புதிய மாகாணசபைத் தேர்தல்முறை முஸ்லிம்களுக்கு ஏன் பாதகமானது?


வை எல் எஸ் ஹமீட்
நாம் பாகம்-3 இல் புதிய மாகாணசபைத் தேர்தல்முறை கிழக்கிற்கு வெளியே எவ்வாறு முஸ்லிம்களைப் பாதிக்கும் என்று பார்த்தோம்.

60:40 ஐ 50:50 ஆக மாற்றியது முஸ்லிம்களுக்கு நன்மையா?
—————————————————————-
முஸ்லிம் கட்சிகள் மேற்படி தேர்தல்திருத்தத்தை ஆதரித்துவிட்டு பெருமையாகப் பேசிய இருவிடயங்கள் 60:40 என்பதை 50:50 ஆக ஆக்கிவிட்டோம். அத்தோடு எல்லை நிர்ணய அறிக்கையை அமுல்படுத்துவதற்கு 2/3 பெரும்பான்மை தேவை என்ற சரத்தையும் கொண்டுவந்திருக்கின்றோம்; என்பதாகும்.

இதுவரை இந்த 50:50 எந்த வகையில் முஸ்லிம்களுக்கு நன்மையானது; என்று எந்தவொரு கட்சியும் மக்களுக்கு கூறவில்லை. மீண்டும் மீண்டும் முஸ்லிம்களுக்கு நன்மையானது; என்று கூறுகின்றார்களேதவிர எந்தவகையில் நன்மையானது; என்று தெளிவுபடுத்துகின்றார்கள்; இல்லை.

நீங்களே தீர்மானியுங்கள்
———————————
50:50 என்றாலும் 60:40 என்றாலும் அங்கத்தவர் தீர்மானிக்கப்படுவது வாக்குகளின் விகிதாசாரக் கணிப்பீட்டின்படி. கிழக்கிற்குவெளியேயுள்ள பிரச்சினை முஸ்லிம்களுக்காக உருவாக்கப்படுகின்ற தொகுதிகளுக்குள் எத்தனை வீதமான முஸ்லிம்கள் உள்வாங்கப்படப் போகின்றார்கள். எத்தனை வீதமானவர் வெளியில் விடப்படப் போகின்றார்கள்; என்பதாகும்.

முஸ்லிம்களுக்கு அண்ணளவாக உரித்துடைய 44 ஆசனங்களுள் கிழக்கில் பெறக்கூடிய அதிகூடிய ஆசனங்கள் 13 ஆகும். சிலவேளை ஒன்றால் வித்தியாசப்படலாம். அதேநேரம் சாத்தியமான தொகுதிகள் ஏழு ஆகும். எனவே கிழக்கிற்கு வெளியே நாம் பெறவேண்டிய ஆசனங்கள் 31 ஆகும். இவற்றில் 6 தொகுதிகளாயின் 25 ஆசனங்கள் பட்டியலில் இருந்து பெறவேண்டும். தேசியக்கட்சிகள் புண்ணியத்தில் ஒன்றிரண்டை நியமித்தாலேயொழிய முஸ்லிம்கட்சிகளினூடாக கிழக்கிற்குவெளியே பட்டியலில் ஆசனம் பெறுவது அரிதாகும்.சிலவேளை தொகுதிகள் ஒன்றிரண்டு அதிகரித்தால் அந்த அதிகரிப்பும் கிடைக்கும்.

இப்பொழுது சிந்தியுங்கள்! தொகுதி 60% ஆகின்றபோது தொகுதிகளின் எண்ணிக்கை சற்று அதிகரிக்கும். அப்பொழுது நமக்கும் இரண்டொரு தொகுதிகள் கிழக்கிற்குவெளியே அதிகரிக்கலாம். அல்லது அதிகரிக்காமலும் போகலாம். அதிகரித்தால் நன்மை. அதிகரிக்காவிட்டால் நம்மைப்பொறுத்தவரை சமன்பாட்டில் மாற்றமில்லை.

சிலர் நினைக்கின்றார்கள் 60:40 ஆகின்றபோது 40% பட்டியலில் இருந்துதானே பட்டியல் அங்கத்தவர் பெறவேண்டும். அது 50% ஆகும்போது பட்டியல் அங்கத்தவர் எண்ணிக்கை அதிகரிக்குமே! அது நமக்கு சாதகம்தானே; என்று.
இவ்வாறுதான் இந்தக்கட்சித் தலைவர்களும் நினைத்து இதனை 50:50 ஆக ஆக்கிவிட்டு பெருமையடித்தார்கள்.

பட்டியல் அங்கத்தவர்கள் 50% இல் இருந்து அல்லது 40% இல் இருந்து பங்கிடப்படுகின்றார்கள்; என்பதே இத்தேர்தல் முறைக்கு முரணான ஒரு கருதுகோளாகும்.

ஒரு மாவட்டத்திற்குரிய அங்கத்தவர்களின் எண்ணிக்கையில் 50% தொகுதி என்பது சரி. எனவே அந்த 50% தொகுதி வேட்பாளர்களையும் எஞ்சிய 50 விகிதத்திற்குரிய வேட்பாளர்களை பட்டியலிலும் நியமனம் செய்து இரு நியமனப்பத்திரம் தாக்கல் செய்கின்றோம்; என்பதும் சரி. மாவட்டத்தில் 50% விகிதமான அங்கத்தவர் பட்டியலிலிருந்து நியமிக்கப்படுகின்றார்கள்; என்பதும் சரி.

எது பிழையென்றால் ஒவ்வொரு கட்சிக்குமுரிய பட்டியல் அங்கத்தவர்கள் அந்த 50:50 இல் 50% இலிருந்து அல்லது 60:40இல் அந்த 40% இலிந்து பங்கிடப்படப்படுகின்றார்கள்; என்பதுதான் பிழை. இன்னும் சுருக்கமாக சொல்வதானால் “பட்டியலிலிருந்து பங்கிடப்படுகின்றார்கள்” என்பதுதான் முழுக்க முழுக்க பிழையான கூற்றாகும். பட்டியலிலிருந்து நியமிக்கப்படுகின்றார்கள்; என்பதும் பட்டியலிலிருந்து பங்கிடப்படுகின்றார்கள்; என்பதும் வெவ்வேறாகும்.

பங்கிடப்படுவது பெறுகின்ற வாக்குகளுக்கேற்ப மொத்த அங்கத்தவர்களை 100% ஆக எடுத்து விகிதாசாரப்படியாகும். அதில் ஒவ்வொரு கட்சிக்கும் உரித்தான ஆசனங்களில் தொகுதியில் வெற்றிபெற்றவர்கள்போக எஞ்சியோர் பட்டியலில் இருந்து ( சிலவேளை தோற்றவர்கள்) நியமிக்கப்படுகின்றார்கள்.

எனவே, பட்டியல் 50% என்றால் என்ன? 40% என்றால் என்ன? ஒரு கட்சிக்கு உரித்தான ஆசனங்களில் தொகுதியில் வென்ற ஆசனங்கள்போக மிகுதி ஆசனங்கள் கிடைத்தே ஆகும். சிலவேளைகளில் overhang வரலாம். ஆனாலும் நமக்கு உரித்தான ஆசனம் கிடைக்கும். எனவே நமக்கு உரித்தான ஆசனத்தைப் பெறுவதில் இந்த 50:50 அல்லது 60:40 மாற்றத்தை ஏற்படுத்தப்போவதில்லை.

நமக்கிருக்கின்ற கேள்வி நம்மால் இந்தத் தொகுதிகளில் எத்தனை வீதமான வாக்குகளைப் பெறமுடியும்; என்பதாகும். தொகுதி கூடும்போது கூடுதலான வாக்குகளைப் பெறமுடியுமா? அல்லது குறைகின்றபோது பெறமுடியுமா? எனவே 60% இலிருந்து 50% விகிதமாக தொகுதிகளைக்குறைத்ததன் மூலம் நமக்கு மேலதிகமாக கிடைக்கக் கூடிய ஒன்றிரண்டு தொகுதிகளை இழந்து விட்டோம்; என்று கூறலாம்; அல்லது 50% ஆயினும்அல்லது 60% ஆயினும் இவ்வாளவுதான் முஸ்லீம்களுக்கு ஆக்கக்கூடிய தொகுதிகள் என்றால் சமன்பாட்டில் மாற்றமில்லை.

எனவே, நமது பிரச்சினைக்கும் இந்த 60:40 அல்லது 50:50 இற்கும் பெரிய தொடர்பேதும் இல்லை.

50:50 பெரிய கட்சிகளுக்கு பாதிப்பா?
————————————————-
50:50 பெரிய கட்சிகளுக்கு பாதிப்பு என்று சில முஸ்லிம் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்; இன்னும் நம்புகிறார்கள். விகிதாசாரமுறையில் கணிப்பிடுவதால் எவ்வாறு பெரிய கட்சிகளுக்கு பாதிப்பு வரமுடியும்? மேற்கூறிய விளக்கத்தை சிந்தித்துப் பாருங்கள். அவ்வாறு பெரிய கட்சிகளுக்கு பாதிப்பு என்று சொல்கின்றவர்களால் மொட்டையாக ‘ பாதிப்பு’ என்று சொல்லாமல் எவ்வாறு என்று சொல்வார்களா?

பெரியகட்சிகளுக்கு 50:50 ஓ அல்லது 60:40 ஓ பாதிப்பு எதுவுமில்லை. ஒரேயொரு விடயம் இடைவெளி அதிகரிக்க அதிகரிக்க overhang அதிகரிக்கும். இடைவெளிகுறைய overhang குறையும். அவ்வளவுதான். அதற்கு overhang ஐ சமப்படுத்துகின்ற சமன்பாட்டைச் செய்யலாம். அது வேறாகப் பார்க்கப்பட வேண்டும்.

—————————————————————-
ஆனால் 50:50 பெரிய கட்சிகளுக்கு பாதிப்பு என்று இவர்கள் சொல்வதும் சரி.
—————————————————————

பெரிய கட்சிகளுக்கு எந்தளவு பாதிப்பு என்றால் ஒருபோதும் அவை தனித்து ஆட்சியமைக்கவே முடியாது. அந்தளவு பாதிப்பு. பெரிய கட்சிகள் அவ்வாறான ஒன்றுக்கு சம்மதமளித்து விட்டார்களே! என்று இவர்கள் புளகாங்கிதம் அடைந்ததும் சரி. எங்கு பிழையென்றால் ,"

******************************************
மதினியை மணப்பெண்ணாக நினைத்ததுதான்
********************************************
பிழை”.
********

அதாவது 2012ம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அதேமுறைதான் இது என்று நம்பியதுதான் பிழை. உள்ளூராட்சித் தேர்தலின் புதிய திருத்தமும் அதேமுறை; என நம்பித்தான் 70:30 ஐ 60:40 ஆக்கினார்கள். அதுதான் இது என்று நம்பித்தான் மாகாணசபைத் தேர்தல் திருத்தத்தை அவர்கள் 60:40 ஆக கொண்டுவந்தபோது அதனை 50:50 ஆக்கி சாதித்து விட்டதாக நினைத்தார்கள். அந்த நினைவில் வந்துதான் “ அதிர்வு” நிகழ்ச்சியில் ‘ வெற்றிபெற்ற கட்சிக்கு பட்டியலில் இடம் இல்லை’ என்றார்கள்.

அதுவேறு தேர்தல்முறை, இதுவேறு தேர்தல்முறை என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. பெரிய கட்சிகள் இந்த 50:50 இற்கு உடன்பட்டபோதாவது இவர்கள் புரிந்திருக்க வேண்டும், “ அது இது இல்லை; அது இதுவானால் பெரியகட்சிகள் ஒருபோதும் உடன்பட்டிருக்க மாட்டார்கள்;” என்று.

அது எது?
————-
அது எதுவென்றால், உதாரணமாக 50% தொகுதி, 50% பட்டியல் என்றால் தொகுதியில் வெற்றிபெற்ற கட்சிகள் பெற்ற வாக்குகளைக் கழித்துவிட்டு எஞ்சிய வாக்குகளைக் கூட்டி தொகுதிகளில் வெற்றிபெறாத கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதாசாரத்திற்கேற்ப எஞ்சிய 50% மும் பங்கிடப்படும்.

இங்கு 60:40 எனும்போது பட்டியலில் 40% ஆசனமே பங்கிடப்படும். அது 50% விட குறைவு என்பதால் எங்களுக்குப் பாதிப்பாகும். 70:30 என்றால் பங்குடப்படும் ஆசனம் 30% ஆகும். அது எங்களுக்கு இன்னும் பாதிப்பாகும். 50;50 எனும்போது பங்கிடப்படும் ஆசனம் 50% ஆகும். அதாவது ஆசனம் அதிகரிக்கும். அது எங்களுக்கு இலாபமாகும். புதிய முறையும் இதுதான் என்று நினைத்துவிட்டார்கள். அதுதான் பிழையாகிவிட்டது.

இந்த முறையில் 50% விகிதமே பங்குடப்படுகின்றது; என்பது சரி. ஆனால் தற்போதைய முறையில் அது பிழை. பங்கீடு நூறு வீதம் விகிதாசாரம். தொகுதிபோக எஞ்சியது பட்டியல் ( அல்லது தோற்றவர்கள்) நியமனம்.

இந்த முறையில் எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாது. ஏனெனில் ஒரு கட்சி பெறக்கூடிய அதிகூடிய ஆசனம் 50% மாத்திரமே. அது எப்போதும் சாத்தியமுமில்லை. 50% இருந்தாலும் இன்னுமொன்று தேவை. இந்த முறையை பெரியகட்சிகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

எல்லைநிர்ணய அறிக்கையை நிறைவேற்ற மூன்றில் இரண்டு வேண்டுமென்ற நிபந்தனை ஒரு சாதனையா? என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

( தொடரும்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்