவர்கள் தவறுகின்றபோது அவற்றைச் சுட்டிக்காட்ட வேண்டியது; எதிரணியினது பொறுப்பாகும்.

துரதிஷ்டவசமாக, இன்று சில அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் நினைக்கின்றார்கள்; அவர்களை யாரும் விமர்சிக்கக் கூடாது. அவர்கள் மக்களை ஏமாற்றலாம். ஊழல் செய்யலாம். செய்யாததை செய்ததாக விளம்பரப்படுத்தலாம். ஆனால் அவர்கள் விமர்சிக்கப்படக் கூடாது. அந்த விமர்சனங்களுக்கு அவர்களால் ஜனநாயக ரீதியாக பதில் சொல்ல முடியாது; ஏனெனில் அந்த விமர்சனங்கள் உண்மையானவை; நியாயமானவை. இவற்றைச் சந்திக்கும் திராணி அவர்களுக்கு இல்லை. அதேநேரம் இந்த உண்மை மக்களிடம் சென்றுவிடவும் கூடாது.

எனவே, கூலிக்கு ஆட்களை அமர்த்தியிருக்கின்றார்கள். அதில் சிலர் சாதாரணதரம் படித்துவிட்டு தொழிலில்லாமல் இருக்கும் இளைஞர்கள். இவர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவு, தொலைபேசி போன்றவை வழங்கப்படுகின்றன. இன்னும் சிலர் கஞ்சாவிலும் சாராயத்திலும் மிதப்பவர்கள். இவர்களது பணி தங்களது எஜமானர்களுக்கெதிராக யாராவது நியாயமான விமர்சனங்களை முன்வைத்தால் அவர்களை மானபங்கப்படுத்தக் கூடிய வகையில் எதையாவது எழுதுவது.

உதாரணமாக, அண்மையில் ஒரு அமைச்சர் ஜனாதிபதியுடன் லண்டன் சென்றிருந்தார். அவர் பல சுற்றுப்பேச்சுவார்த்தைகளை அந்த விஜயத்தின்போது நடாத்தி தடைப்பட்டிருந்த GSP+ வரிச்சலுகையைப் பெற்றுவிட்டாரம். அவருக்கு ஆடைத்தொழில் வர்த்தகர்கள் நன்றி தெரிவிக்கின்றனராம்; என்று ஒரு விளம்பரம். மேற்படி வரிச்சலுகை நீண்ட இழுபறிப்பிரச்சினையாக இருந்து அரசாங்கம் அவர்களது நிபந்தனைகளைப் பூர்த்திசெய்ய பலவிடயங்களைச் செய்து ஏற்கனவே தீர்க்கப்பட்ட விடயம். உத்தியோகபூர்வமாக அது தொடர்பாக ஏதாவது நிகழ்வுகள் நடைபெற்றிருக்கலாம். அதற்காக இப்படியொரு விளம்பரமா?

இதனைச் சுட்டிக்காட்டினால் சுட்டிக்காட்டியவரை அவமானப்படுத்துவதற்கு அடியாட்கள் ஏவப்படுவார்கள். இது சரியா? மார்க்கம் அனுமதிக்கின்றதா? இது தொடர்ந்தால் நம்சமூகத்தின் எதிர்காலம் என்ன?

எனக்கு நடந்த அண்மைய அனுபவம்
=========================
குறித்த ஒரு அமைச்சர் 2010ம் ஆண்டிலிருந்து ஒரே அமைச்சையே வைத்துக்கொண்டிருக்கின்றார். பல தடவை இந்த அமைச்சைக் கைமாற்றுவதற்கு அரசு விரும்பியபோதும் அதற்கெதிராக போராடி சிலரின் கால்களைப் பிடித்து அந்த அமைச்சையே வைத்துக்கொண்டிருக்கின்றார். இது தொடர்பான சில விடயங்கள் அண்மையில் Sunday Times பத்திரிகையிலும் வெளிவந்தது.

இந்த அமைச்சில் அபிவிரித்திக்கென ஒரு சதம் கூட ஒதுக்கப்படுவதில்லை. பல தடவை நான் நேரிலேயே அந்த நாட்களில் இந்த அமைச்சை விட்டுவிட்டு வேறுஓர் அமைச்சைப் பெறுமாறு கூறியிருக்கின்றேன். இந்த அமைச்சில் பாரிய ஊழல் நடைபெற்றிருக்கின்றது; என்று கணக்காய்வாளர் நாயகமே தெரிவித்திருக்கின்றார். அவரைவிட ஆதாரம் தேவையா? யாரிடம் ஆதாரம் இருந்தாலும் இறுதியாக அது அவரிடம் சென்று அவர்தான் விசாரணை செய்கின்றவர். அவரே சொல்லிவிட்டார். முழு நாடும் சொல்கிறது. இவர் தான் சுத்தம் என்று சொல்லிக்கொண்டிருக்கின்றார்.

இந்நிலையில் அண்மையில் நான் ஒரு பதிவினை இட்டேன். அதில் “இந்த அமைச்சினால் சமூகத்திற்கும் அபிவிருத்தி செய்ய முடியாது; நீங்களும் எதுவித தனிப்பட்ட பிரயோசனத்தையும் பெறவில்லை; என்கிறீர்கள். அவ்வாறாயின் ஏன் இந்த அமைச்சைக் கைவிட்டு வேறு ஒரு அபிவிருத்தி செய்யக்கூடிய அமைச்சைப் பெறக்கூடாது?” என்று எழுதியிருந்தேன்.

இன்று எல்லோரும் தன்னை ஊழல்வாதி என்று கூறுவதற்கு இந்த அமைச்சு ஒரு பிரதான காரணம். எனவே, சுயமரியாதை உள்ளவன் அதைக் காப்பாற்றுவதற்காகவாவது வேறு ஒரு அமைச்சைப் பெறுவானே. இன்று இவருக்கு இருக்கின்ற ஐந்து எம்பிக்கள் பலத்திற்கு எந்த அமைச்சைக் கேட்டாலும் அரசு கொடுக்குமே! இந்தப் பேரம்பேசும் பலத்தை இந்த அமைச்சைக் காப்பாற்றத்தானே பாவிக்கின்றார்.

த தே கூ பேரம் பேசும் சக்தியைப் பாவித்து காணிமீட்கிறார்கள். ஆனால் நாங்கள் ஊழலுக்கு பேர் போன அமைச்சைக் காப்பாற்றுகின்றோம். இதை நான் சுட்டிக்காட்டியது தவறா? இது ஜனநாயக வரம்பிற்குட்பட்டதில்லையா? இந்தக் கருத்தை நான் சொல்கின்ற உரிமையை மறுக்கமுடியுமா? ஆனால் நடந்தது என்ன?

எமது ஊரில் ஒரு ஊமையன் இருந்தான். அவனுக்கு எது செய்தாலும் பொறுத்துக்கொள்வான். ஆனால் அவன் மூக்கை மட்டும் தொட்டுவிடக்கூடாது. தொட்டால் தொடுகின்றவரை துரத்தித் துரத்தி அடிப்பான். இதனால் சிறு பிள்ளைகள் அவன் மூக்கைத் தொட்டுவிட்டு ஓடுவதும் சிலவேளை அடிவாங்குவதும் நிகழும்.

அதேபோன்றுதான் இந்த அமைச்சர் எதைத் தாங்கினாலும் தன்அமைச்சின்மீது கைவைத்தால் ஊமையனின் மூக்கின்மீது கைவைத்தது போன்றாகும். உடனே அடியாட்களுக்கு உத்தரவு பறந்துவிட்டது. இவரது உத்தரவு இல்லாமல் யாரும் எழுத மாட்டார்கள். கஞ்சாவிலும் சாராயத்திலும் மிதக்கும் குடிகாரர்களும் அடிவருடிப் பையன்களும் எதையெதையோவெல்லாம் வை எல் எஸ் ஹமீட்டை அவமானப்படுத்த வேண்டுமென்று எழுதுகிறார்கள்.

அண்மையில் அஸ்மின் அய்யூப், அந்த அமைச்சருக்கெதிராக ஒரு அறிக்கையை விட்டிருந்தார். அந்த அறிக்கையில் சில விடயங்களில் எனக்கும் உடன்பாடில்லை. அந்த அறிக்கைக்கு நாகரீகமாக பதில் வழங்கலாம். தப்பில்லை. ஆனால் இரண்டு மூன்று நாட்கள் மிகவும் விகாரமான அநாகரீகமான பதிவுகள் அஸ்மினுக்கெதிராக அடியாட்களால் தொடர்ந்தும் இடப்பட்டுக் கொண்டிருந்தன.

இங்கு கேள்வி என்னவென்றால் நாகரீக அரசியலுக்கு இங்கு இடமில்லையா? கௌரவமானவர்கள் அரசியலுக்கு வரக்கூடாதா? இவர்கள் சமூகத்தை ஏமாற்றிப் பிழைப்பதை வேடிக்கை பார்க்க வேண்டுமா? இந்த நிலையை மாற்ற சமூகம் என்ன செய்யப் போகின்றது? உலமாக்கள் ஏன் வாய்மூடி இருக்கின்றார்கள். இதனைத் தொடர்ந்தும் அனுமதித்தால் சமூகம் எங்கே போய் நிற்கும்?

இந்த கேவலம் கெட்ட அரசியல் இன்னும் இரண்டொரு பேருக்குள்தான் இருக்கின்றது. மற்றவர்களுக்குள்ளும் இது பரவினால் நிலைமை என்ன ஆகும்? இவர்களால் சமூகம் பிரயோசனம்தான் அடையவில்லை. சீரழியாமலாவது இருக்கக்கூடாதா?

உலமாக்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? கௌரவமானவர்கள் இந்த கேவலமான கைக்கூலிகளை உங்கள் முகநூல்களிலும் வட்ஸ்அப் களிலும் இன்னும் எத்தனை நாளைக்கு வைத்துக்கொண்டு இந்த சமூக சீரழிவிற்கு துணைபோகப் போகிறீர்கள்?

சண்டியனுக்கு சந்தியில் சாவு
————————————-
‘சண்டியனுக்கு சந்தியில் சாவு’ என்பார்கள். குறித்த அமைச்சர் லண்டனில் ஒரு பெண்ணுடன் நிற்கின்ற ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது. அதை வைத்து அவரது எதிரிகள் அவர்கள் நினைப்பதையெல்லாம் கற்பனை செய்து அவரை அவமானப்படுத்தும் வகையில் எழுதிக்கொண்டுருக்கின்றார்கள். இதுவும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.

இதைப்பார்த்ததும் அவரது அடியாட்கள் பதிவுபோட்டவர்களைத் திட்டித் தீர்க்கின்றார்கள். சாபம் போடுகின்றார்கள். அதற்கு ‘ஆமீன்’ கூறுகின்றார்கள். இங்கு இவர்கள் புரிந்துகொள்ள வேண்டியது; இவர்களுக்கெதிராக ஜனநாயகரீதியான விமர்சனங்களை மற்றவர்கள் செய்கின்றபோது அதனை ஜனநாயகரீதியாக சந்திக்க உண்மையில்லாமல் அடியாட்களை வைத்து வீணாக அவமானப்படுத்தும்போது அவர்கள் எவ்வளவு வேதனைப் பட்டிருப்பார்கள்! இன்று நீங்கள் அவமானப்படுத்தப்படும்போது உங்களுக்கு வலிக்கின்றதல்லவா? இறைவன் நீதியானவன் என்பது இப்போதாவது புரிகிறதா?

இறைவன் உங்களை அவமானப்படுத்த நாடிவிட்டால் உங்களால் தாக்குப் பிடிக்க முடியுமா? ஜனநாயக அரசியல் செய்பவனுக்கு முகநூலில் அழுக்குகளை உமிழும் அடியாட்கள் எதற்கு?

எனவே, இனியாவது இறைவனைப் பயந்து கொள்ளுங்கள். நீங்கள் இவ்வுலகில் நிரந்தரமாக வாழப்போவதில்லை. நீங்கள் யார் யாருக்கெல்லாம் அநியாயம் செய்தீர்களோ அதற்கான இறைவனின் தீர்ப்பு உங்களை கட்டாயம் வந்து சேரும். அப்பொழுது இந்தக் கூலிக்கு வசைபாடும் அடியாட்கள் உங்களைக் காப்பாற்ற முடியாது.

புனித ரமளான் வருகிறது. எஜமானர்களும் அடியாட்களும் திருந்துங்கள். தௌபா செய்யுங்கள். உங்களுக்கு வாக்களித்த மக்களை விற்றுப் பிழைக்காமல் அவர்களுக்கு நல்லது செய்யுங்கள். இறைவன் நம் அனைவரின் பாவங்களையும் மன்னிப்பானாக! ஆமீன்.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network