அரசியல் கட்சியொன்றின் ஏமாற்றத்தின் பின் தனவந்தர்களால் நூலகத்திற்கு உபகரணங்கள் கையளிப்பு(எம்.எஸ்.எம். ஸாகிர்)

2009ஆம் ஆண்டு பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் முழுமையான பெயரில் வறிய பெற்றோர்களின் பிள்ளைகளின் நலன்கருதி புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கமு/கமு/.லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயம் தற்போது தரம் 8 வரை சுமார் 450 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.பாடசாலையொன்றில் ஆரம்பப்பிரிவு மற்றும் இடைநிலைப்பிரிவு மாணவர்களின் கற்றல் விருத்திக்கு ஆதாரமாக அமையும் ஒரு முக்கிய கூறு நூலகமாகும். இந்நூலகத்தினை அபிவிருத்தி செய்யப்படல்வேண்டும் என்ற நோக்கில் இருந்தபோது கடந்த 2016 ஆம் ஆண்டு அம்பாரை மாவட்டத்தில் புதிதாக தமது அதிகாரத்தினை காலூன்றச்செய்த கட்சியின் முக்கியஸ்தர்கள் அக்கட்சியின் இப்தார் நிகழ்வொன்றினை மிகப் பிரமாண்டமான முறையில் செய்வதற்காக எமது பாடசாலை மைதானத்தை வேண்டிநின்றனர்.இதற்கு பிரதியுபகாரமாக எமது பாடசாலையில் நூலகமொன்று வசதியில்லாமல் அபிவிருத்தி செய்யப்பட வேண்டியுள்ளது. இதனை அபிவிருத்தி செய்து தரப்படல் வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அப்போது அவர்கள் இது எமது கட்சித் தலைவரை பொறுத்தமட்டில் சிறு விடயம். உடனடியாக அதனை செய்து தருகின்றோம் என்ற வாக்குறுதியினை வழங்கிவிட்டு குறித்த இப்தார் நிகழ்வினை இப்பாடசாலை மைதானத்தில் அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர், கட்சியின் உயர்மட்ட அதிகாரிகள் என்று சுமார் 3000 பேர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.இந்நிகழ்வுக்காக வருகைதந்த குறித்த கட்சியின் தேசிய தலைவரும் அமைச்சருமான அவர் இதனை கட்டாயம் செய்து தருவேன் என்ற வாக்குறுதியையும் என்னிடம் வழங்கியிருந்தார்.அதன்பின்னர் நூலகத்திற்கான தேவைப்பட்டியல் மற்றும் செலவு மதிப்பீடு என்பன குறித்த அமைச்சுக்கு என்னால் அனுப்பிவைக்கப்பட்டது. பின்னர் வாக்குறுதியளித்தவர்களிடம் நாடியபோது அவர்கள் வேண்டுமென்றே இழுத்தடிப்புச் செய்வதை உணர முடிந்தது.இவ் ஏமாற்றத்தின் பின்னர் இந்நூலகத்தை மக்களின் மற்றும் தனவந்தர்களின் உதவியுடன் அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை பாடசாலை அபிவிருத்திக் குழுவினால் துரிதமாக முன்னெடுக்கப்பட்டது. . அதன் முதற்கட்டமாக பாடசாலையின் வறிய மாணவர்களின் பெற்றோர்களினால் சுமார் 25,000 ரூபா பெறுமதியான நூல்களை அன்பளிப்புச் செய்தனர்.

அதன் பின்னர் நூலகத்திற்குத் தேவையான பௌதீக வளங்களான மேசைகளை பிரபல தொழிலதிபர் எம்.எச். நாஸரினாலும், 30 மாணவர்கள் இருக்கைக்கான கதிரைகளையும் மற்றும் புத்தகங்களை வைக்கக்கூடிய அலுமாரிகளையும் மட்டக்களப்பு மாவட்ட மோட்டார் போக்குவரத்து உதவி ஆணையாளர் ஏ.எல்.எம். பாறூக் இனாலும் அண்மையில் உத்தியோகபூர்வமாக கையளிப்புச் செய்யப்பட்டு இவ்விருவர்களினால் இந்நூலகம் திறந்தும் வைக்கப்பட்டது.இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. ஜலீல் கலந்துகொண்ட வேளையில் நூலகத்தின் அவசியத்தையும் உள்ள நிலைமையினையும் கருத்திற்கொண்டு வலயக் கல்வி அலுவலகத்தினூடாக அத்தியாவசியமாக சிறுதிருத்த வேலைகளை செய்து தருவதாகவும் கூறி அதற்கான பூர்வாங்க நடவடிக்கையினையும் உடன் மேற்கொண்டார்.

இதற்காக இப்பாடசாலையின் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் தமது நன்றிகளையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்தினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...