யாரை பதவியில் ஏற்ற ‘றோ’ திட்டம் வகுக்கிறது ?


தேசத்தை பாதுகாத்ததில் தனக்கும் பங்குள்ளதென கூறி, மஹிந்தவின் வாக்குகளை உடைத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அடுத்த ஜனாதிபதியாக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயல்கிறார் எனத் தெரிவித்துள்ள தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியம், அதற்கான திட்டத்தை ‘றோ’ வகுகிக்கின்றது என்றும் தெரிவித்துள்ளது.
‘றோ’ அமைப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகள் அமைந்துள்ளதென, அவ்வமைப்பின் தலைவர் கலாநிதி. குணதாஸ அமரசேகர தெரிவித்தார்.
ராஜகிரியவில்  (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது வெற்றிக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகள் அவசியமானதென கருதுகின்றார். அதற்காகவே சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டமும் மட்டக்களப்பில் நடத்தப்பட்டது.
அத்துடன், ரணில் – மஹிந்தவுக்கு இடையில் இரகசிய ஒப்பந்தங்கள் உள்ளனவென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உரையில் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார். இவை அனைத்தும் சிங்கள் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கான போலி நாடகங்கள் என்பதே எமது நிலைப்பாடாகும்” என்றார்.
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிங்கள மக்களின் பெரும்பான்மை ஆதரவு உள்ளது. அதனால் அவருக்கு நிகராக தேசத்தை பாதுகாத்தப் பெருமை தனக்கும் உள்ளதென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிக்கொள்வதனால் அவரின் நோக்கம் என்னவென்பது வெளிப்படையாகின்றது” என்றார்.
“முன்னாள் ஜனாதிபதி இருக்கும் சிங்கள மக்களின் ஆதரவை இரண்டாக உடைப்பதால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சிறுபான்மை மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக்கிவிட முடியும் என்பதை அறிந்தே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்படி போலி நாடகங்களை ஆடுகின்றார்” என்றார்.
“ஆனால், இது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஏற்பாடு மாத்திரமல்ல. மாறாக, ‘றோ’ அமைப்பால் அவருக்கு இந்தத் திட்டம் வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதே நிதர்சனமாகும்” என்றார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...