May 11, 2018

இவ்வாறு மேற்கொண்டால் கூட்டுறவுத்துறையை வினைத்திறனுடையதாக மாற்றலாம்
-சுஐப் எம்.காசிம்-

மத்திய அரசும், மாகாண சபையும் இணைந்து பணியாற்றுவதன் மூலமே, கூட்டுறவுத்துறையை வினைத்திறன் உள்ளதாக மாற்ற முடியுமெனவும், இந்தத் துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், தமது அமைச்சு இந்தத் துறையை மேம்படுத்த அனைத்து விதமான பங்களிப்புக்களையும் நல்கும் எனவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கூட்டுறவுத் துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் மற்றும் அதனைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை ஆராயும் கலந்துரையாடல், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் எஸ்.எல்.நஸீர் தலைமையில், கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற போது, பிரதம அதிதியாக அமைச்சர் கலந்துகொண்டார்.

மாகாண கூட்டுறவு ஆணையாளர்கள், அதிகாரிகள் பங்கேற்ற இந்த நிகழ்வில் நாடளாவிய ரீதியில் இயங்கும் கூட்டுறவுச் சங்கங்களினது தலைவர்கள், இயக்குனர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்று, கூட்டுறவுத் துறையில் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும், அதன் மூலம் பாவனையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களையும் எடுத்துரைத்தனர்.

இவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னர், அமைச்சர் இங்கு கூறியதாவது,

சதொச நிறுவனம் போன்று கூட்டுறவுச் சங்கங்களிலும் அத்தியாவசியப் பொருட்களை குறைந்த விலையிலும், ஏக விலையிலும் வழங்குவதற்கான திட்டங்களை முன்னெடுப்போம். சதொச நிறுவனங்களை கணணிமயப்படுத்தியது போன்று, கூட்டுறவுச் சங்கங்களையும் கணணிமயப்படுத்தும் திட்டத்தை பரிசீலனை செய்து வருகின்றோம்.

அந்தவகையில், மத்திய அரசும், மாகாண அரசும் இணைந்து பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது தேவையாக இருக்கின்றது. அதுமட்டுமின்றி கடந்த காலங்களில் கூட்டுறவுத் துறையில் பல்வேறு சீர்கேடுகளுக்குக் காரணமானவர்கள், இனியும் அந்தத் துறையை முன்னேற்றுவதற்கு தடைக்கல்லாக இராமல் நல்ல முயற்சிகளுக்கு வழிவிட வேண்டும்.

எனது அமைச்சின் கீழே உள்ள தேசிய வடிவமைப்பு நிலையம், தேசிய அருங்கலைகள் பேரவை, புடவைத் திணைக்களம், நெடா (NEDA) மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபை ஆகியவற்றின் துணையுடன் கூட்டுறவுத் துறையை முன்னேற்ற முடியும்.

கூட்டுறவுச் சங்கங்கள், அந்தந்த பிரதேசங்களில் உள்ள வளங்களையும், வாய்ப்புக்களையும் அடிப்படையாகக் கொண்டு, இரண்டு மாதங்களுக்குள்ளே ஒரு முன்மொழிவை சமர்ப்பித்தால், ஒவ்வொரு கூட்டுறவுச் சங்கத்துக்கும் கைத்தொழில் துறையை விருத்தி செய்வதற்காக, கைத்தொழிற்சாலை ஒன்றை அமைத்துக் கொடுப்பதற்காக நாம் நடவடிக்கை எடுப்போம்.

வடக்கு, கிழக்கிலே கடந்த காலங்களிலே போரின் உக்கிரத்தினால் கூட்டுறவுத் துறை முற்றாக செயலிழந்தும், ஒர் பகுதியாகச் செயலிழந்தும் போன வரலாறுகள் இருக்கின்றன. போர்க்கால கெடுபிடிகளினால் கூட்டுறவுச் சங்கத்தின் வளங்களும், மூலதனமும் அபகரிக்கப்பட்டதனால் கூட்டுறவுத் துறை சீரழிந்ததோடு, ஊழியர்களும் நுகர்வோர்களும் பாதிக்கப்பட்டனர்.

கூட்டுறவுத்துறையை கட்டியெழுப்ப வடக்கு, கிழக்கில் விஷேட செயற்திட்டங்களும் எம்மிடம் உண்டு. இந்த நிகழ்விலே உங்களால் வழங்கப்பட்ட ஆலோசனைகளையும், கருத்துக்களையும் அடிப்படையாகக் கொண்டு இந்தத் துறையை வலுப்படுத்துவோம்.

தேசிய கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தை வலுப்படுத்துவதன் ஊடாக கூட்டுறவுத் துறையை பலப்படுத்த முடியும். அந்தவகையில், இந்தத் திணைக்களத்தில் நிருவாக மாவட்டங்களை செய்து திறம்பட பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிவு செய்துள்ளோம்.

கூட்டுறவுத் துறையில் தொடர்பாடலை முன்னெடுப்பதற்காகவே இந்தத் துறையை கணணிமயப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதன் மூலம் இதன் செயற்பாட்டை விருத்தியுள்ளதாக மாற்றலாம். கிராமிய கூட்டுறவு வங்கிகளை தேசிய ரீதியில் அங்கீகாரம் உள்ளதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் மத்திய அரசின் உதவியுடன் நாம் செயற்படுத்துவோம்.
கூட்டுறவாளர்களிடம் பேதமைகள் இருந்தால், சவால்களை நாங்கள் வெற்றிகொள்ள முடியாது போய்விடும். எனவே, இத்துறையில் பணியாற்றுபவர்களிடம் ஒற்றுமையும், பிணைப்பும் ஏற்பட வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்த விழாவில் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் எஸ்.எல்.நஸீர் மற்றும் கூட்டுறவுத் துறை சார்ந்த வல்லுனர்களும். அதிகாரிகளும் உரையாற்றினர்.
       


SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network