இனமத பேதங்களின் எல்லைகளுக்கப்பால் நின்று பணியாற்றுவேன் - மஸ்தான்இமாம் றிஜா

என்னை மிகுந்த நம்பிக்கையோடு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்து பிரதி அமைச்சராக உயர்ச்சி பெறுவதற்கு காரணமாக இருந்த எனது மக்களுக்கு  எனது மனமார்ந்த நன்றிகளை  தெரிவிப்பதுடன் அம்மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கு என்னால் இயன்றவரை செயற்படுவேன் என்பதை நன்றியுணர்வோடு கூறிவைக்க விரும்புகிறேன்.

நானோ எனது குடும்பமோ என்றுமே இனமத பேதங்களை ஆதரித்தவர்கள் அல்ல.
அல்லாஹ்வுக்காக என மக்களோடு அன்னியமொன்னியமாக வாழ்ந்து வருபவர்கள்.

இவ்வாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள்குடியேற்றம்,புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் குறிப்பிட்டார்.


கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சில் தனது அமைச்சுப்பணிகளை பொறுப்பேற்ற பின் ஆற்றிய உரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.


அமைச்சர்களான பெளஸி,சுவாமிநாதன்,துமிந்த திஸாநாயக்க,நிமல் ஸ்ரீபால டி சில்வா,மஹிந்த அமரவீர,பைஷர் முஸ்தபா உள்ளிட்ட அமைச்சர்களோடு பாராளுமன்ற உறுப்பிர்களான இம்ரான் மஹ்ரூப், மற்றும் அங்கஜன் உடன்  அமைச்சின் செயலாளர்,சிரேஷ்ட அதிகாரிகள் என பலரும் கலந்து சிறப்பித்த மேற்படி நிகழ்வில் அவர் மேலும் கூறியதாவது.


என்னை நம்பி இப்பதவியை ஒப்படைத்திருக்கும் ஜனாதிபதிக்கும் எனது நன்றிகளை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்வதுடன் எனது தாய் நாட்டின் இறைமையைக் பேணிக் காப்பதுடன் சிரேஷ்ட அநுபவசாலியான அமைச்சர் சுவாமிநாதனுடன் இணைந்து பணியாற்றுவதை ஒரு வரப்பிரசாதமாக கருதுகிறேன்.

பிரதமரின் வழிகாட்டலில் எனது அமைச்சுப் பணிகள் தொடரும் அதேவேளை இனமத பேதங்களுக்கு அப்பால் நின்று மகத்தான மக்கள் பணி செய்ய நான் திடசங்கற்பம் பூணுவதோடு இங்கு வருகை தந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது மேலான நன்றிகளை சமர்ப்பிக்கிறேன் எனவும் குறிப்பிட்டார்.இந்நிகழ்வில் பிரதியமைச்சரின் ஆதரவாளர்களும் பெருந்தொகையாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...