‘மக்கள் காங்கிரஸின் அரசியல் நடவடிக்கைகளை எதிர்த்த சமூகம், ஆதரிக்கத் தொடங்கியுள்ளது’
வன்னியில் ஆரம்ப காலங்களில் மக்கள் காங்கிரஸின் அரசியல் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பைத் தெரிவித்த தமிழ்ச் சமூகம், தற்போது படிப்படியாக எமது கட்சியினை ஆதரிக்கத் தலைப்பட்டதனாலேயே, அந்தப் பிரதேசத்தில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இரண்டு பிரதேச சபைகளின் அதிகாரங்கள் எமது கைக்குக் கிடைத்தமைக்கு காரணமாகும் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட முக்கியஸ்தர் உதுமான் ஹாஜியாரின் நிதியொதுக்கீட்டில், அக்குரனை, க/பானகமுவை முஸ்லிம் வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பாடசாலைக் கட்டிடத் திறப்பு நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் ரிஷாட் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இன, மத பேதமின்றி நேர்மையுடனும் உண்மையுடனும் நாங்கள் பணியாற்றியதன் பிரதிபலிப்பே, தமிழர்கள் எம்மை அரவணைத்தமைக்கு காரணமாக அமைகின்றது. இந்தக் கட்சியை வன்னியில் அறிமுகம் செய்வதற்கும், வேரூன்றச் செய்வதற்கும் நாங்கள் பட்ட துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல. வீதிகளிலே கொடும்பாவியைக் கட்டி எரித்த துன்பியல் வரலாறுகளும் எமக்குண்டு. எனினும், நாங்கள் பரிதவித்துக்கொண்டிருந்த தமிழ் சமூகத்துக்கு மேற்கொண்ட பணிகளினாலேயே, அந்தச் சமுதாயத்திலிருந்து இரண்டு தவிசாளர்களைப் பெறமுடிந்தது.

“நாம் நியாயத்துக்காக குரல் கொடுக்கின்றோம். எம்மை அடிமைகளாகக் கருதி அடக்கப் பார்ப்பவர்களுக்கு எதிராக குரல் கொடுக்கின்றோம். அநீதிகளைத் தட்டிக் கேட்கின்றோம். இதனாலேயே நாங்கள் செய்யாத விடயங்களுக்கு எம்மை வலிந்திழுத்து வசைபாடுகின்றனர். குற்றஞ்சாட்டுகின்றனர்”
இதனாலேயே, கண்டியில் நாம் காலூன்ற வந்த போது, “இந்தப் பிரதேசத்தில் அரசியல் செய்ய வேண்டாம்” என்று என்னிடம் சிலர் வேண்டினர். 
விவாதித்தனர். என்னைக் கண்டால் சிங்கள மக்கள் துவேச உணர்வுடன் பார்ப்பதாகவும், இனவாதியெனக் கருதுவதாகவும், என்னை சிங்கள சமூகத்தின் விரோதியாக அவர்கள் எண்ணுவதாகவும் சிலர் கூறினர்.

எனினும், எனக்கு நெருக்கமானவர்கள் “இவற்றை அலட்டிக்கொள்ள வேண்டாம். நேர்மையான முறையில் நாம் பணியாற்றுவோம்” என்று கூறினர். இந்த வகையில், கண்டியில் எமது கட்சி காலூன்றுவதில் முனைப்புடன் செயற்பட்ட காலஞ்சென்ற பொறியியலாளர் கஸ்ஸாலி மற்றும் இணைப்பாளர் ரியாஸ் இஸ்ஸதீன் ஆகியோர் உட்பட இன்னும் பலரை நான் நினைத்துப் பார்க்கின்றேன். அது மட்டுமின்றி முன்னாள் அமைச்சர் காதர் ஹாஜியாரின் மருமகனும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான அம்ஜாத் அவர்கள், இந்தப் பிரதேசத்தின் கட்சிப் பணிகளை தலைமையேற்றிருப்பது எமக்கு வலுவூட்டுகின்றது.

முஸ்லிம்கள் பொதுவாக பச்சை நிறத்திலேயே ஊறிப்போனவர்கள் என்ற யதார்த்தம் இருக்கின்றது. வாக்குச் சீட்டில் யானையைக் கண்டால் நமது கைகள் நமக்குத் தெரியாமலேயே அதை நாடுகின்ற நிலைமை கடந்த காலங்களில் இருந்தது.

நமது சமூகத்தில் அரசியல் அறியாமையும், அரசியல் விழிப்புணர்வு இன்மையுமே இந்த துர்ப்பாக்கிய நிலைமைக்கு காரணமாகும். இதனாலேயே நாம் பல்வேறு வழிகளில் பின்னடைவைச் சந்திக்கின்றோம். நமது சமூகம் நாடளாவிய ரீதியில் தொடர்ந்தேர்ச்சையாக எதிர்கொள்கின்ற துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் முடிவு கட்டுவதற்கு நாம் சரியான பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறான சமூகத்திலிருந்து எழுச்சி பெற்றதே மக்கள் காங்கிரஸ். இந்தக் கட்சி உண்மையையும் தெளிவையும் எடுத்துச் சொல்லி வருகின்றது. மக்களுக்கு அரசியல் ரீதியான விழிப்பைக் கொடுத்து வருகின்றது.

துன்பங்கள்தான் வாழ்க்கையாக மாறியிருக்கின்ற நமது சமூகத்துக்கு விடிவைப் பெற்றுக் கொடுக்கவே கட்சி அமைத்தோம். அந்த நோக்கத்தை சரிவர நிறைவேற்றி வருகின்றோம் என்ற மனத்திருப்தி எமக்குண்டு. அத்துடன், குறிப்பாக வடக்கில் பிரிந்து கிடந்த தமிழ், முஸ்லிம் உறவை சீராக்கி பலப்படுத்தும் முயற்சிகளில் நாம் ஓரளவு வெற்றி கண்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ்.சுபைர்தீன், கண்டி மாவட்ட அமைப்பாளர் அம்ஜாத் ஹாஜியார், கண்டி மாவட்ட இணைப்பாளர் ரியாஸ் இஸ்ஸதீன் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தரான உதுமான் ஹாஜியார் ஆகியோரும் உரையாற்றினர்.

-ஊடகப்பிரிவு-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...