May 8, 2018

‘சமூக நன்மை கருதியே கட்சியின் பணிகள் அமைய வேண்டும்’சமூகத்தின் நன்மைகளுக்காகவே கட்சி இருக்க வேண்டுமேயொழிய, கட்சியின் நலனுக்காக சமூகத்தை பாழ்படுத்த முடியாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் வேண்டுகோளின் பேரில், அனுராதபுரம், கஹட்டகஸ்திகிலியவில் யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலையமொன்றை கடந்த சனிக்கிழமை (05) திறந்துவைத்து உரையாற்றும் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் ரிஷாட் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
கட்சியை விட சமூகத்தின் நிம்மதி, பொருளாதார மேம்பாடு, கல்வி ஆகியவைதான் எமக்கு முக்கியம். அதனால்தான் கடந்த காலங்களில் இந்த நல்லாட்சியை உருவாக்குவதற்கு எங்களுடைய ஆதரவினை வழங்கினோம். இனங்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுத்தி, வன்முறைகளை உருவாக்கி, இரத்த ஆறு ஓடும் சந்தர்ப்பத்தில், எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கடந்தகால ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதற்காக நாங்கள் முழு ஒத்துழைப்பையும் நல்கினோம்.

ஆனால், அண்மையில் இடம்பெற்ற கண்டி, திகனை சம்வங்கள் பெரும் வேதனையையும், துன்பத்தையும், பாரிய இழப்புக்களையும் எமக்கு ஏற்படுத்தியது.  அந்த சந்தர்ப்பத்தில் நல்லாட்சி அரசின் சில நடைமுறைகளினால் இந்த ஆட்சியாளர்களும் விலைபோய் விட்டார்களா? அரசியல் இலாபத்துக்காக எம்மைக் கருத்திற்கெடுக்காமல் இருக்கின்றார்களா? என்று எண்ணத் தோன்றியது. அதன் பின்னர் பிரதமர் இது சம்பந்தமாக பல நடவடிக்கைகளை முன்னெடுத்தமையை நாம் நேரடியாகக் கண்டோம்.

இந்தப் பிரதேசங்களிலும் கடந்த காலங்களில் பல விரும்பத்தகாத சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. தனிநபர்களுக்கிடையில் ஏற்படும் பிரச்சினை, வியாபார ரீதியிலான பொறாமை போன்றன இவற்றுக்குக் காரணமாகும். எதிர்காலத்திலே இவ்வாறன பிரச்சினைகள் தொடராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தவிசாளர் திலகரத்ன, இஷாக் ரஹ்மான் எம்.பி மற்றும் அமைப்பாளர் சஹீட் ஆகியோர் இணைந்து மேற்கொள்ள வேண்டிய தார்மீகப் பொறுப்பு உங்களுக்கு இருக்கின்றது.

அனைத்து வளங்களையும் கொண்டிருக்கக் கூடிய எமது நாட்டிலே, சிங்களம், தமிழ், முஸ்லிம் என இந்த நாட்டுப் பிரஜைகளாக நாம் ஒன்றாக வாழ்ந்துகொண்டிருக்கின்ற போது, நமக்கிடையே முரண்பாடுகள் ஏற்படும் பட்சத்தில், அது இந்த நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்து, நாட்டின் எதிர்காலத்தை சீரழிந்த நிலைக்கு இட்டுச் செல்லும் நிலைமையையே உருவாக்கும்.

இந்த நாட்டின் நலனுக்காகவும், பொருளாதார மேம்பாட்டோடு வளர்சியடைவதற்காகவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் என்ற வகையில் நாம் பணியாற்றி வருகின்றோம்.

கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்துக்கு கட்டாயம் ஒரு தையல் பயிற்சி நிலையத்தை அமைத்துத் தரவேண்டும் என்ற இஷாக் எம்.பியின் வேண்டுகோளை ஏற்று, இந்த பயிற்சி நிலையத்தை நாம் அமைத்துத் தந்திருக்கின்றோம். இதன் மூலம் சிறந்த பயிற்சியைப் பெற்று, ஒரு நிரந்தரமான வருமானம் ஈட்டக் கூடிய வகையில் இந்த பயிற்சி நெறியை நீங்கள் பிரயோசனமாக்கிக்கொள்ள வேண்டும் என்றார்.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான, இலங்கை புடவைகள் மற்றும் ஆடைகளுக்கான நிறுவனம் (SLITA) இப்பயிற்சி நிலையத்தை அமைக்க உதவியுள்ளது.

இந்நிகழ்வில் இஷாக் ரஹ்மான் எம்.பி, மக்கள் காங்கிரஸின் கல்னேவ பிரதேச சபை உறுப்பினர் ஹிஜாஸ், இப்பலோககம பிரதேச சபை உறுப்பினர் நளீம் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சஹீட் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.

ஊடகப்பிரிவு

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network