சூழ்ச்சிகளைத் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றியது அ.இ.மக்கள் காங்கிரஸ்!


உள்ளூராட்சித் தேர்தலில் மக்கள் காங்கிரஸை ஆட்சி அதிகாரத்துக்கு வராமல் தடுக்கும் நோக்கில் சிலர் செயற்பட்ட போதும், அவற்றை முறியடித்து, மன்னார் மாவட்டத்தில் மூன்று சபைகளை கைப்பற்றியுள்ளோம் என்று அமைச்சர் றிஸாட் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னாரில் ஆஹாஸ் விடுதியில் இன்று மதியம் இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

மக்கள் காங்கிரசினை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்று பல்வேறு கூட்டுச்சதிகளும், சூழ்ச்சிகளும் இடம் பெற்ற போதும், அத்தனை சவால்களையும் முறியடித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், மன்னார் மாவட்டத்தின் மூன்று சபைகளில் ஆட்சி அதிகாரத்தை தம் வசமாக்கியுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை சீர்குலைந்திருக்கும் மக்களை, அழிவுப் பாதையிலிருந்து மீட்டெடுப்பதற்கு உதவுமாறு, எமது கட்சி விடுத்த வேண்டுகோளை ஏற்று இன, மத பேதமின்றி வாக்களித்த மக்களுக்கும், எமது வெற்றிக்கு உதவிய நடுநிலை ஊடகவியலாளர்களுக்கும் நாம் நன்றியை வெளிப்படுத்துகின்றோம்.

அத்துடன் மன்னார் பிரதேச சபையில் ஆட்சியமைக்க எமக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஈபிடிபி மற்றும் பிரதித் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட இஸ்ஸதீன், முசலிப் பிரதேச சபையில் எமது கட்சிக்கு சார்பாக வாக்களித்த கொண்டச்சி உறுப்பினர் மக்பூல், பொற்கேணி உறுப்பினர் துல்பிகார் ஆகியோருக்கும், மாந்தை மேற்கு பிரதேச சபையில் ஆட்சியமைக்க எமக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் மற்றும் பிரதித் தவிசாளர் தௌபீக் உட்பட உறுப்பினர்களுக்கும் நாம் நன்றி கூறுகின்றோம்.

எமது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் பிரதித் தவிசாளர்கள் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும், கடமையுணர்வுடனும் செயற்படுவார்கள் என்று நான் திடமாக நம்புகின்றேன்.
அத்துடன் அவர்கள்திட்டமிட்டு மக்கள் பணியாற்றுவார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கிருக்கின்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பொறுத்தவரையில் இன, மத பேதமின்றி பணியாற்றி வருவதில் நாம் முன்னுதாரணமாக செயற்பட்டிருக்கின்றோம். செயற்பட்டு வருகின்றோம்.

அந்தவகையில், மாந்தை மேற்குப் பிரதேசத்தில் இரண்டு வட்டாரங்களைக் கொண்ட, விடத்தல்தீவு கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட இருவரும் முஸ்லிம்களாக இருந்த போதும், அந்தவட்டாரத்தில் வெற்றி பெற்ற சகோதரர் சனூஸ் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து, அந்தக் கிராமத்தின் கிறிஸ்தவ வேட்பாளர் ஒருவருக்கு, நாம் முன்னர் வாக்குறுதி அளித்த படி தனது உறுப்பினர் பதவியை விட்டுக்கொடுத்துள்ளார்.

பதவிகளுக்கும், பல்வேறு சலுகைகளுக்கும் ஆசைப்படும் தற்போதைய கால கட்டத்தில் சகோதரர் சனூசின் இந்த முன் மாதிரியான நடவடிக்கை, கட்சிக்கு அவர் வழங்கிய கௌரவமாகவும், தலைவர் மீது கொண்ட அன்பையும் வெளிப்படுத்துகின்றது.

அதே போன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் கரை துறைப்பற்று பிரதேச சபையில்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்க உதவுமாறு அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர். சிவமோகன் எம்மிடம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து ஆட்சியமைக்க உதவியுள்ளோம்.

யாழ்ப்பாண மாநகர சபையில் எமக்கு கிடைத்த ஓர் ஆசனத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க உதவினோம் என அமைச்சர் தெரிவித்தார்.

குறித்த ஊடகவியலாளர் மாநாட்டில் முசலிப் பிரதேச சபைத் தவிசாளர் சுபியான், மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர், மாந்தை மேற்குப் பிரதேச சபையின் தவிசாளர் செல்லத்தம்பு, முசலிப் பிரதேச சபையின் உபதவிசாளர் ரைசுதீன் உட்பட அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ரிப்கான் பதியுதீன் மற்றும் மக்கள் காங்கிரஸின் உள்ளூராட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

சூழ்ச்சிகளைத் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றியது அ.இ.மக்கள் காங்கிரஸ்! சூழ்ச்சிகளைத் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றியது அ.இ.மக்கள் காங்கிரஸ்! Reviewed by NEWS on April 12, 2018 Rating: 5