Apr 15, 2018

புனித ரமழானிற்கு முன்னர் ஊர்மட்ட ஷுராக்கள் அவசியம்போரிற்குப் பின்னரான இலங்கையில் பூதாகராமாக உருக்கொண்டு வரும் கட்டுக் கடங்காத பேரினவெறிப் பூதம் குறித்த எனது சில அவதானங்களை வஸிய்யதாக இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
அன்பிற்குரிய சகோதரர்களே,
தம்புள்ளை அளுத்கமை முதல் அம்பாறை திகனை வரை இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள காழ்ப்புணர்வு பரப்புரைகள் வன்முறைகள் குறித்து நாம் எல்லோரும் நன்றாகவே அறிந்து உணர்ந்து பட்டுத் தெரிந்து வைத்துள்ளோம்.
உடனடியாக அன்று மஹிந்த ராஜபக்ஷ அரசின் பக்கம் விரல் நீட்டினோம் இன்று ரணில் மைத்ரி அரசின் பக்கம் விரல் நீட்டுகின்றோம், அவர்களோ முன்னாள் அதிபர் மஹிந்தவின் பக்கமும் பின்னாற்களில் உயர்பதிவிகளை இலக்கு வைக்கும் பலரின் பக்கமும் விரல் நீட்டுகின்றனர்.
எமது அரசியால் வாதிகளும் தாம் அரசின் பங்காளிகள் என்பதனை எல்லாம் மறந்து "இவற்றிற்கெல்லாம் அரசு தான் வகை சொல்ல வேண்டும், பொறுப்புக் கூற வேண்டும், பாதுகாப்பு தரப்புக்கள் பிழை விட்டுள்ளன, அரசு அசமந்தமாக இருக்கிறது என்று ஆக்ரோஷமாக கண்டனக் கணைகளை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சிவில் சன்மார்க்கத் தலைமைகள் சட்ட நடவடிக்கைகள், நிவாரண உதவிகள், சமாதான சகவாழ்வு முனைப்புக்கள், உலவல ஆலோசனைகள், பாதிக்கப் பட்டோரது வாழ்வாதரங்களை மீளக் கட்டியமையமைத்தல், அரச தலைமைகளை ஆரசியல் தலைமைகளை சந்தித்தாழ் என தங்களால் இயலுமானவற்றை இயன்றவரை செய்து கொண்டிருக்கின்றனர்.
உண்மையில் நாம் உடனடியாக குற்றம் சுமத்துகின்ற அரசியல் தலைவர்கள் கட்சிகள் கூலிப் படைகள் என்பவற்றிற்குப் பின்னால் பிராந்திய தேசிய சர்வதேசிய பின்புலங்களுடன் கட்டுக்கடங்காமல் பூதாகரமாக வளர்ந்து வரும் பேரினவெறி பயங்கரவாதத்தினை அதன் சரியான பரிமாணங்களில் விளங்கிக் கொள்ளாது களநிலவரங்களை கையாளும் குறுகிய வட்டத்திற்குள் சுழன்று கொண்டிருக்கின்றோம் என்பதே உண்மையாகும்.
பாரிய சுனாமியாக பரிணாமம் பெற்று வரும் கட்டுக் கடங்காத இனவெறிப் பயங்கரவாதத்தின் அழுங்குப் பிடிக்குள் இந்த நாட்டின் முன்னாள் இந்நாள் அரசியல் தலைமைகளும் அவர்களுடன் சரணாகதி அரசியல் செய்யும் நமது அரசியல் முகவர்களும் அகப்பட்டுக் கொண்டிருக்கின்றமையே யதார்த்தமான உண்மையாகும்.
இன்று எம்மை சுனாமி போல் சூழ்ந்து வரும் கட்டுக்கடங்காத இனமதவெறி அத்துமீறல்கள் அடாவடித்தனங்கள் அன்றுபோல் சில சம்பவங்களோடு முடிந்துவிடும் மோதல்கள் அல்ல அது தேசிய பிராந்திய சர்வதேச பின்புலங்களைக் கொண்ட தெளிவான பெருந்தேசிய சங்கிலித் தொடர் நிகழ்ச்சி நிரல் என்பதனை நாம் அறிவோம்.
இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை இவ்வாறான சவால்கள் ஏற்கனவே அல்குர்ஆனிலும் ஸுன்னாஹ்விலும் உம்மத்திற்கு எதிர்வு கூறப்பட்டுள்ள சோதனைகள் என்பதனையும் அவற்றிற்கு எவ்வாறு உம்மத் முகம் கொடுக்க வேண்டும் என்ற உன்னதமான வழிகாட்டல்களும் அவ்வாறே சொல்லித்தரப்பட்டுள்ளன என்பதனையும் நாம் முதற்கண் ஈமானிய உணர்வுடன் பரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக எமது தனிப்பட்ட , குடும்ப, சமூக, தேசிய வாழ்வினை அதன் எல்லா துறைகளிலும் அரசியல், சமூக, பொருளாதார, சமய கலாசார வாழ்வியலை எல்லா மட்டங்களிலும் ஊர் மஹல்லா மட்டங்களில் இருந்து தொகுதி மாவட்ட மாகாண தேசிய மட்டங்கள் வரை தீவிரமான ஆனால் நிதானமான மீள்பரிசீலனை செய்தல் தீர்வுகளை நோக்கிய மூதலாவது படியாகும்.
நிச்சயமாக எவ்வாறு நாம் தனிநபர்களாக எமது சொந்த வாழ்வை, குடும்ப வாழ்வை, உறவு முறைகளை, செலவினங்களை, இருப்பு பாதுகாப்பை, கொடுக்கள் வாங்கல்களை, போக்குவரத்துகளை, பொறப்புக்களை கடமைகளை அன்றாடம் வாராந்தம் மாதாந்தம் வருடாந்தம் தனியாகவும் கூட்டாகவும் மீளாய்வு செய்து திட்டமட்டுக் கொள்கிறோமோ தேவையான நிபுணத்துவ ஆலோசனைகளை சேவைகளை வளங்களை பெற்றுக் கொள்கிறோமோ அவ்வாறே ஒவ்வொரு மஹல்லா ஊர் மட்டத்திலும் கூட்டாக ஷுரா முறையில் எமது சமூக வாழ்வை கூட்டுப் போறுப்புடன் திட்டமிட்டுக் கொள்வது எமக்கு இஸ்லாம் சொல்லித்தரும் அதி உன்னதமான கட்டாயமான வழி முறையாகும்.
நாம் வாழுகின்ற தேசத்தைப் பொறுத்தவரை எமது குடிசனப்பரம்பல் எம்மைச்சூழ வாழும் பெரும்பான்மை சமூகங்கள், எமது அமைவிடங்கள், எமது சன்மார்க்க, சிவில், அரசியல் தலைமைகள், எமது புத்திஜீவிகள், எமது மஸ்ஜிதுகள், எமது வளங்கள், எமது பலம் பலவீனங்கள் என்பவை பிரதைசத்திற்கு பிரதேசம் ஊருக்கு ஊர் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபட்டவைகளாகும்.
எனவே எமது அரசியல் சிவில் சன்மார்க்க தேசியத் தலைமைகளின் நெறிப்படுத்தல்களின் கீழ் ஊர் மட்டம் மாவட்ட மாகாண மட்டங்கள் முதல் தேசிய மட்டங்கள் வரை சமூகத்தின் எல்லா தரப்புகளையும் உள்வாங்குகின்ற கலந்தாலோசனை (ஷுரா) கட்டமைப்புகளை எம்மை ஒருங்கிணைக்கும் பொறிமுறைகளை நாம் ஏற்படுத்தி அந்தந்த மட்டங்களிற்கான அழகிய கட்டுக்கோப்பான தலைமைத்துவக் கட்டமைப்புகளை தோற்றுவிப்பதே தீர்வுகளை நோக்கிய அடுத்தபடி தயார் நிலையாகும்.
*மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்*
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post