Apr 22, 2018

ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான ம வி மு இன் பிரேரணை!வை எல் எஸ் ஹமீட்

ம வி மு ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான பிரேரணையை முன்வைத்துள்ளது. ஐ தே கட்சியைப் பொறுத்தவரை ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்பு மிகவும் குறைவு. அவ்வாறான ஒரு மாற்றுத் தலைவரும் ஐ தே கட்சிக்குள் இன்னும் இனம் காணப்படவில்லை. அதனை ரணில் விக்ரமசிங்க விரும்பப் போவதுமில்லை.

அதேநேரம் இரு அதிகாரமையத்தின் விளைவுகளையும் ஐ தே கட்சி அனுபவித்து விட்டது. எனவே, மேற்படி பிரேரணைக்கு ஐ தே க ஆதரவு வழங்குவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

மறுபுறத்தில் இன்று சிங்கள மக்களின் மகோன்னத ஆதரவைப்பெற்ற மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது. இன்னொருவரை ஜனாதிபதியாக்கி அவரின்கீழ் பிரதமராக செயற்படுவதை மகிந்த ராஜபக்ச உள்ளூர விரும்பமாட்டார்.

இந்நிலையில் அவரது அணியும் இப்பிரேரணையை ஆதரிக்கும். கூட்டு எதிர்க்கட்சி ஏற்கனவே தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறது. ஆனாலும் புதிய நிபந்தனையாக குறித்த சட்டமூலத்தில் “சட்டமூலம் நிறைவேறிய கணம் பாராளுமன்றம் கலைந்ததாகவும் கருதப்பட வேண்டும்;” என்ற சரத்தையும் உள்வாங்க வேண்டுமென்ற புதிய நிபந்தனையை விதித்துள்ளார்கள். இதற்கு ஐ தே கட்சி உடன்படாது.

மஹிந்த அணியைப் பொறுத்தவரை இது ஒரு கல்லில் இரு மாங்காய்க்கு முயற்சிப்பதாகும். இருந்தாலும் ஒரு மாங்காய்தான் கிடைக்குமாயினும் அதன்பெறுமதி கருதி அம்மாங்காயைத் தவறவிட மாட்டார்கள்.

சிறுபான்மைக் கட்சிகளின் நிலை
———————————————
ஜனாதிபதி ஆட்சிமுறை சிறுபான்மைக்கு சாதகமானது; என்ற கருத்து பொதுவாக நிலவுகின்றது. ஆனால் ஐ தே க, கூட்டு எதிரணி, ஜே வி பி போன்றவை இணைந்தால் சிறுபான்மைகள் இல்லாமல் பிரேரணையை நிறைவேற்றமுடியும். அவ்வாறான ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் சிறுபான்மைக் கட்சிகள் அதனை எவ்வாறு சந்திப்பார்கள். பரந்த கலந்துரையாடல்கள் இல்லாமல், முன் ஆயத்தங்களில் ஈடுபடாமல் சடுதியாக பாரதூரமான விடயங்களுக்கு முகம்கொடுத்து சமூகங்களை இக்கட்டுக்குள் தள்ளுகின்ற அனுபவம் சிறுபான்மைக் கட்சிகளுக்கு நிறையவே இருக்கின்றன. சிறந்த உதாரணம் இரு தேர்தல் சட்டமூலங்களுமாகும்.

பாராளுமன்றத் தேர்தல் முறைமை மாற்றப்படுமா?
================================
ஜனாதிபதி ஆட்சிமுறைமை ஒழிக்கப்படுமானால் பொதுத்தேர்தல் முறைமையும் அதனுடன் சேர்த்தோ அதன்பின்னரோ மாற்றப்பட வாய்ப்பிருக்கின்றது. கடந்த காலங்களிலும் இது பேசப்பட்டிருக்கின்றது. நாட்டில் பரவலாக அதற்கான கோசம் எழுவதைத் தவிர்க்க முடியாது.

இதற்கான காரணம் அரசின் ஸ்திரத்தன்மையாகும். விகிதாசாரத்தேர்தல் காரணமாக ஒரு தனிக்கட்சி ஆட்சியமைப்பது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சாத்தியமில்லாமல் போகின்றது. இந்த நிலைமையின் தாக்கம் ஜனாதிபதிப் பதவிமூலம் ஈடுசெய்யப்படுகின்றது; என்று பெரும்பாலான தேசிய சக்திகள் நம்புகின்றன. ( இம்முறை ஜனாதிபதியும் பிரதமரும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பது 2001ம் ஆண்டுபோன்று விசேட சூழ்நிலையாகும்). எனவே ஜனாதிபதி பதவி ஒழிக்கப்படும்போது பாராளுமன்றத் தேர்தல் மாற்றத்திற்கான கோரிக்கை வலுப்பெறும்.

இங்கு கவனிக்க வேண்டியது, ஸ்திரமான ஆட்சியை ஏற்படுத்தக்கூடிய ஒரு தேர்தல் முறை என்பது சிறுபான்மைகளுக்கெதிரான ஒரு தேர்தல் முறையாகத்தான் இருக்கும். காரணங்கள் இரண்டு; ஒன்று பேரம் பேசும் சக்தியை இழத்தல். அண்மையில் வலி வடக்கு காணிகள் விடுவிக்கப்பட்டதும் இந்த பேரம்பேசும் சக்தியின் ஓர் வெளிப்பாடாகும். (முஸ்லிம் கட்சிகளின் பேரம் பேசுதலுக்குள் இங்கு நான் செல்லவிரும்பவில்லை.)

இரண்டு; இந்த நாட்டில் எந்தவொரு தேசியக்கட்சியும் அபூர்வமான சந்தர்ப்பங்களைத்தவிர 50 வீதம் அல்லது அதற்கு மேல் வாக்குகளைப்பெற முடியாது. ஆனால் 50 வீதத்திற்கு மிகவும் குறைவான வாக்குகளைப் பெற்று 50 வீதத்திற்குமேலான ஆசனங்களை ஒரு கட்சி பெறுவதை உறுதிப்படுத்துகின்ற தேர்தல்முறைதான் ஸ்திரத்தன்மையான அரசை ஏற்படுத்தும் தேர்தல் முறையாகும். இங்கு பெற்ற வாக்கு விகிதாசாரத்திற்கு மேலதிகமாக வெற்றிபெறுகிற கட்சியால் பெறப்படுகின்ற ஆசனங்களில் கணிசமானவை முஸ்லிம் மற்றும் மலையக தமிழ் மக்களுக்குரிய ஆசனங்களாக இருக்கும்.

அதேநேரம் இந்த இரு கட்சிகளும் இணைந்துவிட்டால் சிறுபான்மை இல்லாமல் தேர்தல் முறையையும் மாற்றிவிடலாம். இது நடக்குமா? நடக்காதா? என்பது விடயம். நடக்குமானால் நமது மாற்று ஏற்பாடு என்ன? அல்லது நடக்காமல் தடுக்க ஏற்பாடு என்ன?

சர்வஜன வாக்கு
———————
பாராளுமன்றத்தேர்தல் முறையை மாற்றுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை மாத்திரமே தேவை. சர்வஜன வாக்கெடுப்புத் தேவையில்லை. எனவே, அது இந்த இரண்டு கட்சிகளின் ஆதிக்க எல்லைக்குள் இருக்கின்றது. ஆனால் ஜனாதிபதி முறைமையை நீக்க மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்புத் தேவை. இதன் சட்ட விளக்கத்தைச் சற்று ஆராய்வோம்.

இறைமை
—————
இறைமை என்பது முழுமையான அல்லது கட்டுப்பாடற்ற அதிகாரம். இந்த அதிகாரம் அரசியல் யாப்பு சரத்து மூன்றின்படி, மக்களிடம் இருக்கின்றது. அது பிரிக்கப்பட முடியாதது. இந்த இறைமை அரச அதிகாரம், அடிப்படை உரிமைகள் மற்றும் வாக்குரிமை என்பவற்றை உள்ளடக்குகின்றது.

இதன்பிரகாரம், அரச அதிகாரம் மக்களுக்குரியதும் பிரிக்க முடியாததுமாகும். அரசு மக்களின் அதிகாரத்தை ஒரு நம்பிக்கையாளர் சபை போன்றே செயற்படுத்துகின்றது. அதேநேரம் மக்களின் இந்த அதிகாரத்தை எவ்வாறு பாவிக்கவேண்டும்; என்றும் அரசியலமைப்புனூடாக கூறியிருக்கிறார்கள்.

சரத்து 4(a) இல் மக்களின் சட்டவாக்க அதிகாரத்தை பாராளுமன்றமும் சர்வஜனவாக்கினூடாக மக்களும் செயற்படுத்த வேண்டும்; என்றும்

சரத்து 4(b) மக்களின் நிறைவேற்று அதிகாரத்தை மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியினூடாக செயற்படுத்த வேண்டும்; என்றும் கூறப்பட்டிருக்கின்றது.

எனவே மக்களின் இறைமையின் ஓர் அங்கமான நிறைவேற்று அதிகாரத்தை மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியிடம் இருந்து முழுமையாக எடுப்பதாக இருந்தால் சர்வஜன வாக்கெடுப்புத் தேவை.

இந்த சர்வஜன வாக்கெடுப்பு சிறுபான்மைகளுக்கு ஒரு பலமான ஆயுதமாகும். எனவே, இவ்வாறான சூழ்நிலையில் எவ்வாறு நடந்துகொள்வது என்பது தொடர்பாக பரந்துபட்ட கலந்தாலோசனகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network