Apr 6, 2018

பேரினவாதத்தின் மௌனப்படுக்கை!சுஐப்.எம்.காசிம்

நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிப்பதில் கடும் நம்பிக்கையுடன் செயற்பட்ட சிறுபான்மை தனித்துவக் கட்சிகள், மக்கள் மனங்களில் வேறு பதிவுகளை உண்டாக்கும் வகையில் கடைசி வரைக்கும் செயற்பட்டன. பிரதமருக்கு எதிரான பிரேரணை, சபைக்கு வந்த நாளிலிருந்து வாக்களிப்பு தினத்தின் கடைசி இரவு வரைக்கும், பல கூட்டங்கள், கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு, மக்களை ஆர்வப்படுத்தல் மற்றும் பதற்றப்படுத்தும் அறிக்கைகளை வெளியிட்டது முஸ்லிம் காங்கிரஸ். மு.காவின் தீர்மானம் வரலாற்று அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துமென அரசியல் களத்தையே ஒரு குலுக்குக் குலுக்கினார் அமைச்சர் ஹக்கீம்.

“அம்பாறையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏமாற்றி விட்டது, புத்தளத்தில் ஐக்கிய தேசிய கட்சி கழுத்தறுத்து விட்டது, இதற்கான பிரதிபலன்களை இவ்விரு கட்சிகளும் அனுபவிக்கும்” என்றும் எச்சரித்தார். என்னடா! தாமரை மொட்டுவின் சுகந்தத்திலும், வாசனையிலும் தனித்துவத் தலைவர் தூங்கப் போகிறாரோ என்றனர் பலர். இல்லை, புலி பசித்தாலும் புல் தின்னாது, ஆனால் யானை எதையும் தின்னாது புல்லையே தின்னும். இந்த யதார்த்தம் என்னுள் ஒன்றைப் புரிய வைத்தது.

யானையை விட்டு மரம் விலகுமா? இதை விட எத்தனையோ நெருக்கடிகள் வந்து, முஸ்லிம்கள் சாப்பிட வழியில்லாதிருந்த காலத்திலும், யானையின் பசிக்குத் தீனி போட்டதும் இந்த மரம்தானே. இதை மக்கள் மத்தியில் மறக்கடித்து, ஐக்கிய தேசிய கட்சியை ஆதரிப்பதென்ற பழைய முடிவையும், பழைய விசுவாசத்தையும் புதுப்பிப்பதே இந்த ராஜதந்திரம். எத்தனை காலத்துக்கு இந்த ராஜதந்திரம் என்ற தனித்துவக் கட்சியின் தந்திரம் வெற்றியளிக்கும். மக்களுக்குத் தெரியாத தனித்துவத் தலைவரா? மஹிந்தவை ஆதரிப்பதா? இல்லையா? என்ற முடிவுக்கு வர முடியாமல் தடுமாறி, திணறியதில் காலத்தை கடத்திய இக்கட்சி, ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில், மனச் சாட்சியின்படி வாக்களிக்குமாறு கோரியது.

அரசியலை ஒவ்வொருவரும் மனச்சாட்சிப்படி சிந்திப்பதென்றால் எதற்காக கட்சி? எதற்காக கோஷம்?. மந்தை மேய்க்கும் இடையன் மதிகெட்டவனாக இருந்தால், ஓநாய்களுக்கு நல்ல விருந்தே என்பார்கள். சமூகத்தைப் பாதுகாக்கத் தெரியாத தலைமையால் பேரினவாதத்துக்கு இரையாகிறது எமது சமூகம். ஆனால், ரணிலை வீழ்த்தி, அதிகாரத்துக்கு வர எத்தனிக்கும் பேரினவாதிகளின் தந்திரத்துக்கு துணைபோய் சிறுபான்மை சமூகங்களின் இருப்பு, பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்குவது ஆபத்தானது.

கண்டி, திகனை கலவரங்களால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அவலங்களை வைத்து, அனுதாபம் காட்டி அவர்களின் நன்மதிப்பை பெற்றுவிடலாம் என்ற நப்பாசை பேரினவாதத்துக்கு இருப்பது சிறுபான்மை கட்சிகளுக்கு ஒன்றும் புரியாததல்ல. இந்த அச்சமே தனித்துவ தலைவரின் சிந்தனையில் தீயை வைக்கிறது. தேர்தலூடாக ஆட்சிக்கு வர முடியாத பேரினவாதிகள், காகிதத்தில் கையெழுத்திட்டு, ஆட்சியைப் பிடிப்பதற்கு தனித்துவ தலைமை ஆதரவளிக்காது.

பிரதமரை ஆதரிக்கும் மயில் கட்சியின் நியாயமும், அநியாயம்தானா? பெரிதாக வாயைத் திறக்காமல், கடைசி இரவில் கூடி பிரேரணையை தோற்கடிக்க நடனமாடியது மயில். குயிலுக்கு கூவக்கற்றுக் கொடுக்க வேண்டுமா? மயிலுக்குக் ஆடக் கற்றுக்கொடுக்க வேண்டுமா? அம்பாறையில் வெற்றிகரமாக ஆடிய இந்த மயில், ரணிலைக் காப்பாற்ற பாராளுமன்றத்தில் தோகை விரித்தது. “மனைவியை விவாகரத்துச் செய்யுமாறு சொல்லும் தாய், அடுத்த மனைவி யாரென்று சொல்லவில்லையே” என்கிறது இக்கட்சி. ரணிலை நீக்கினால் அடுத்த பிரதமர் யார்? என்கிறார் ரிஷாட் பதியுதீன். ரணிலுக்கு எதிரான பிரேரணை என்று கூறும் மொட்டு அணியினர், அரசுக்கு எதிரான பிரேரணையும் இதுவே என்றும் வாதாடியதால், ஆதரிக்க முடியாது என்று தோகையை சுருக்கிக் கொண்டது மயில். இக் கட்சிக்கு உள்ள பீதி கடந்தகால பயங்கரங்களே. முன்னாள் ஆட்சியாளர்களை நம்புமளவுக்கு இக்கட்சிகளின் இதயங்கள் இன்னும் தெளிவடையவில்லை.

பழிவாங்கலுக்காக காத்திருக்கும் பேரினவாதிகளின் நெருக்குதலுக்கு ஆளானால், தென்னிலங்கை முஸ்லிம்கள் அகதிகளாக்கப்படலாம். இந்தப் பொதுவான யதார்த்தம் மயிலை, பிரதமர் மீது நம்பிக்கை கொள்ள வைத்தது.

பாதுகாப்புக்கு பிரதமரை விட ஜனாதிபதியே அதிக அதிகாரமுள்ளவர் என்பதால், யாரைக் குற்றம் சொல்வது என்ற இருதலைக் கொள்ளி நியாயத்தில் நிற்கிறது இந்த மயில். வயிற்றிலுள்ள பிள்ளையின் பலத்தை நம்பி, வளரும் பிள்ளையின் கழுத்தை நெரித்துக் கொல்வதா? என்ற வெளிப்படை நியாயமே, சிறுபான்மை தனித்துவக் கட்சிகளை பிரதமருக்கு எதிரான பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க வைத்திருக்கலாம் அல்லவா?             

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network