நான் ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை - ஜாகிர் நாயக்

Image result for ஜாகிர் நாயக்

மதத்தின் பெயரால் நான் வன்முறையை தூண்டிவிட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என மலேசியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஜாகிர் நாயக் தெரிவித்துள்ளார்.

வங்காளதேசத்தின் டாக்கா பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பிரபல இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சு தூண்டுகோலாக அமைந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக அவரை கண்காணிக்கும்படி வங்கதேச அரசு இந்திய அரசினை கேட்டுக்கொண்டது.

அதன்படி, இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் மீது மதங்களுக்கு இடையே பகைமையை தூண்டியதாக தேசிய புலனாய்வு முகமை அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. 

இந்தியாவில் ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான இஸ்லாமிக் ஆய்வு மையத்துக்கு தொடர்புடைய 10 இடங்களிலும் சோதனை நடைபெற்று, அவரது இஸ்லாமிய ஆய்வு மையத்துக்கு 5 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது. மேலும், புலனாய்வு அமைப்புகள் அந்த அமைப்பின் அனைத்து நிறுவனங்களையும் கண்காணித்து வருகிறது.

இதையடுத்து, தற்போது மலேசியா நாட்டில் தலைமறைவாக உள்ள ஜாகிர் நாயக், தன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறும், ரத்து செய்யப்பட்ட பாஸ்போர்ட் போன்றவற்றை மீண்டும் அளிக்க உத்தரவிடுமாறும் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.எம். சவந்த் மற்றும் ரேவதி மோகிதே அமர்வு, ஜாகிர் நாயக் மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுகள் குறித்து தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறையிடம் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. 

மேலும், தனது பாஸ்போர்ட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரியதற்கு பதிலளித்த நீதிபதிகள், இந்த வழக்கு மிகப்பெரிய தண்டனைக்குரிய வழக்கு என்றும், ஜாகிர் நாயக் நீதிமன்றத்திலோ, விசாரணை ஆணையத்திடமோ ஆஜர் ஆகாமல் எந்த முடிவும் எடுக்க இயலாது எனவும் கூறினர். 

மேலும், ஜாகிர் நாயக் மீது விதிக்கப்பட்ட எவ்வித தடையையும் நீக்க முடியாது என்றும் பாஸ்போர்ட் பெற வேண்டும் எனில் அதற்கு தனியாக மனு அளிக்க வேண்டும் எனவும், ஜாகிர் நாயக் நேரில் ஆஜராகவும் நீதிபதிகள் கடந்த மாதம் அறிவுறுத்தி இருந்தனர். 

தேடப்படும் நபர்களை ஒப்படைக்க இந்தியா - மலேசியா இடையிலான உடன்படிக்கையின்படி, ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என மலேசிய அரசை இந்திய அரசின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஜாகிர் நாயக்குக்கு நிரந்தர குடியுரிமை அளிக்கப்பட்டு விட்டதால் அவரை இந்தியாவுக்கு வெளியேற்ற முடியாது என மலேசிய பிரதமர் மஹதிர் முஹம்மது திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தனக்கு அரசியல் அடைக்கலம் அளித்துள்ள மலேசிய பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ள ஜாகிர் நாயக், இஸ்லாமிய மதத்தின் பெயரால் நான் வன்முறையை தூண்டிவிட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என தெரிவித்துள்ளார்.

எனக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யாக புனையப்பட்டவை. மனிதாபிமானம் அற்றவையாகும். நல்ல மனிதராக இல்லாத ஒருவர் நல்ல முஸ்லிமாக இருக்கவே முடியாது என நான் எப்போதுமே வலியுறுத்தி வந்திருக்கிறேன்.

வன்முறைக்கு தூண்டியதாக என்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக, அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் உருவாக்குவதுதான் எனது நோக்கமாக இருந்துள்ளது.

2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை நான் செய்துவந்த ஆயிரக்கணக்கான பிரசார கூட்டங்களில் எனது பேச்சுக்கு எதிராக இந்தியாவில் உள்ள முஸ்லிம் அல்லாத மக்களிடமிருந்து எந்த கண்டனமும் வந்ததில்லை.

ஆனால், என்னை குறிவைத்து தாக்குதல் தொடங்கிய பின்னர், நான் பேசிய வீடியோ பதிவுகளை முறைகேடாக திருத்தி வெளியிட்டு நான் வன்முறையை தூண்டிவிட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. நான் ஒருபோதும் வன்முறையை தூண்டியதில்லை என அந்த அறிக்கையில் ஜாகிர் நாயக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...