எம்.வை.அமீர் -
கல்முனை மாநகராட்சி எல்லைக்குள் சாய்ந்தமருது தோணாவை அண்டிய பிரதேசங்களில் கொட்டப்படும் கழிவுகளால் குறித்த பிரதேசத்தில் வசிப்போர் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.
காலம்காலமாக சாய்ந்தமருது 10 ஆம் பிரிவில் உள்ள தோணாவை அண்மித்த பிரதேசங்களில் கொட்டப்படும் கழிவுகளால் இப்பிரதேச மக்களும் பாதசாரிகளும் எதிர்நோக்கும் சிரமங்கள் தொடர்பில் கல்முனை மாநகரசபையிடம் பலமுறை முறையிட்டபோதும் குறித்த கழிவகற்றும் நடைமுறையானது திருப்திகரமானதாக இடம்பெறவில்லை.
கல்முனை மாநகரசபையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் கல்முனை மாநகர முதல்வரே! சாய்ந்தமருது கழிவற்றல் விடயத்தில் நிரந்தர தீர்வு ஒன்றைத்தர முன்வருவீர்களா? அல்லது பத்திரிக்கையில் செய்திவந்தால் கழிவுகளை அகற்றும் பழைய நடைமுறையை பின்பற்றுவீர்களா? தோணா பாலத்துக்கு அருகில் குவியும் கழிவுகளுக்கும் அதனை முகாமைத்துவம் செய்வதற்குமான நிரந்தர தீர்வை எப்போது பெற்றுத் தருவீர்கள்?
டெங்கு போன்ற ஆட்கொல்லி நோய்கள் பரவிவரும் இந்த காலகட்டத்தில் இப்பிரதேசத்தில் வாழும் மக்களின் எதிர்பார்ப்புக்களை விரைந்து நிறைவேற்றுவீர்களா?
கல்முனை மாநகரசபையில் சாய்ந்தமருதில் இருந்து மட்டும் 10 மாநகரசபை உறுப்பினர்கள் இருக்கிறீர்கள். மாநகரசபை உறுப்பினர் என்ற பதவிகளில் இருக்கின்ற நீங்கள், உங்களது கடமைகளை மறந்து விட்டீர்களா? இதுவரையும் கல்முனை மாநகரசபையால் ஆற்றக்கூடிய பணிகளை நிறைவேற்ற என்ன முன்னெடுப்புகளை செய்துள்ளீர்கள்? முதல்வரால் உங்களது முன்னெடுப்புகளுக்கு தடைகள் ஏற்படுகிறதா? அல்லது மாநகரசபை உறுப்பினர் என்ற அலங்காரத்தில் மட்டும் இருக்கிறீர்களா?
கல்முனை மாநகர முதல்வரே! சாய்ந்தமருதின் உறுப்பினர்களே!! மக்களின் ஆதங்களுக்கு விரைந்து பதில் தாருங்கள்.
கல்முனை மாநகர முதல்வரே! சாய்ந்தமருதின் அவலத்தை பார்ப்பீர்களா?
Reviewed by NEWS
on
April 17, 2018
Rating: