Jun 13, 2018

அடுத்த தேர்தலை நோக்கி இன்றைய ரமழான்


இன்றைய பதிவு இம்முறை ரமழானில் இடம்பெற்ற சில விடயங்களை அலசி ஆராய்வதாகும்.
முஸ்லிம்கள் நற்கருமங்களில் அதிக ஈடுபாடு காட்டி இறையச்சம் உள்ளவர்களாக மாறுவதற்கு வழங்கப்பட்டுள்ள ரமழானில் இம்முறை இடம்பெற்ற விடயங்களை அவதானிக்கையில் அவை இவ்வுலகை நோக்காக கொண்டுள்ளதை அவதானிக்கலாம்
இம்முறை ரமழானில் தராவீஹ் 11 அல்லது 23 என்ற விடயம் அதிகம் பேசாவிடினும், சர்வதேச பிறை உள்நாட்டு பிறை விவகாரம் சமூகத்தில் அதிகம் விமர்சனத்திற்கு உள்ளாகியது.
அவ்வாறே ரமழானில் 28ம் நாள் பின்னேரம் பிறை தென்படலாம். என பொறுப்புள்ள தலைவர் ஒரு கருத்தை வெளியிட்டு சமூகத்தில் இறுதிப் பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தினார். இவரின் இக்கருத்து 2௦12 பிறை விவகாரத்தில் அவரின் செயற்பாடு காரணமாக அதிக விமர்சனத்திற்கு உள்ளாகியத்தை அவதானிக்க முடிந்தது.
2௦14 இல் எவர்களை எப்பிரதேச மக்கள் குனூத் ஓதி விரட்டினார்களோ அவர்களை 2௦18 இல் அதே சமூகம் யா நபி பைத் பாடி வரவேற்றனர்.
நாடளாவிய ரீதியில் சகவாழ்வு என்ற பெயரில் இப்தார் ஏற்பாடுகள் செய்து பல நோன்பு நோற்ற ஏழைகளையும் பொதுமக்களையும் புறக்கணித்த இப்தார் ஏற்பாடுகளை அவதானிக்க முடிந்தது. அவற்றில் முஸ்லிம்களின் கலாசாரங்களுக்கு இல்லாத கௌரவம் பிற மத கலாசாரங்களுக்கு வழங்கப்பட்டது.
மார்ச் மாதத்தில் சிங்கள மக்களால் பள்ளிகள் தாக்கப்பட்டன. ஆனால் ரமழானில் முஸ்லிம்களாலே பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டு நீதிக்காக சிங்கள போலீசாரை நாடியதையும் அவதானிக்க முடிந்தது.
இலங்கையில் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தென் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவருக்கு எதிராக பாலியல் லஞ்ச குற்றச்சாட்டும் ரமழானில்தான் முன்வைக்கப்பட்டது.
அவ்வாறே தனியாக பித்ரா கொடுப்பதா அல்லது கூட்டாக கொடுப்பதா என்ற வாதப் பிரதிவாதம் என ரமழான் நம்மை விட்டு நகர்ந்த வண்ணம் உள்ளது.
அதாவது இம்முறை ரமழானில் இடம்பெற்ற விடயங்களை அவதானிக்கையில் அவை பிற மதத்தவர்களுடன் சகவாழ்விற்காகவும், முஸ்லிம்களுக்கு இடையில் சமர் வாழ்வை விதைப்பதை தூண்டுவதாகவும் உள்ளது.
இலங்கையில் தற்போதுள்ள நிலையில் நாட்டுக்கும் முஸ்லிம்களுக்கும் சிறந்த தலைமைத்துவம் இல்லாமல் உள்ளது. எனவே தலைமைத்துவத்தை பெற அரசியல் ரீதியாகவும், இயக்கவியல் ரீதியாகவும் பனிப்போரட்டம் இடம்பெறுகின்றது.
இப்போராட்டத்தில் அரசியல் ரீதியில் தலைமைத்துவத்தை உறுதிப்படுத்வதற்கு பெரும்பான்மையினருக்கு சிறுபான்மை முஸ்லிம்களின் ஆதரவு தேவை இதனை பெறுவதற்கு அவர்கள் சகவாழ்வு இப்தார் ஏற்பாடுகளை தமக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர்,
முஸ்லிம்களுக்கான தலைமைத்துவ போராட்டத்தில் தமது இருப்பை நிலைநாட்ட பிக்ஹ் ரீதியாக உள்ள கருத்துமுரண்பாடுகளை ஒவ்வொரு ஜமாஅத்தும் தமக்கு சார்பாக பயன்படுத்துகின்றனர்.
அரசியல் தலைமைத்துவத்திற்கு சகவாழ்வு, இஸ்லாமிய தலைமைத்துவத்திற்கு சமர்வாழ்வு என்று நம் வாழ்வு போகின்றது. இவ்வாறு தொடர்ந்து நாம் சென்றால் நமக்கு இன்று நாட்டில் உள்ள அணைத்து உரிமைகளையும் இழந்து அகதிகளாக மாற வேண்டி ஏற்படும்.
எனவே பிற மதத்துடன் சகவாழ்வை ஏற்படுத்த முன் முஸ்லிம்களுக்கு இடையில் சகவாழ்வை ஏற்படுத்த வேண்டியுள்ளோம். எனவே நாம் முதலில் நாம் இது பற்றி சிந்திப்போம்.
இன்று முஸ்லிம் சமூகத்தில் அதிகமாக பகிரப்படுகின்ற விடயம் ஒவ்வொருவரும் தாம் சார்ந்திருக்கும் ஜமாஅத்தின் வேலைதிட்டங்களையும், கருத்து முரண்பாடுகளையும்தான். ஆனால் நாளை தலைமைத்துவத்தை ஏற்கவுள்ள முஸ்லிம் சமூக இளைஞர்கள் இன்று கல்வியில் ஆர்வமின்றி போதைபொருள் சார்ந்த விடயங்களை நாடிய வண்ணம் உள்ளனர். மறுபுறம் யுவதிகள் கல்வியில் முன்னேறி இறுதியாக பல்கலைக்கழகங்களில் துணைக்கு முஸ்லிம் ஆண்கள் இல்லாமையினால் தமது இருப்பில் பல சிக்கல்களை எதிர்நோக்கிய வண்ணம் உள்ளனர்.
மனிதன் இறைவனுக்கும் மனிதனுக்கும் செய்ய வேண்டிய கடமைகளில் நடுநிலைமை தவரியமையினால் முஸ்லிம் சமூகத்தில் பண்பாட்டு வீழ்ச்சியும் ஏற்பட்ட வண்ணமுள்ளது.
எனவே இன்று சமூகத்தின் தேவை பிறை ஆராய்ச்சிகள் அல்ல பண்பாட்டு வளர்ச்சிக்கும் கல்வி எழுசிக்குமான ஆய்வுகள். எனவே இது பற்றிய கருத்துப் பரிமாற்றங்களை சமூக வலைத்தளத்தில் ஏற்படுத்துவோம்.

Ibnuasad

Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post