சாலை விபத்துகள் காரணங்களும் இஸ்லாத்தின் தீர்வுகளும்!
بسم الله الرحمن الرحيم

"இஸ்லாமிய இளைஞர்களைக் கவனத்தில் கொண்டு எழுதப்பட்ட ஆக்கம்

வெளியில் சென்றால் வீட்டிற்கு திரும்புவது நிச்சயமில்லாததாகி விட்டது” என்று சொல்லுமளவிற்கு இன்று சாலை விபத்துகள் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. நாளுக்கு நாள் வாகனங்களும் பெருகிக்கொண்டே செல்கின்றன.

மக்களின் அன்றாடத் தேவைகளில் வாகனமும் ஒன்றாகிவிட்டது. அரசும் அதிகாரிகளும் சாலை விபத்துகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டங்களை மேற்கொண்டாலும் அது சம்பந்தமான பிரசுரங்களை விநியோகித்தாலும் சாலை விபத்துகளை கட்டுப்படுத்த முடியவில்லை.

சாலை விபத்துக்களுக்கான காரணங்களை கண்டறிந்து அதற்கான இஸ்லாம் தரும் தீர்வுகளை நடைமுறைப்படுத்தாவிட்டால் எவ்வளவு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் சாலை விபத்துகளை தடுக்கமுடியாது.

விபத்துகளுக்கான_காரணங்கள் :

1. தரமற்ற சாலைகள்:

குண்டும் குழியுமாக மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக வாகன ஓட்டிகளுக்கு மரணக்குழிகளாக காட்சியளிக்கின்றன. மக்களின் ஓட்டுக்களிலும் வரிப்பணங்களிலும் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களும் அமைச்சர்களும் அதிகாரிகளுமே இதற்கு முழு முதற்காரணங்களாகும். அரசாங்கம் சாலைகளுக்கென்று ஒதுக்குகின்ற அற்ப பணங்களை இடையில் இருக்கின்ற அதிகாரிகள் ஊழல் செய்து தரமற்ற சாலைகளை போட்டு குடிமக்களின் உயிர்களை பறித்து விடுகின்றனர். ஆட்சியாளர்களின் மெத்தெனப்போக்கும் பொடுபோக்குத்தனமும் குடிமக்களைக் குறித்து எந்தவிதமான கவலையும் கொள்ளாததுமே விபத்துகளுக்கு காரணமாக அமைந்துவிடுகின்றன.
மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை கூறும்போது 1.3 சதவீதம் மோசமான சாலைகளே விபத்துகளுக்கு காரணம் என்று கூறுகிறது.

இஸ்லாம் கூறுவது போல ஆட்சியாளர்கள் அமைந்தால் இதுபோன்ற சாலை விபத்துகளை குறைக்க முடியும். அதுபோன்ற ஆட்சியாளர்களை இஸ்லாம் உலகிற்கு வழங்கியிருக்கிறது. குடிமக்களின் பொறுப்புகளை உணர்ந்து ஆட்சியாளர்கள் செயல்பட்டிருக்கிறார்கள்.

“உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப்படுவீர்கள். தலைவர் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப்படுவார்கள்… என நபியவர்கள் கூறினார்கள் (புகாரி 893)

குடிமக்களில் சிலரை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் ஓர் அடியாருக்குக் கொடுக்க அவர் அந்த மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிலையில் இறந்துபோனால் அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தை தடை செய்யாமல் இருப்பதில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

ஆட்சியாளர்கள் குடிமக்களின் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு கலீஃபா உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் நடந்த சம்பவமொன்று:
கடைத்தெருவில் வயோதிகர் ஒருவர் பிச்சை எடுப்பதை கண்ட கலீஃபா உமர்(ரலி) அவர்கள் அவரின் கரங்களைப் பிடித்து பிச்சை எடுக்கும் காரணத்தை கேட்க எனக்கு தளர்ச்சி ஏற்பட்டுவிட்டது. என் அடிப்படைத் தேவைகளுக்குக்கூட உழைக்க சக்தியில்லை. என் தேவைகளை நிறைவு செய்யவே இவ்வாறு பிச்சை எடுக்கவேண்டிய சூழ்நிலை எனக்கு ஏற்பட்டிருக்கிறது என்றார் அம்முதியவர். அதற்கு கலீஃபாவின் பதில் எவ்வாறிருந்தது என்பதை கவனிக்க வேணடும் “முதியவரே நாங்கள் தங்களிடம் நியாயமாக நடக்கவில்லை. தாங்கள் வாலிபராக உழைத்த காலங்களில் தங்களிடமிருந்து பாதுகாப்பு வரியை வசூலித்த நாங்கள் தாங்கள் உழைக்கமுடியாத காலங்களில் கவனிக்காமல் விட்டுவிட்டோமே? எனக் கண்ணீர் மல்கக்கூறி அவர் இறக்கும் காலம் வரை அவருக்கும் அவரைச் சார்ந்து வாழ்வோருக்கும் பொதுநிதியிலிருந்து கொடுக்கும்படி ஆணையிட்டார்கள்.

விபத்துகளில் சிக்கி உயிர் இழக்கும் இத்தகைய குடிமக்களின் உயிர்களைக் குறித்து அரசியல்வாதிகளுக்கு எள்ளின் முனையளவும் கவலையில்லை.

யூப்ரடீஸ் நதிக்கரையில் ஒரு ஆடு அநியாயமாக இறந்தாலும் அதற்காக இந்த உமர் இறைவனால் விசாரிக்கப்படுவான் என கலீஃபா உமர்(ரலி) கூறினார்கள். அவர்கள் ஆண்டு கொண்டிருந்த மதீனாவிற்கும் இராக்கில் அமைந்த யூப்ரடீஸ் நதிக்கும் பல நூறு மைற்கள் இருந்தாலும் ஒரு ஆட்டின் உயிருக்கு எந்தளவு மதிப்பளித்தார்கள் என்பதற்கு இது ஒரு மிகப்பெரும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ஆனால் இன்றைய ஆட்சியாளர்களோ குடிமக்களின் உயிர்களை அற்பமாக நினைக்கின்றனர். இப்படி வரலாற்றுச் சான்றுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்

2. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது:

உலகத்தில் 44 முதல் 67 சதவீதம் வரையிலான சாலை விபத்து இறப்புகளுக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டுவதே முக்கிய காரணம் என்ற அதிர்ச்சித் தகவலை உலக சுகாதார நிறுவனம் ஓர் ஆய்வில் தெரிவித்திருக்கிறது.

அரசே முன்னின்று சாராயக்கடைகளையும் மதுக்கடைகளையும் திறந்து விட்டிருக்கிறது. டாஸ்மாக்கினால் அரசுக்கு வருடந்தோறும் பண்டிகைக் காலங்களிலும் ஏனைய நாட்களிலும் பல கோடிக்கணக்கான வருமானம் வருகிறது. அரசே இதை ஒழித்தால்தான் மதுவினால் ஏற்படும் விபத்துகளை தடுக்கமுடியும்.

மது அருந்தியவனுக்கு சாட்டையடி கொடுங்கள். மீண்டும் மீண்டும் அருந்தினால் சாட்டையடி கொடுங்கள். மூன்றாவதாகவோ நான்காவதாகவோ அருந்தினால் கொன்று விடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத் ஹாகிம்)

இதுபோன்ற சட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் அரசாங்கம் கொண்டுவந்தால் மதுவினால் ஏற்படும் விபத்துகளை தடுக்கமுடியும்.

3.கட்டுப்பாடில்லாத அசுர வேகம்:

அசுர வேகத்தினால் பலர் தங்களின் உயிர்களை பறிகொடுத்து விடுகின்றனர். இதற்கு இஸ்லாம் அழகானதொரு தீர்வைத் தருகின்றது. நிதானம் மிக முக்கியம் அவசரம் கூடாது.

அரஃபா தினத்தில் நபி(ஸல்) அவர்களுடன் நான் திரும்பும்போது, நபி(ஸல்) அவர்கள் தமக்குப் பின்னால் ஒட்டகத்தை அடித்து விரட்டக் கூடிய கடும் (அதட்டல்) சப்தத்தையும் ஒட்டகம் அலறுவதையும் செவியுற்றார்கள். உடனே தம் சாட்டையால் சைகை செய்து, மக்களே! அமைதியைக் கடைப்பிடியுங்கள்! நன்மையென்பது விரைவதிலோ ஒட்டகங்களை குதிரைகளை விரட்டுவதிலோ இல்லை” எனக் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள். (புகாரி 1671)

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் தொழுது கொண்டிருக்கையில் (அவர்கள்) சில சப்தத்தை செவியுற்றனர். தொழுகையை முடித்துக்கொண்டு உங்களது விஷயம் என்ன? (ஏன் சப்தமிட்டீர்கள்) எனக் கேட்டார்கள். (அதற்கவர்கள்) தொழுகைக்கு அவசரமாக வந்தோம் என்றனர். அதைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்வாறு செய்யாதீர்கள். தொழுகைக்காக நீங்கள் வந்தால் அவசியம் அமைதியாக வாருங்கள். எதைப் பெற்றுக் கொண்டீர்களோ அதை (இமாமுடன் சேர்த்து) தொழுங்கள். எது உங்களுக்கு முந்திவிட்டதோ அதை (தொடர்ந்து) நிறைவு செய்யுங்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் ஹதீஸ் எண் : 244)

ஆக அவசரம் கூட விபத்துகளுக்கு காரணமாகி விடுகின்றது. நிதானத்தைக் கடைபிடிப்பது மிகமுக்கியமானது. இதைக் கடைபிடித்தால் அவசரத்தினால் ஏற்படும் விபத்துகளை தடுக்கமுடியும்.

4. நீயா? நானா? என்ற போட்டி மனப்பான்மை:

இதுவும் விபத்துகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. வாகனங்களை முந்துவதில் காட்டுகின்ற ஆர்வத்தை நல்லகாரியங்களில் காட்ட முனையவேண்டும்.
நபித்தோழர்கள் தோழியர்கள் வணக்கவழிபாடுகளில், செலவிடுவதில், போர்களில் கலந்துகொள்வதில் போட்டி போட்டிருக்கின்றார்கள்.

அவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள், நல்லதை(ச் செய்ய) ஏவுகிறார்கள் தீமையை விட்டும் விலக்குகிறார்கள். மேலும் நன்மை செய்வதற்கு விரைகின்றனர். இவர்களே ஸாலிஹான (நல்லடியார்களில்) நின்றுமுள்ளவர்கள். (அல்குர்ஆன்: 3:114)

நற்செயல்களின்பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள் (அல்குர்ஆன்: 2:148)

5. ஆணவம்:

பொறுமையான நல்ல சாதுவான மனிதர்கள் கூட வாகனங்கள் ஓட்டும்போது தங்கள் இயல்பிற்கு மாற்றமாக நடந்துகொள்கிறார்கள் என சர்வதேச ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆணவமும், அகம்பாவமும் கூடவே வந்துவிடுகின்றன. பின்னால் வரும் வாகன ஓட்டிகள் ஒலி எழுப்பினாலோ அல்லது நம்மை ஓவர்டேக் செய்தாலோ நாம் நம் இயல்பை மறந்து விடுகிறோம். அங்கே ஆணவம் மேலோங்குகிறது. இதுவே விபத்துக்களுக்கும் காரணமாக அமைந்து விடுகிறது.

மேலும் நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம், (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்து விட முடியாது, மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது. (அல்குர்ஆன்: 17:37)

ஒருவனுக்கு அவனுடைய ஆடை மமதையை ஏற்படுத்தியது. பெருமையுடன் நடந்ததினால் அல்லாஹ் அவனை பூமியில் புதையுண்டு போகச்செய்தான். அவன் யுகமுடிவு நாள் வரை பூமியில் சென்றுகொண்டே இருக்கிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

இன்னும் ஃபிர்அவ்ன் சொன்னான்: “பிரமுகர்களே! என்னைத் தவிர உங்களுக்கு வேறொரு நாயன் இருக்கின்றான் என்பதாக நான் அறியவில்லை. ஆதலின் ஹாமானே! களிமண் மீது எனக்காகத் தீயை மூட்டி (செங்கற்கள் செய்து) பிறகு எனக்காக ஓர் (உயரமான) மாளிகையைக் கட்டுவாயாக! (அதன் மேல் ஏறி) நான் மூஸாவின் இறைவனைப்
பார்க்க வேண்டும் – மேலும் நிச்சயமாக நான் இவரைப் பொய்யர்களின் நின்றுமுள்ளவர்” என்றே கூறுகிறேன். மேலும் அவனுடன் அவனுடைய படைகளும் பூமியில் நியாயமின்றிப் பெருமை அடித்துக் கொண்டனர். மேலும் அவர்கள் நம்மிடம் நிச்சயமாகத் திரும்பக் கொண்டு வரப்பட மாட்டார்கள் என்றும் எண்ணிக் கொண்டார்கள். ஆகையால் நாம் அவனையும் அவன் படைகளையும் பிடித்தோம், பிறகு அவர்களைக் கடலில் (மூழ்கி விடுமாறு) எறிந்து விட்டோம், ஆகவே அக்கிரமக்காரர்களின் முடிவு என்ன ஆயிற்றென்று (நபியே)நீர் கவனித்துக் கொள்ளும். (அல்குர்ஆன் 28:38,39,40)

ஃபிர்அவ்ன் ஆணவம் கொண்ட காரணத்தினால் அவனை யுகமுடிவு நாள்வரை உள்ள மக்களுக்கு படிப்பினையாக ஆக்கி வைத்திருக்கிறான். அவன் உடல் இன்றுவரை எகிப்தில் உள்ள ஒரு பிரபலமான அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உன் உடலைப் பாதுகாப்போம், நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப் பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (என்று அவனிடம் கூறப்பட்டது). (அல்குர்ஆன்:10:92)

பெருமை எனது மேலாடை கண்ணியம் எனது கீலாடை இவற்றில் ஏதாவதொன்றில் என்னோடு போட்டிபோடுகிறவனை நரகில் போட்டுவிடுவேன் என அல்லாஹ் கூறியதாக நபியவர்கள் கூறனார்கள். (அபூதாவூத்)

ஆக பெருமை கொண்டு வாகனம் ஓட்டுவதினால் உயிரை இழக்கவேண்டியது வருமே ஒழிய எதையும் சாதித்து விடமுடியாது.

6.கைப்பேசி:

மக்களின் அத்தியவாசியத் தேவைகளில் முதலிடம் வகிப்பது கைப்பேசி தான். மக்களின் மூன்றாவது கரம் என்று சொல்லுமளவிற்கு செல்போன் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் செல்போன்களே அவர்களின் உயிர்களையும் பறித்துவிடுகிறது. செல்போன்களில் பேசிக்கொண்டே ரோட்டைக் கடக்கும்போது இரயில்வே லைனை கடக்கும்போது வாகனங்கள் ஓட்டும்போது சாலைவிபத்துகள் நடக்கின்றன இதற்கு இன்னொரு காரணம் கவனமின்மை.

இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள், இன்னும் நன்மை செய்யுங்கள். (அல்குர்ஆன் 2:195)

ஈமான் கொண்டவர்களே! (வழி தவறிவிடாமல் நீங்களே) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன்:5:105)

தொழுகை போர் போன்ற எல்லாக் காரியங்களிலும் கவனத்தை மேற்காள்ளும்படி இஸ்லாம் வலியுறுத்துகிறது.

7. பெற்றோர்கள்:

விலை உயர்ந்த வாகனங்களை தங்களின் பிள்ளைகளுக்கு வாங்கிக்கொடுப்பதும் இல்லையெனில் பிள்ளைகளே பெற்றோர்களை மிரட்டுவதும் சர்வசாதாரணமாக நடந்துகொண்டிருக்கிறது. சாலை விபத்துகளுக்கு பெற்றோர்களும் ஒரு காரணமாக அமைந்துவிடுகின்றனர். தங்களின் செல்லப்பிள்ளைகளுக்கு கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கும் பழக்கம் அவர்களின் உயிர்களை பறித்து விடுகிறது.

கடந்த ஆண்டின் கணக்கின்படி சாலைவிபத்துகளில் அதிகம் பலியானவர்கள் இளைஞர்களே என்பது வேதனைக்குரிய விசயமாக இருக்கின்றது. 15 வயதிற்கும் 29 வயதிற்கும் இடைப்பட்டோரின் அகால மரணத்திற்கு முழுமுதற்காரணமே சாலைவிபத்துகள் தான் என எச்சரிகிறது உலக சுகாதார நிறுவனம்.

ஓர் ஆண் மகன் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியாவான். தன் பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி அவனும் கேட்கப்படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளியாவாள். அவள் தன்னுடைய பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவாள். (புகாரி 893)

பிள்ளைகளுக்கு இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள உபதேசங்களையும் இன்னபிற இஸ்லாமிய போதனைகளையும் பெற்றோர்கள் போதிக்கவேண்டும்.

8. மக்களின் சாபம்:

வாகனங்களில் அதிகம் சப்தம் எழுப்பிக்கொண்டும், மற்ற வாகனஓட்டிகளை அச்சுறுத்தும் வண்ணமும் பொதுமக்களை அச்சுறுத்திக்கொண்டும் வாகனம் ஓட்டுவது இன்று பிரபலமாகப் பார்க்கப்படுகிறது.

இறைநம்பிக்கையாளன் யாரெனில் மற்ற மக்களின் உயிர்களுக்கும் பொருளாதாரத்திற்கும் பாதுகாப்பளிப்பவனே மூஃமினாவான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ, நஸாயீ)

“அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் மக்களுக்கும் நன்மையை நாடுவதே மார்க்கம்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

மூன்று பிரார்த்தனைகள் இறைவனிடத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பெற்றோரின் பிரார்த்தனை, பயணியின் பிரார்த்தனை, அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத், திர்மிதீ, இப்னு ஹிப்பான்)

அநீதியிழைக்கப்பட்வனின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படு;ம் அவன் பாவியாக இருந்தாலும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.முஸன்னஃப் அபீஷபா

“பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார். (புகாரி 10)

9.பிரார்த்தனை இன்மை:

வாகனங்களில் பயணிக்கும்போது இறை நினைவுடன் பயணிக்கவேண்டும். இஸ்லாம் காட்டித்தந்த பிரார்த்தனைகளை புரியும்போது இறைப்பாதுகாப்பு என்றும் நமக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும்.

أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- كَانَ إِذَا اسْتَوَى عَلَى بَعِيرِهِ خَارِجًا إِلَى سَفَرٍ كَبَّرَ ثَلاَثًا ثُمَّ قَالَسُبْحَانَ الَّذِى سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِى سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِى السَّفَرِ وَالْخَلِيفَةُ فِى الأَهْلِ اللَّهُمَّ إِنِّى أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِى الْمَالِ وَالأَهْلِ

பொருள்: அல்லாஹ் மிகப்பெரியவன். அல்லாஹ் மிகப்பெரியவன். அல்லாஹ் மிகப்பெரியவன். எங்களுக்கு இதனை வசப்படுத்தித் தந்தவனாகிய அவன் மிகப் பரிசுத்தமானவன். (இதன் மீது பிரயாணிக்க அவன் வசப்படுத்தி தந்திராவிட்டால்) இதற்கு நாங்கள் சக்தி பெற்றவர்களாக ஆகியிருக்கமாட்டோம். மேலும் நிச்சயமாக நாம நம்முடைய இரட்சகனிடமே திரும்பக்கூடியவர்கள். யாஅல்லாஹ்! நிச்சயமாக நாங்கள் நன்மை மற்றும் பயபக்தி நீ பொருந்திக்கொள்ளக்கூடிய செயல்களை எங்களுடைய பயணத்தில் உன்னிடம் நாங்கள் கேட்கிறோம். யாஅல்லாஹ்! இந்த எங்களுடைய பயணத்தை எங்களுக்கு எளிதாக்கித் தருவாயாக. அதன் தூரத்தை சுருக்கியும் தருவாயாக. யா அல்லாஹ்! நீதான் இப்பயணத்தில் தோழன். என் குடும்பத்தினரின் என் பிரதிநிதி. யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் பயணத்தின் களைப்புகளிலிருந்தும் (ஆபத்துகள் ஏற்பட்டு) தோற்றம் மாறுவதிலிருந்தும், செல்வம் மற்றும் குடும்பத்தில் தீய விளைவுகள் ஆகியவற்றிலிருந்தும் உன்னைக்கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன். (முஸ்லிம்)

10. படைத்தவனின் நாட்டம்:

இவை எல்லாவற்றிற்கும் மேலாக படைத்தவனின் நாட்டம் ஒன்று இருக்கிறது. விபத்துகளுக்கு மட்டுமல்ல நடக்கின்ற அனைத்து நிகழ்வுகளும் இறைவனின் நாட்டப்படியே நடக்கின்றன.

நிகழும் நிகழ்ச்சிகளெல்லாம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டேயல்லாமல் (வேறு) இல்லை, மேலும் எவர் அல்ல்லாஹ்வின் மீது ஈமான் கொள்கிறாரோ அவருடைய இருதயத்தை அவன் நேர்வழியில் செலுத்துகிறான் – அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். (அல்குர்ஆன்: 64:11)

(நபியே!) அல்லாஹ் உமக்கு ஏதாவதொரு துன்பத்தை ஏற்படுத்திவிட்டால் அவனைத் தவிர (வேறு யாரும்) அதை நீக்க முடியாது. இன்னும் அவன் ஒரு நன்மையை உண்டாக்கி விட்டால் (அதை எவரும் தடுக்க முடியாது.) அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன்: 6:17)

அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது, அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை, தன் அடியார்களில் அவர் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான் – அவன் மிகவும் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான். (அல்குர்ஆன்: 10:107)

சாலை விதிகளை கடைபிடியாமை,முறையாக பயிற்சி பெறாத வாகனஓட்டிகள், தூக்கமின்மை ,உடல் சோர்வு போன்ற காரணங்களாலும் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இவைகளை அரசு தீவிரமாக கண்காணித்து இஸ்லாம் தரும் தீர்வுகளை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே சாலைவிபத்துகளை கட்டுக்குள் கொண்டுவரமுடியும் இன்ஷா அல்லாஹ்

ஹமீட்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...