அதிகார பேராசை கொண்டவர்கள் தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள திறைசேரியை பணயமாக வைத்தால், இறுதியில் அதற்கான இழப்பீட்டை மக்களே செலுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை சம்பந்தமாக அவர் வெளியிட்டள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளார். அதில் மேலும்,
எனது ஆட்சிக்காலத்துடன் ஒப்பிடும் போது தற்போது சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை குறைவாகவே உள்ளது. இதன் மூலம் கிடைத்துள்ள இலாபத்தை அரசாங்கத்தினால் மக்களுக்கு கொடுக்க முடியவில்லை.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற தொடர்ந்தும் வழங்கிய மானியங்களுக்கான பணத்தை ஈடு செய்யவே அரசாங்கம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.

ஆட்சிக்கு வரும் எந்த அரசாங்கமும் வெற்றி பெற எப்படியான நிவாரணத்தையும் வழங்க முடியும். எனினும் மானியத்தை ஈடு செய்யக் கூடிய வருமானத்தை பெற முடியவில்லை என்ற வெற்றிக்கு பின்னர் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் சிரமம் காரணமாக அரசாங்கம் கவனமாக இருக்கும்.

ஆனால் தற்போதைய அரசாங்கம் தேர்தலில் வெற்றி பெறுவதை மாத்திரமே கவனத்தில் கொண்டிருந்தே தவிர அதற்கு பின்னர் என்ன நடக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவில்லை.

தேர்தலில் வெற்றி பெற திறைசேரியை பணயம் வைத்தது. இதன் பின்னர் ஏற்பட்ட செலவுகளை ஈடுசெய்ய அரசாங்கம் வரலாற்றில் என்றுமில்லாத வகையில் கடனை பெற ஆரம்பித்தது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை அரசாங்கம் வணிக கடனாக மாத்திரம் 19.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளதுடன், தேசிய கடனாக 6 ட்ரில்லியன் ரூபாவுக்கும் மேல் பெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Share The News

Post A Comment: