இலங்கையை உலுக்கிய இனக்கலவரம்! 3 மாதங்களுக்குப் பின் மீண்டும் ஒரு பயணம்இலங்கையில் 3 மாதங்களுக்கு முன் நடைபெற்ற இனக்கலவரம் இன்றும் மக்கள் மனதிலிருந்து நீங்காத வடுக்களாகவே காணப்படுகின்றன.
சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் கண்டி - திகன பகுதியில் கடுமையான மோதல்கள் ஏற்பட்டதுடன், உயிரிழப்புக்களும், சொத்துக்கள் அழிவும் ஏற்பட்டன.

இந்த சம்பவம் இடம்பெற்று 3 மாதங்கள் கடந்த நிலையில் தற்போது குறித்த இடம் எவ்வாறு இருக்கின்றது என்ற புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.

மூன்று மாதங்களுக்கு முன் நடைபெற்ற வன்முறையில் தினக பகுதியில் எரிக்கப்பட்ட வீடு ஒன்றை குறித்த வீட்டின் உரிமையாளர் சென்று பார்வையிட்டுள்ளார்.

எந்த முன்னேற்றமோ, எவ்வித புனரமைப்புக்களோ இல்லாமல் எரிக்கப்பட்ட வீட்டின் சுவர்கள் மட்டும் இன்றும் காணப்படுகின்றது.


வடக்கில் யுத்தம் நடைபெற்ற போது அங்குள்ள தமிழ் மக்களின் வீடுகள் சொத்துக்கள் எவ்வாறு காணப்பட்டதோ, அதே போன்றதொரு காட்சி தற்போது திகன பகுதியில் உள்ளது.

இந்த வன்முறை சம்பவத்தில் தன் தாய், தந்தை மற்றும் சகோதரனை காப்பாற்றி விட்டு உயிரிழந்த இளைஞனின் 3 ஆவது மாத நினைவு நாள் இன்றாகும்.

அத்துடன் இந்த சம்பவத்தில் முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான பல கடைகள், வீடுகள், பள்ளிகள் அடித்து உடைக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளன.
மேலும், மக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இந்த சம்பவங்களுக்கு சமூகவலைத்தளங்களில் பரவிய இனவாத காணொளிகளே மூலக்காரணமாக இருந்த காரணத்தால் இலங்கை முழுவதும் முகப்புத்தகம், வட்ஸ்அப் மற்றும் வைபர் போன்ற சமூகவலைத்தளங்கள் 10 நாட்களுக்கும் மேலாக தடை செய்யப்பட்டிருந்தன.

மேலும் குறித்த காணொளிகளை பரப்பி, இளைஞர்களை ஆயுதம் ஏந்த வைப்பதற்கு காரணமாக இருந்ததாக கூறப்படும் மகாசேன பலகாய அமைப்பின் தலைவர் உட்பட 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும் திகன பகுதியில் புனரமைப்பு பணிகள் ஆமை வேகத்தில் முன்னெடுக்கப்படுவதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த உதவிகளும் இதுவரை முழுதாக செய்துகொடுக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...