May 25, 2018

அபாயாவினால் தமிழ் - முஸ்லிம் உறவுக்கு, எந்த பாதிப்பும் இல்லை; பரபரப்பு நேர்காணல்


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சருமான சிங்காரவேலு தண்டாயுதபாணி  வழங்கிய நேர்காணல் இங்கு தரப்படுகிறது.

நேர்கண்டவர்: ஹெட்டி ரம்ஸி

கிழக்கு மாகாணத்தில் சிறுபான்மை மக்களின் கல்வி நிலை எவ்வாறுள்ளது?

கிழக்கு மாகாணத்தில் சுமார் 1200 பாடசாலைகள் உள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை தமிழ் முஸ்லிம் பாடசாலைகள். அநேகமான பாடசாலைகள் கல்வி நிலையில் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தி வருகின்றன. எனினும் அண்மைகாலமாக கிழக்கு மாகாண பாடசாலைகள் மாகாண ரீதியில் க.பொத சாதாரண தரப்பரீட்சை பெறுபேற்றில் குறைந்தளவு பெறுபேற்று விகிதாசாரத்தையே காண்பிக்கிறது. ஆனால் 2016ஆம் ஆண்டினையும் விட கடந்த வருடத்தில் கிழக்கு மாகாணத்தின் பெறுபேறுகளில் ஓரளவு வளர்ச்சிச் தன்மையை காணக்கூடியதாக உள்ளது. ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் எமது மாகாணத்தின் பரீட்சைப் பெறுபேறுகள் திருப்தியளிக்கும் வகையில் இல்லை.

அற்கான காரணங்கள் என்னவென நீங்கள் கருதுகிறீர்கள்?

இதற்கு நியாயமான பல காரணங்கள் உள்ளன. நீண்ட காலப் போர் கிழக்கு மாகாணத்தின் கல்வித் துறையில் மிகுந்த பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன. போரில் இடம்பெயர்ந்வர்கள் பாடசாலைகளில் தஞ்சம் புகுந்தமை மற்றும் ஆசிரியர் உள்ளிட்ட இதர வளப்பற்றாக்குறை நிலவியமை போன்ற காரணங்களை குறிப்பிடலாம். அத்தோடு ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும் போது இங்கு கல்விக்கான வசதிவாய்ப்புகள் குறைவாக காணப்படுவதும் மாணவர்கள் கல்வியில் பின்னடைந்தமைக்கு மிக முக்கிய காரணமாக உள்ளது.

அண்மையில் திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற அபாயா விவகாரத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

சில பாடசாலைகள் தங்களுடைய பாரம்பரிய சமூகம் சார்ந்த கலாசார விழுமியங்களை பின்பற்றி வருகின்றன. அந்த வகையில் ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியும் திருகோணமலை மாவட்டத்தில் பாரம்பரிய கலாசாரங்களை பின்பற்றும் பாடசாலையாக உள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் மிகப்பெரிய இந்துக்கல்லூரியாகவும் இது உள்ளது. பெண்கள் கல்விக்கு சிறந்த பாடசாலையாகவும் சகல விதமான பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தும் பாடசாலையாகவும் இது அமைந்துள்ளது. எனவே இத்தகைய கல்லூரிகள் பாரம்பரியமாக பின்பற்றி வருகின்ற ஒழுங்குகளை பேணத்தான் செய்கின்றன. இங்கு கணிசமான அளவில் முஸ்லிம் பிள்ளைகளும் கல்வி கற்கிறார்கள். இங்கு கற்ற பெரும்பாலான முஸ்லிம் மாணவர்கள் நல்ல நிலைக்கு வந்துள்ளார்கள். உயர் கல்வியைக் கற்கும் நோக்கில் இங்கு பெரும்பாலான முஸ்லிம் மாணவிகள் வருகிறார்கள். இந்த மாணவர்களால் கூட சண்முகா கல்லூரியின் ஒழுங்குகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்பட்டது கிடையாது.
அண்மையில் அபாயா சர்ச்சை ஏற்பட்டது. புதிதாக நியமனம் பெற்று வந்த ஆசிரியரால் தான் இந்த அபாயா பிரச்சினை ஏற்பட்டது. அதிபர் இணக்கமாக சொல்லியும் அது சரியாக புரிந்துகொள்ளப்படாமல் ஏற்கனவே இங்கு கடமையாற்றிய ஆசிரியர்களும் சேர்ந்து அபாயா அணிந்து வந்த போது இந்த பிரச்சினை வெடித்தது. இதற்கு எதிராக சண்முகா இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் இணைந்து குரல் எழுப்பினார்கள். இதன் பின்பு வலயக் கல்விப் பணிப்பாளர், மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோர் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு இந்த ஆசிரியர்களுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கியுள்ளனர்.

சில இனக்குழுக்கள் இந்த விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு முகநூல் வாயிலான பிரச்சினையை பெரிதுபடுத்தி வந்துள்ளன. இவற்றுக்கு நாம் இடமளிக்க கூடாது. இனக்கிடையில் அமைதியும் நல்லிணக்கமும் காணப்படும் போதே அனைத்து விடயங்களையும் முன்னொண்டு செல்லலாம். கல்வி என்பது மிக அடிப்படையான விடயம். இந்த விடயம் மத்திய கல்வி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசியல்வாதிகள் சிறந்த வழிகாட்டல்களை வழங்க வேண்டும்.

இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு கல்வி அமைச்சு எத்தகையை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.?
கிழக்கு மாகாண கல்வி அமைச்சு தேசிய பாடசாலை விவகாரத்தில் முழு அதிகாரமும் பெறவில்லை. ஆசிரியர்களை இடமாற்றல் போன்ற நடவடிக்கைகளுக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கோ, மாகாணக் கல்வி அமைச்சுக்கோ மிகப்பெருமளவில் அதிகாரம் செலுத்த முடியாது. நாட்டின் 327 தேசிய பாடசாலைகள் உள்ளன. எனவே மத்திய கல்வி அமைச்சின் கீழே இவை நிர்வகிக்கப்படுகின்றன. மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளரினால் மத்திய கல்வி அமைச்சுக்கு இந்த விவகாரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தீர்க்கமான முடிவு எதுவும் சொல்லப்படவில்லை. ஆனால் குறிப்பிட்ட ஆசிரியர்களுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் சமூகம் இந்தப் பிரச்சினையை எப்படிப் பார்க்கின்றது?

திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் மாணவர்கள் பெருமளவில் முஸ்லிம் பாடசாலைகளிலேயே கற்கின்றார்கள். அதுபோன்று தமிழ் மாணவர்கள் அவர்களுடைய பாடசாலைகளிலேயே கற்கின்றார்கள். சில முஸ்லிம் மாணவர்கள் தமிழ் பாடசாலைகளிலும், தமிழ் மாணவர்கள் முஸ்லிம் பாடசாலைகளிலும் கற்று வருவதையும் காண முடிகின்றது. கல்வி என்பது அடிப்படை உரிமை. அதை நாம் மறுக்கக் கூடாது. மூதூரில் உள்ள பெரியதொரு முஸ்லிம் பாடசாலையில் தமிழ் மாணவர்கள் உயர்கல்வி கற்கிறார்கள். எல்லா மாணவர்களும் (தமிழ் மாணவர்களாக இருந்தாலும்) முஸ்லிம்கள் அணியும் உடையையே அணிந்து வர வேண்டும் என்றொரு ஒழுங்கு அந்தப் பாடசாலையில் உள்ளது. எனவே அ ங்கு கல்வி கற்கச் செல்லும் தமிழ் பெண் மாணவிகள் அந்த ஆடையையே அணிந்து செல்கிறார்கள். இந்த விடயத்தை குறிப்பிட்ட மாணவர்களோ, அவர்களது பெற்றோரோ, அரசியல்வாதிகளோ பெரிய விடயமாக எடுக்கவில்லை.

எனவே அந்தப் பள்ளிக்கூடத்தின் ஒழுங்குகள் எதுவோ அந்த ஒழுங்குகளை அனுசரித்து போக வேண்டும். இதை நாம் அனுமதிக்க வேண்டும். அவ்வாறு செய்ய முடியாது, இவ்வாறு தான் செய்ய வேண்டும் என பிரச்சினையேற்பட்டால் அந்த மாணவர்களின் கல்வியே பாதிக்கப்படும். எனவே தமிழ் மாணவர்கள் முஸ்லிம் பெண்பிள்ளைகளின் ஆடைகளை அணிந்து கற்கச் செல்வதை இங்கு பிரச்சினையாக பார்ப்பதில்லை. கிழக்கிலுள்ள சில தமிழ் பாடசாலைகளுக்கு கற்பிக்கச் செல்கின்ற முஸ்லிம் ஆசிரியர்கள் அபாயா அணிந்து செல்கிறார்கள். இது பிரச்சினையாக நோக்கப்படுவதில்லை. ஆனால் பாரம்பரிய கலாசார விழுமியங்களை பின்பற்றுகின்ற பாடசாலை எனும் வகையில் சண்முகா கல்லூரியில் பாரம்பரிய ஒழுங்குகள் பின்பற்றப்படுகின்றது.

இந்நாட்டில் தமிழ் முஸ்லிம் இனங்கள் சில நேரங்களில் வேறுபட்டு நின்ற காரணத்தினால் பேரினவாதம் என்கின்ற அழுத்தம் அதிகமாக பதிவதற்கு காரணமாய் அமைந்துள்ளது. ஆகவே சிறுபான்மை இனங்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். எங்களுக்கு மத்தியில் உள்ள சிற்சில முரண்பாடுகளை பூதாகாரப்படுத்தாமல் நிதானமாக இந்தப் பிரச்சினைகளை அனுகி அவற்றை தீர்க்க வேண்டும். அரசியல்வாதிகளும் இதற்கு துணைபோகாமல் நிதானமாக இந்தப்பிரச்சினைகளை அனுகித் தீர்த்து வைக்க வேண்டும்.

இந்த விவகாரம் தமிழ் முஸ்லிம் உறவில் விரிசல்களை ஏற்படுத்திவிடும் என நீங்கள் கருதுகிறீர்களா?

பெரிய பிரச்சினைகள் ஒன்றும் ஏற்படவில்லை. சில தமிழ் பெற்றோர்களும், பழைய மாணவர்களும் ஆர்ப்பாட்டம் செய்திருந்தார்கள். திருகோணமலையில் இதுவரைகாலமும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு மத்தியில் சச்சரவுகள் ஏற்பட்டதில்லை. திருகோணமலை மூர் ஸ்ட்ரீட்டில் வாழும் முஸ்லிம் மக்கள் தமிழர்களுடன் சிறந்த உறவுகளை பேணி வருகின்றார்கள். இரு தரப்பும் நெருங்கிய உறவுகளை பேணி வருகிறது. இந்தப் பிரதேசத்தில் அதிகளவான கோயில்கள் மற்றும் பள்ளிவாசல்கள் காணப்படுகின்றன. எனவே இந்த விவகாரம் தமிழ் முஸ்லிம் உறவில் விரிசல்களை ஏற்படுத்திவிடவில்லை. அவ்வாறு இடம்பெறுவதாக இருந்தாலும் அவற்றை சுமுகமான முறையில் தீர்த்து வைப்பதே பொறுப்புவாய்ந்தவர்களின் கடமையாகும்.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network