May 26, 2018

நபவி மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்களிடம் அரசியல் பாடம் படிக்கவில்லை?


எம்.என்.எம்.யஸீர் அறபாத்.

இன்றைய முஸ்லிம் அரசியலிலும் தேசிய ஊடகங்களிலும் பேசுபொருளாக நபவியின் இராஜானாமாச் செய்தி ஒரு சிலரால் பேசப்பட்டு வருவதை நாம் பார்க்கலாம்.

கடந்த பொதுத்தேர்தலின் பின்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்- ஐக்கிய தேசிய முன்னணி தேர்தல்கால புரிந்துணர்வின் அடிப்படையில் ஒரு தேசியப்பட்டியல் உறுப்புரிமையை வழங்கியது. அதை ஒரு வருட காலத்திற்கென புத்தளத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் புத்தளத்தில் போட்டியிட்டு சொற்ப வாக்குகளால் தோல்வி கண்ட புத்தளத்தைச்சேர்ந்த மூத்த அரசியல்வாதியான நபவி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

குறித்த தேசியப்பட்டியல் வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் ஜம்இய்யதுல் உலமா சபையினர் முன்னிலையில் தான் ஒரு வருடத்தில் இராஜினாமா செய்வதாக வாகுறுதியளித்தே தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரானார்.

வாக்குதியளித்த ஒரு வருடம் தாண்டியும் அப்பதவியில் தொடர்ந்த நபவி, அம்பாறையில் அகில மக்கள் காங்கிரஸ் மீது ஏற்பட்டு வரும் அதிருப்தி நிலையினை சமாளிக்குமுகமாக கட்சித்தலைவரின் அழுத்தத்தினால் தற்போது இராஜனாமாச் செய்துள்ளார்.

இந்த இராஜினாமா சம்பவத்தை தூக்கிப்பிடித்துக் கொண்டு அல்லக்கைகள் சிலர் முஸ்லிம் காங்கிரஸையும் அதன் தலைமையையும் வசைபாட ஆரம்பித்திருப்பதை சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் காணக்கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறு விமர்சனம் செய்கின்றவர்கள் ஒரு கட்சியின் தேசியப்பட்டியல் மாத்திரம் அமானிதமில்லை. அக்கட்சியூடாகப் பெற்றுக் கொள்ளும் அரசியல் அந்தஸ்தும் (பாராளுமன்ற உறுப்புரிமை) அந்தக் கட்சிக்குரிய அமானிதம் தான் என்பதைப்புரிந்து கொண்டு, மக்கள் காங்கிரஸ் உருவான வரலாற்றை சற்று திரும்பிப்பார்ப்பது சிறப்பாக இருக்கும்.

வன்னியில் மர்ஹும் நூர்தீன் மசூர் இருக்கும் போதே மக்கள் காங்கிரஸ் தலைவராக இன்றிருக்கும் றிசாட் பதூர்தீன் அவர்களை நம்பி தேர்தல் கேட்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் வாய்ப்புக்கொடுத்தார்.

அவ்வாறு கிடைத்த வாய்ப்பில் வெற்றி பெற்றவர் செய்த கைமாறு என்ன? தலைவரின் மானத்தோடு விளையாடி பதவி ஆசை பிடித்த ஒரு சிலரைக்கூட்டிக் கொண்டு அன்றைய ஆட்சியாளர்களிடம் சரணடைந்து, இன்று வரைக்கும் இந்தக்கட்சியை அழிப்பதற்காக சதி செய்து கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது. இவர்களிடத்திலா முன்மாதிரியை எதிர்பார்க்க முடியும்.

மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் அதே கைங்கரியத்தை செய்து முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியில் செய்யக்கூடாத சத்தியங்களைச் செய்து வெற்றி பெற்று, பதவியாசை பிடித்து அவருடன் வெளியேறிவர் தான்.

அது மாத்திரமா? கடந்த ஆட்சியில் தங்களின் வெற்றிக்காகப் பாடுபடுவேன் என்று கூறி, அதற்குப்பகரமாக மர்ஹும் அஸ்வர் ஹாஜியாரின் தேசியப்பட்டியலையும், வாகன போமிட்டையும் வாங்கிக் கொண்டு கட்சி மாறியவர்

இச்செயற்பாடு அந்நிய சமூகத்திற்கு முன் பிரதேசத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியதையும், முஸ்லிம் சமூகம் தொடர்பாக தவறான பார்வையைத் தோற்றுவித்தையும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் முனாபிக் என்று தேர்தல் மேடைகளில் பகிரங்கமாகப் பேசியதையும் நாம் மறக்கவில்லை. இப்படிப்பட்டவர்களிடம், இவர்கள் உருவாகிய கட்சியிடமா? முன்மாதிரியான அரசியலைக் கற்றுக் கொள்ள முடியும்? .

தற்போதைய அரசியல் அரங்கில் ஊழல்வாதியென பரவலாக, பகிரங்கமாகப் பேசப்படும் முஸ்லிம் தலைவர் யார்? என்ற கேள்வியைக்கேட்டால், அவர்களின் தேசியத்தலைமையின் இலட்சணம் புரியும். இப்படிப்பட்டவர்களிடமா அரசியல் இலட்சணம், முன்மாதிரியைக் கற்றுக் கொள்ள முடியும்?

முஸ்லிம் காங்கிரஸும், அதன் தலைவரும் என்ன செய்கிறார்கள் எனப்பார்த்து செயற்படுகிறார் றிசாட் பதூர்தீன் அவர்கள். ஒரு வருடத்தில் இராஜனாமாச் செய்ய வேண்டிய நபவி, முஸ்லிம் காங்கிரஸ் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சல்மான் அவர்கள் இராஜனாமாச் செய்வதை, அதை தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் யாருக்கு கொடுப்பார் எனப்பார்த்திருந்து, தனது வாக்குறுதியான அட்டாளைச்சேனைக்கு கொடுத்த பின்னர், மக்கள் காங்கிரஸ் தலைவர் சிலருக்கு தேசியப்பட்டியல் தருவதாகச் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றச்சொல்லி கொடுத்த அழுத்தம் காரணமாக நபவி இராஜனாமாச் செய்திருக்கிறார். இதை அரசியல் நாகரீகம், தலைமைத்துவக்கட்டுப்பாடு, முன்மாதிரி என்றெல்லாம் வாய் கிழியக் கத்த வெட்கமில்லையா?

நபவியைப் பொறுத்தளவில் அவர் நேர்மையாகக் கேட்டவுடன் கொடுத்திருக்கிறார். இது மக்கள் காங்கிரஸிலிருந்து கற்றுக் கொண்ட ஒழுக்கமல்ல. மாறாக, அவரின் நீண்ட கால அரசியலின் முதிர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.

எனவே, முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றில் பெரும் தலைவர் தொடர்க்கம் இன்றைய தலைவர் வரை கட்சியின் அரசியல் அதிகாரத்தைப்பெற்று, கட்சிக்குத்துரோகம் செய்தவர்கள் இன்று கட்சித் தலைவரையும் கட்சியையும் விமர்சிக்கிறார்கள்.

அதே போலே கட்சிக்கும், தலைமைக்கும் கட்டுப்பட்டு நடக்கின்றவர்களும் முஸ்லிம் காங்கிரஸில் இருக்கிறார்கள் என்பதை விமர்சிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network