எம்.வை.அமீர் -

மிழ் முஸ்லிம் மக்களை எல்லைபோட்டு பிரித்தாள்வதனை நிறுத்தி தமிழ்ப் பிரதேசங்களில் முஸ்லிம்களும்முஸ்லிம் பிரதேசங்களில் தமிழர்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கான வழியை ஏற்படுத்துவதன் மூலம்தான் இன்று இருக்கின்ற எல்லைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு கல்முனையில் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்தமுடியும். என்றும் இதனை இச்சபையில் உள்ள உறுப்பினர்கள் தங்கள் சமூகங்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டும் எனவும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.ஏ. அஸீஸ் தனது கன்னியுரையிரையின்போது தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையின் முதலாவது மாதாந்த அமர்வு கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது. இதில் சாய்ந்தமருது சார்பாக தோடம்பழச் சின்னத்தில் சுயேட்சைக்குழுவில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எம்.ஐ.ஏ. அஸீஸ் தனது உரையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்மாநகர சபைத் தேர்தலில் சாய்ந்தமருதுக் கிராமத்தில் தோடம்பழச் சின்னத்தில் சுயேட்சைக்குழுவில் வெற்றிபெற்ற உறுப்பினர்களுக்கு எந்த நிபந்தனையும் இன்றி மேயர் பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீம் எம்மிடம் பகிரங்க வேண்டுகோளைவிடுத்தார்.

 அதேபோன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸினரும் மேயர்ப் பதவியை ஏற்குமாறு பேச்சுவார்த்தை நடாத்தினர். அதேபோன்று கல்முனை மாநகர சபையில் இருக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் எம்மை மேயர் பதவியை ஏற்குமாறு கூறினர். இவர்கள் அனைவரது வேண்டுகோளையும் நாம் முற்றாக நிராகரித்துவிட்டோம். 

இக்கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டிருந்தால் இங்குள்ள மேயர் பதவி ஆசனம் எங்களது வசம் இருந்திருக்கும். ஆனால் நாங்கள் அவ்வாறு இல்லை. ஏன் என்றால் எமக்கு மேயர் பதவி முக்கியமில்லை எங்களது மக்களின் தேவை சாய்ந்தமருது நகர சபையே. இந்த விடயத்தில் எமது மக்களின் ஆணையினை மீறி ஒருபோதும் செயற்படமாட்டோம் என்றார்.

சாய்;ந்தமருது நகரசபையினைப் பெற்றெடுப்பதற்காகவே எங்களது பயணம் தொடருமே தவிர மேயர் பதவிக்கு அல்ல என்றும் தேர்தலில் சாய்ந்தமருது மக்கள் பிரிந்து சுயேட்சையாகப் போட்டியிட்டமையால் தமிழ் சமூகத்தின் விகிதாசாரம்30 வீதமாக மாற்றப்பட்டிருக்கின்றது. இது இன ஒற்றுமைக்கு வலுவான சான்றாக மாறி முஸ்லிம் சமூகத்தாலேயே தமிழ்ப்பிரதிநிதியை பிரதி மேயராகத் தெரிவுசெய்யும் அளவிற்கு இது மாற்றப்பட்டிருக்கின்றது என்றும் தெரிவித்தார்.

நாங்கள் தேர்தல் மேடைகளில் பேசினோம் சாய்;ந்தமருது பிரிந்து தனியான நகர சபை உருவாக்கப்பட்டால் முஸ்லிம்களின் பெரும்பான்மைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதனைத் தெரிவித்தோம் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் கல்முனை மாநகரம் தமிழ்ச் சமூகத்திற்கு பறிபோகவுள்ளதாக தெரிவித்திருந்தனர். ஆனால் இன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் எமது முஸ்லிம் சமூகம் மேயரைப் பெற்றுக்கொண்டது அவர்களாலேயே தமிழ்ச் சமூகத்தில் பிரதி மேயர் தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றமை இன நல்லுறவுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றது.

கல்முனை மாநகர சபை முஸ்லிம்களின் ஆதிக்கத்தில் இருந்து இனி ஒருபோதும் சகோதர சமூக்தி;ற்குச் செல்லாது என்பதை இத்தேர்தல் நிரூபித்து நிற்கின்றது.

எமது பிரதேசமானது மொழி ரீதியாகவோ அல்லது இன ரீதியாகவோ பிரிக்கப்படக்கூடாது ஆனால் நிருவாக ரீதியாகப் பிரிக்கப்பட்டால் அந்த அந்த நிருவாகப் பிரிவுகளின் அபிவிருத்தி மேலோங்குவதற்கு வாய்ப்பாக அமையும் என்பதற்காகவே எமது பயணம் தொடங்கியது இதுதான் ஜதார்த்தம் என்றும் இந்நிலையில் கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் விடயத்திற்கு நாங்கள் ஆதரவு வழங்குகின்றோம் அவர்களது கோரிக்கை நியாயமானது என்றும் தெரிவித்தார்.

இதுபோன்றுதான் சாய்ந்தமருது நகர சபை தனியாகப் பிரிக்கப்பட்டால் எங்களது பிரதேசத்தின் அபிவிருத்தியை உச்ச நிலைக்குக் கொண்டுசெல்ல முடியும்.
ஒரு நகரம் முன்னேற்றமடைவதற்கு அங்கு வாழும் சமூகங்களிடையே வேற்றுமை இருக்கக்கூடாது கல்முனை நகர் தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து வாழும் பிரதேசம். இதனை அபிவிருத்திக்கு இட்டுச்செல்வதற்கு இரண்டு சமூகமும் ஒற்றுமையாக வாழவேண்டுமே தவிர சமூகத்தை கூறுபோட்டுப் பிரித்தால் எதுவும் செய்யமுடியாது.

தென்கிழக்கின் தலைநகரமாக கல்முனை நகரம் மாறிக்கொண்டு இருக்கின்றது. தலைநகரத்தின் இயல்பு என்பது எல்லாச் சமூகமும் கலந்து வாழுவது ஆனால் கல்முனையில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் எல்லைகளையிட்டு வாழுகின்றனர். இந்த எல்லைகள் நீக்கப்பட்டு இரு சமூகமும் ஒன்றாக கலந்து வாழ்வதன் மூலம் தமது கலாசாரம் கலைபண்பாடுமத ஒழுக்கநெறி மீறப்படும் என்பது அப்பட்டமான பொய்யாகும்.

அவ்வாறென்றால் கொழும்பில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களின் அடையாளங்கள் இழக்கப்பட்டு இருக்கவேண்டும் அவ்வாறு இல்லை இந்த விடயத்தில் அவர்கள் எம்மை விட முன்னேறிக் காணப்படுகின்றனர். எனவே நாம் கேட்பது இனங்களை பிரித்து கூறுபோட்டு எல்லை போடவேண்டாம் நாம் ஒற்றுமையாக வாழ்ந்து முன்னேறுவோம்.

இங்கு பேசும் போது அனைவரும் அமைச்சர்கள்பிரதி அமைச்சர் என்றெல்லாம் விழித்தனர் ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் அமைச்சருக்கோபிரதி அமைச்சருக்கோ நன்றி சொல்லப் போவதில்லை எம்மை வழிப்படுத்தி நெறிப்படுத்திய உலமாக்களுக்கும்சுயேட்சைக்குழுத் தலைவருக்கும்மரைக்காயர்கள்வர்த்தக சங்கங்கள்பொது மக்களுக்கே நன்றி கூறுவது பொருத்தமானது.

சாய்ந்தமருது நகர சபையினைப் பெற்றுக்கொள்வதற்கு கல்முனை மாநகர சபையினர் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இன்று நடைபெற்ற அமர்வில் மேயர் உட்பட அனேகமான தமிழ் முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரும் சாய்ந்தமருதுக்கு நகர சபை தேவை என்பதனை அங்கீகரித்துப் பேசியுள்ளனர். இது சாய்ந்தமருது மக்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும். எனவே கல்முனை மாநகர சபையின் ஒத்துழைப்புடன் தனியான நகர சபையினைப் பெறுவதற்கு முன்னெடுப்போம் என்றும் தெரிவித்தார்.

Share The News

Post A Comment: