கண்ணியமும் புண்ணியமும் பூத்துக் குலுங்கும் புனித ரமழான் மாதம்,
மீண்டும் நம் மத்தியில் மலர்ந்துள்ள நிலையில், இம்மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு நோற்றுக் கொள்வதுடன் மாத்திரம் நின்றுவிடாமல், பொறுமை காத்து எந்த இடத்திலும் கெளரவத்துடன் நடந்து கொள்ளுமாறு, மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா, இலங்கை வாழ் சகல முஸ்லிம்களிடமும் பணிவான வேண்டுகோள் ஒன்றை  விடுத்துள்ளார். 

   அமைச்சர் பைஸர் முஸ்தபா, ரமழான் மாதம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

   ஏனைய மாதங்களை விட இம்மாதத்தை அல்லாஹ், நமக்கு சிறப்பாக்கித் தந்துள்ளான். நோன்பு எனும் மகத்தான கடமையை,  முஸ்லிம்கள் மீது விதியாக்கி,  முஸ்லிம்களை  கெளரவப்படுத்தியுள்ளான். 

   அதுமட்டுமல்ல, புனித அல் - குர்ஆன் இறக்கப்பட்டதின் காரணமாக, இம்மாதம் மேலும் சிறப்படைகிறது.

   முஸ்லிம்கள் இம்மாதத்தில் அல் - குர்ஆனோடு இறுக்கமாகவும், நெருக்கமாகவும் உறவு கொண்டு, அல்லாஹ்வின் அன்பையும், திருப்பொருத்தத்தையும் பெற்றுக் கொள்வதற்காக ஒரு அரிய சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொள்வதைப் போன்று, புனித ரமழான் காலத்தில் பொறுமையுடனும், சகிப்புத்தன்மையுடனும் நடந்து, அனைத்து இன மத சகோதரர்களினதும் உள்ளங்களைக் கவர்ந்து  வென்றெடுக்கும் ஒரு சிறந்த சமூகமாக தம்மை மாற்றிக் கொள்ள முன்வர வேண்டும். 

   இஸ்லாம் மார்க்கம்,  எப்பொழுதும் நல்லனவற்றைச் செய்யுமாறே போதிக்கின்றது. எனவே நாம், அந்த போதனைகளின் அடிப்படையிலேயே நடந்து கொள்ள வேண்டும். 

   புனிதம் மிக்க ரமழான் பகற் காலங்களில் பாதை ஓரங்களில் வீணே நேரத்தைக் கடத்தாமலும், இராக் காலங்களில் தராவீஹ் தொழுகை முடிந்த கையோடு, ஸஹர் நேரம் வரைக்கும் வீதிகளில் விளையாடிக் கொண்டும் காலத்தைக் கடத்துவதில் மாத்திரமல்ல, வீண் பிரச்சினைகளிலும் சிக்கித் தவிக்கும் நம்மவர்களில் எத்தனையோ பேர்களை இன்று நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம். இதனால், காவல்துறையினரின் கடமைகளுக்கும் இது போன்றவர்களினால் பங்கம் ஏற்படுவதையும் பார்க்கின்றோம். 

   அண்மையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்ட, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை, நாம் ஒருமுறை நினைத்துப் பார்க்க வேண்டும். இவ்வாறான கசப்பான சம்பவங்கள் இனிமேலும் தொடரக்கூடாது. குறிப்பாக, புனித ரமழான் காலங்களில் நாட்டின் எப்பாகத்திலும் முஸ்லிம்களுக்கு எதிரான எந்தச் சம்பவங்களும் நிகழக் கூடாது என்பதே, எனது எதிர்பார்ப்பும் வேண்டுகோளுமாகும்.

   எனவே. மலர்ந்துள்ள புனித ரமழானில் கடமை, கண்ணியம் என்பவற்றைப் பேணி, முஸ்லிம்கள் குறிப்பாக முஸ்லிம் இளைஞர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள முன்வர வேண்டும். அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும், எனது அன்பின் இனிய  "ரமழான் கரீம்" வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Share The News

Post A Comment: