Apr 26, 2018

திருமலை சம்பவம் நம் கண்களைத் திறக்குமா?வை எல் எஸ் ஹமீட்

தற்போதைய மிகவும் பிந்திய பேசுபொருள் திருமலை சண்முகா வித்தியாலய ‘அபாயாவுக்கெதிரான போராட்டம்’. இதை ஒரு தனிப்பட்ட சம்பவமாகவோ ( isolated incident) அல்லது வெறுமனே அபாயாவுக்கெதிரான போராட்டமாகவோ பார்ப்போமானால் நாம் சரியான தளத்தில் இருந்து பிரச்சினைகளை அடையாளம் காணத்தவறுகின்றோம்; என்பது பொருளாகும்.

கடந்த காலங்களில் தமிழ்ப் பாடசாலைகளில் முஸ்லிம் மாணவிகள் நீளக்காற்சட்டை, பர்தா போன்றவை அணிவதற்கெதிராக பிரச்சினைகள் கிளப்பப் பட்டிருக்கின்றன. முஸ்லிம் ஆசிரியர்களுக்கு ஜும்ஆவுக்கு செல்வதற்கு நேரம் வழங்குவது பிரச்சினைக்குள்ளாக்கப் பட்டிருக்கின்றது.

வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் காலத்தில் கையகப்படுத்தப்பட்ட பத்தாயிரம் ஏக்கரிற்கும் அதிகாமான முஸ்லீம்களின் காணிகள் இன்னும் தமிழ்த்தரப்பினரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன.

தமிழ்த் தலைமைகள் இன்றுவரை இவைதொடர்பாக குரல் கொடுக்கவில்லை. தற்போதைய அபாயா விவகாரம் ஒரு நியாயமற்ற போராட்டம்; என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் தமிழ்த் தலைமைகள் மௌனம் காக்கின்றன.

பேரினவாதத்திற்கெதிராக தூக்கப்பட்ட ஆயுதங்கள் அப்பாவி முஸ்லிம்களுக்கெதிராக திருப்பப்பட்டன. இவை அனைத்தையும் ஒரே தளத்திலிருந்து ஆராயத்தவறினால் நாம் பிரச்சினையின் ஆணிவேரை அடையாளம் காணத்தவறிவிடுவோம்.

இவை அனைத்துக்கும் பின்னால் இருப்பது முஸ்லிம்களுக்கெதிரான தமிழ் இனவாத உணர்வாகும். இது முஸ்லிம்களுக்கெதிரான சிங்களப் பேரினவாதத்திற்கு எந்த வகையிலும் சளைத்ததல்ல என்பது மாத்திரமல்ல; அதைவிடவும் ஒரு படி மேலானது; என்றால்கூட தவறில்லை. இந்த இனவாத உணர்வினை முஸ்லிம்கள் அன்று உணர்ந்ததன் விளைவுதான் அவர்கள் தங்களை தனியான சமூகமாக அடையாளம் காணத்தூண்டியது.

அண்மையில் அறிவிப்பாளர் B H அப்துல் ஹமீட் “ தான் முதலாவது ஒரு தமிழன் அதன் பின்புதான் முஸ்லிம்” என்று கூறியதாக ஒரு கூற்று சமூக வலைத்தளங்களில் முஸ்லிம்கள் இனத்தால் நாம் தமிழர்களா? என்ற ஒரு வாதப்பிரதிவாதத்தை தோற்றுவித்திருந்தது.

கலிமாச்சொன்ன ஒருவன் முதலாவது முஸ்லிம். இரண்டாவதுதான் அவன் அறபியா? பாரசீகனா? இந்தியனா? பாகிஸ்தானியா? என்பதெல்லாம். இதன் மாற்றொழுங்கு கலிமாவைப் பின்தள்ளுவதாக அமைந்துவிடும். இஸ்லாமிய அடிப்படை அறிவுத் தட்டுப்பாட்டின் காரணமாக சிலருக்கு இது புரிவதில்லை.

தமிழ் நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பாலும் இனத்தால் தங்களை தமிழர்களாகவே அடையாளம் காணுகின்றார்கள். அந்த அடிப்படையில்தான் அன்றைய இந்திய இணை அமைச்சர்களான சிதம்பரம் பண்டாரி போன்றவர்கள் இலங்கை முஸ்லிம்களையும் ஒரு தனித்துவ சமூகமாக அடையாளம்காண மறுத்தார்கள்.

தமிழ்நாட்டு முஸ்லிம்களைப்போல் இலங்கை முஸ்லிம்களும் இனரீதியாக தங்களை “ தமிழர்கள்” என்று அடையாளம் காண்பதை இஸ்லாம் தடுக்கவில்லை. தந்தை வழியில் நம்மை சோனகர் என்று அடையாளம் காணமுடியுமென்றால் ( போத்துக்கீசர் அவ்வாறு அழைத்தபோதிலும்) தாய்வழியில் தமிழர் என்றழைப்பதில் தவறேதுமில்லை. ஆனாலும் எங்களுக்கென்று எம்மார்க்கத்தின் அடிப்படையிலான கலாச்சார, வாழ்வியல் மற்றும் நடைமுறைகளில் தனித்துவமுண்டு. அந்த தனித்துவத்தை “ தமிழினம்” ஒன்ற பொதுமை சொற்பதத்திற்குள் தொலைத்துவிட முடியாது.

அன்று அந்தத் தனித்துவம் விலைபேசப்பட்ட வலாறுதான் முஸ்லிகளை “ தமிழன்” என்ற பொதுமை அடையாளத்தில் இருந்து பிரித்து “ முஸ்லிம்” என்ற தனித்துவ அடையாளத்திற்கான முத்திரையை குத்தவைத்தது.

அன்று “ தமிழன்” என்ற பொதுப்பதத்திற்குள் அழிக்க முடியாமல்போன முஸ்லிம்களின் தனித்துவத்தின்மேல் உள்ள வெறுப்பு நீறுபூத்த நெருப்பாக இருந்துவந்ததே தவிர அணைந்துவிடவில்லை.

அந்த நீறுபூத்த நெருப்பு அவ்வப்போது அனல் கக்கியதன் விளைவுதான் அன்று தூக்கப்பட்ட ஆயுதம் திசைதிருப்பப்பட்டதும் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டதும் இன்றுவரை அவ்வப்போது வெவ்வேறு வடிவங்களில் சிற்றினவாதம் தலைநீட்டுவதுமாகும். எனவேதான் பேரினவத்த்தைவிட இச்சிற்றினவாதம் வீரியம் கூடியது. சந்தர்ப்பம் கிடைத்தால் முஸ்லிம்களின் தனித்துவத்தை முழுமையாக உறுஞ்சுவதற்கு தயங்காது.

அதிகாரப்பரவலாக்கம் முஸ்லிம்களுக்கு ஆபத்தானது
——————————————————
அதிகாரப்பரவலாக்கத்தை முழுமையாக அல்லது மாற்றீடாக சமஷ்டி மற்றும் அதியுச்ச அதிகாரப்பகிர்வை தொடர்ச்சியாக எனது ஆக்கங்களில் நான் எதிர்த்து வருகின்றேன். அளுத்கம, திகன கலவரங்களின் பின்னரும் திருமலை நிகழ்வுபோன்றவற்றின் பின்னணியிலும் அதிகாரப்பகிர்வின் ஆபத்தை நாம் உணராவிட்டால் தோற்றுப்போன சமூகமாகவிடுவோம்.

பொலிஸ் அதிகாரம் உட்பட அதிகப்பட்ச அதிகாரம் மாகாணங்களுக்கு வழங்கப்படுமானால் ஏழு மாகாணங்களில் ஏழு அரசாங்கங்களின்கீழ் பேரினவாதத்தால் நசுக்கப்படுவோம். நமது முட்டில் தங்கியிருக்கின்ற ஒரு அரசாங்கத்திலேயே நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை. ஏழு அரசாங்கங்களின்கீழ் நிலைமையை யோசித்துப்பாருங்கள்.

எட்டாவது அரசாங்கத்தில் சிற்றினவாதத்தில் நசுக்கப்படுவோம். அதிகாரமில்லாமலே நமது தனித்துவத்தை மறுக்கும் சிற்றினவாதம், அதிகாரம் இல்லாமல் ஆயுதம் மாத்திரம் இருந்தபோது நம் ரத்தத்தை சுவைத்த சிற்றினவாதம் அதிகாரம் கிடைத்தால் விட்டுவைக்குமா?

இறுதியாக எஞ்சுவது கிழக்குமாகாணம். அதிகாரம் எந்தத்திசையில் என்று அறுதியிட்டுச்சொல்ல முடியாத மாகாணம். முஸ்லிம் முதலமைச்சர் இருந்தபோதே நூறுவீத முஸ்லிம்கள் வாழுகின்ற பாதைக்கு பெயர் வைப்பதைத் தடுத்த சிற்றினவாதம்; பண்டைய வரலாற்றுக்குள் எப்போதும் தஞ்சம் புகுந்தாலும் கல்முனையில் 1950 ம் ஆண்டிற்கு முன்பிருந்த உள்ளூராட்சி எல்லையை இன்று ஏற்றுக்கொள்ள மறுக்கும் சிற்றினவாதம், நாளை பொலிஸ் அதிகாரம் உட்பட அதிகபட்ட அதிகாரம் வழங்கப்பட்ட கிழக்குமாகாணத்தின் ஆட்சியை பேரினவாதத்துடன் இணைந்து கைப்பற்றினால் நமது நிலை என்ன? வங்கக்கடலில் தஞ்சமா?

இந்த அதிகாரப்பகிர்விற்காக நம்மவர் சிலரும் சேர்ந்து குரல் கொடுக்கின்றனரே! இது அறியாமையா? புரியாமையா?

எனவே, இந்த திருமலை சம்பவமாவது அதிகாரப்பகிர்வு தொடர்பாக நம் கண்களைத் திறக்கட்டும். ஒரு சமூகம் ஒரு அரசாங்கத்தால் ஆழப்பட முடியாது என்பதற்காக இன்னொரு சமுதாயத்தை ஒன்பது அரசாங்கங்களால் ஆளப்படச் சொல்வது எந்தவகையில் நியாயம்?

இந்த அனுபவங்களின் பின்பும் இந்த அதிகாரப்பகிர்வை எந்த முஸ்லிமாவது ஆதரிப்பானாக இருந்தால் அவனை என்னவென்பது?

எனவே! விழித்தெழுவோம்!!!

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network