பெரியநீலாவணை இஸ்லாமிக் ரிலீப் வீட்டுத் திட்டத்தில் கழிவு நீர்த் தொகுதியை அமைக்க நடவடிக்கை!(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பெரிய நீலாவணை இஸ்லாமிக் ரிலீப் வீட்டுத் திட்டத்தில் கழிவு நீர்த் தொகுதியை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் அரச தொழில் முயற்சி, கண்டி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் ஆலோசனையின் பேரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சருமான சட்டமுதுமாணி ரவூப் ஹக்கீம் இதற்கான பணிப்புரையை விடுத்துள்ளார்.

இதன் பிரகாரம் பெரிய நீலாவணை இஸ்லாமிக் ரிலீப் வீட்டுத் திட்டத்தில் கழிவு நீர்த் தொகுதியை அமைப்பதற்கான பொறிமுறைத் திட்டத்தை விசேட தொழில்நுட்பங்களுடன் தயாரித்து, பூர்வாங்க நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளரை நகர திட்டமிடல், நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.சி.எம்.நபீல் அறிவுறுத்தியுள்ளார்.

இத்திட்டத்திற்கான நிதியை அமைச்சர் ரவூப் ஹக்கீம், தனது நகர திட்டமிடல், நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சின் இந்த ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்வதற்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் 14 நாட்களுக்குள் மேற்படி திட்ட வரைவு ஆவணங்களை தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் அனுமதிக்காக சமர்பிக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலின்போது கல்முனை மாநகர சபைக்கு பெரிய நீலாவணை வட்டாரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தற்போதைய மாநகர முதல்வர் றகீப் அவர்கள் விடுத்த அழைப்பின் பேரில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், இவ்வீட்டுத் திட்டத்திற்கு விஜயம் செய்து, இங்குள்ள மக்கள் எதிர்கொண்டுள்ள கழிவு நீர்ப் பிரச்சினையை நேரடியாக கண்டறிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...