வரலாறு திரும்புகின்றது - மீண்டும் தமிழ்-முஸ்லிம் இனக்கலவரம் வேண்டாம்
1915ம் ஆண்டு இலங்கையில் சிங்கள-முஸ்லிம் இனக்கலவரம் நடைபெற்று நூற்றாண்டைத் தாண்டிவிட்டோம்.
அந்தக் கலவரத்தின் போது முஸ்லிம்களின் வர்த்தகப் ​போட்டிக்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியாத சிங்கள இனவாதிகள் அதன் காரணமாக எழுந்த வன்மத்தை சிறு சம்பவமொன்றை பூதாகரமாக்கி தங்கள் வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்துவிட்டனர். அதன் மூலம் முஸ்லிம்களின் வர்த்தக சாம்ராஜ்யம் முற்றாக நொறுக்கப்பட்டுவிட்டதாக அனகாரிக தர்மபாலவும், இடதுசாரி முகமூடியுடன் இனவாதம் கக்கிய பிலிப் குணவர்த்தன போன்றவர்களும் மனப்பால் குடித்தார்கள்.
மறுபுறத்தில் ஒரே மொழி பேசும் சகோதர இனம் மீதான வன்முறையை தமிழ் சமூகம் கோலாகலமாக கொண்டாடியது. முஸ்லிம்களின் அழிவு குறித்து அக்காலகட்டத்தில் வௌியான அனைத்து தமிழ் ஏடுகளும் சந்தோசமான செய்திகளை மட்டுமே பகிர்ந்துள்ளதை வரலாற்றின் ஆவணங்களில் இருந்து கண்டு கொள்ள முடிகின்றது.
அதற்கு ஒரு படி மேலாகச் சென்று பொன்னம்பலம் ராமநாதன் மற்றும் பொன்னம்பலம் அருணாச்சலம் போன்ற தமிழ்த் தலைவர்கள் முஸ்லிம்கள் மீதான வன்முறையைத் தூண்டிவிட்டுக் குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்த சிங்களத் தலைவர்களைக் காப்பாற்ற இங்கிலாந்து வரை சென்று வாதாடி விடுதலை பெற்றுக் கொடுத்தார்கள்.
பேரினவாதத்துக்கு ஆதரவளிப்பதன் மூலம் ஐம்பதுக்கு ஐம்பது நிர்வாக அதிகாரத்தை பெற்றுக் கொள்ள பொன்னலம்பலம் சகோதரர்கள் வாயை பிளந்து கொண்டு காத்திருந்தார்கள். கடைசியில் பேரினவாதிகள் முகத்தில் ஓங்கிக் குத்திய போதுதான் தமிழ்ச் சமூகம் தங்கள் தவறை உணர்ந்து கொண்டது. ஆனால் அதற்குள்ளாக இந்திய வம்சாவளியினரை நாடற்றவர்களாக்குவதில் பொன்னம்பலம் சகோதரர்களின் ஆதரவுடன் பேரினவாதம் வெற்றி பெற்றது. சொந்த சமூகத்தைக் காட்டிக் கொடுத்தேனும் தங்கள் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளவே பொன்னம்பலம் சகோதரர்கள் முயற்சித்தனர் என்பதே வரலாறு. ஆனால் அந்த அதிகாரத்தையும் பறித்து தமிழர்களின் பொக்கிசங்களையும் தீயிட்டு எரித்து பேரினவாதம் தன் கோரமுகத்தை வௌிக்காட்டிய போதுதான் தமிழர்களுக்கு தங்கள் தவறுகள் புரிந்தது.
அதன்பின்னர் 1956 இனக்கலவரத்திலும் சரி, 1983ம் ஆண்டின் இனக்கலவரத்திலும் சரி.. முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஆதரவாகவே செயற்பட்டார்கள். எந்தவொரு இடத்திலும் தமிழ் மக்களின் சொத்துக்களைக் கொள்ளையடிக்கவோ, பேரினவாதிகளிடம் காட்டிக் கொடுக்கவோ இல்லை.
அதற்குப் பரிசாக தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கிலும் கிழக்கிலும் இருந்த பெரும் செல்வந்த முஸ்லிம்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்தும் கப்பம் என்ற பெயரில் பறித்தெடுத்தும் தங்கள் மாவீரர் குடும்பங்களை வௌிநாடுகளில் வசதியாக வாழவைத்தார்கள். அத்துடன் வடக்கில் முஸ்லிம்களை முற்றாக விரட்டியும், கிழக்கில் படுகொலைகளை நிகழ்த்தியும் முஸ்லிம்களை அழித்து ஒழித்துவிட கங்கணம் கட்டிச் செயற்பட்டார்கள். கடைசியில் முள்ளிவாய்க்காலில் அவர்களின் வரலாறு முற்றுப் பெற்றது.
கடைசியில் பேரினவாதத்துடன் கைகோர்த்து முஸ்லிம்களின் அழிவில் வெற்றி விழாக் கொண்டாட காத்திருந்தவர்கள் எல்லாம் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போது முஸ்லிம்கள் வெற்றி விழாக் கொண்டாடியதாக வன்மம் கக்கிக் கொண்டிருக்கின்றார்கள். பேரினவாத நச்சுப் பாம்பை மடியில் போட்டுக் கொஞ்சியதன் மூலம், முஸ்லிம்களை விட தாங்களே அதிக சேதாரங்களை எதிர்கொண்டு சனத்தொகை, கல்வி மற்றும் வர்த்தக ரீதியாக பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிட்டதை காலம் தாழ்த்தியே உணர்ந்து கொண்டுள்ளார்கள்.
தற்போது சிங்களப்பேரினவாதம் மீண்டும் முஸ்லிம்கள் பக்கமாக திரும்பியுள்ளது. 1915ம் ஆண்டு கலவரம் போன்று மீண்டும் முஸ்லிம்களின் வர்த்தக சாம்ராஜ்யம் குறிவைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
அதே நேரத்தில் தற்போது தமிழ்ச் சமூகத்தில் ஊடுருவியுள்ள ஆர்.எஸ்.எஸ் .இந்துத்வா கருத்துக்கள் காரணமாக அவர்களில் பெரும்பாலானவர்களும் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படத் துணிந்துள்ளனர். ஒரு காலத்தில் புலிகளைக் கொண்டு முஸ்லிம்களை அழிக்கத் தலைப்பட்டவர்கள் இன்று பேரினவாதிகளைக் கொண்டு முஸ்லிம்களின் அழிவை ஏற்படுத்த கங்கணம் கட்டிச் செயற்படுகின்றனர்.
அண்மைக்காலமாக தமிழர்களை சைவர்களாக இனம்காட்டி, சைவமும் பௌத்தமும் ஒன்று என்ற ஒரு கருதுகோளை உருவாக்கும் முயற்சியில் இந்துத்வா சிந்தனையாளர்கள் களமிறங்கியிருப்பது சமீபத்திய நிகழ்வுகளின் போது பேரினவாதிகளுக்கு வலிந்து போய் இவர்கள் வழங்கிய ஆதரவு நிலைப்பாடுகளின் மூலம் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
திருகோணமலை அபாயா விவகாரத்திலும் சரி.. யாழ்ப்பாணத்தில் மாட்டிறைச்சி எதிர்ப்பு விடயத்திலும் சரி.. இவர்கள் பௌத்த மத ஆதரவாளர்களாக தங்களை இனம் காட்டி முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாதிகளின் செயற்பாடுகளுக்கு வலிந்து ஆதரவு வழங்கத் தலைப்படுகின்றனர். தங்கள் இனவாத செயற்பாடுகளுக்கும் பேரினவாதிகளை கூட்டுச் சேர்த்துக் கொள்ள முயற்சிக்கின்றனர்.
மாட்டிறைச்சியை எதிர்ப்பவர்கள் அதன் மூலம் கிடைக்கும் தோலில் தான் தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவிகளாக தவில், மத்தளம், பறை போன்ற கருவிகள் உருவாக்கப்பட்டிருப்பதையும் மாட்டின் தோல் அவர்களின் பல பொருட்களுக்கான மூலப் பொருட்களாக இருப்பதையும் மறந்துவிடுகின்றனர்.
அது ஒரு புறமிருக்க....வடக்கு-கிழக்கு இணைப்பு உள்ளிட்ட தமிழரின் எந்தவொரு அபிலாசைக்கும் பேரினவாதம் ஒருபோதும் கைகொடுக்கப்போவதில்லை. என்றைக்காவது இந்த உண்மை புரிந்து தமிழ் மக்கள் மீண்டும் முஸ்லிம்களிடம் நட்புக் கரம் நீட்டும் ​போது அவர்கள் கலாசார ரீதியாக இன்னுமொரு முள்ளிவாய்க்காலை சந்தித்து ஏராளம் அழிவுகளை எதிர்கொண்டிருப்பார்கள்.
முஸ்லிம் சமூகமோ அத்தனை அழிவுகளையும் எதிர்கொண்டபடி பீனிக்ஸ் பறவைகளாக வர்த்தகத்தில் மட்டுமன்றி ஏனைய துறைகளிலும் இன்றைய நிலை போன்றே எதிர்காலத்திலும் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டிருக்கும்...
கடைசியில் ஏமாறப்போவது என்னவோ நீங்கள்தான்....
அஸ்ரப் அலி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...