காதர் மஸ்தான்


மன்னார் முசலி பிரதேச செயலகத்துக்குட்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தில் யாவர்க்கும் வீடு செயற்திட்டத்தின் கீழ் மாதிரி கிராமம் ஒன்றை அமைப்பதற்கு வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர்  சஜித் பிரேமதாஸவுடன் பேசப்பட்டு வருவதாக மீள்குடியேற்றம்  புனர்வாழ்வு மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

முள்ளிக்குளம் பகுதியில் கடந்த 2007ல் இடம்பெயர்ந்த நிலையில் தற்போது அந்த மக்களின் காணி வீடுகளில்கடற்படையினர் குடியிருக்கின்றனர் அதனைத் தொடாந்து மக்கள்  தங்கள் காணி வீடுகளை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தங்கள் வீடுகளின் அருகில் உள்ள பற்றை காடுகளில் குடில் அமைத்து வசித்து வருகினறனர் அந்த மக்களை நேரில் அதன்பின் நேற்றைய தினம்(5) சென்று பார்வையிட்டார் பிரதியமைச்சர் காதர் மஸ்தான் 

அதன்பின் முள்ளிக்குளம் பரலோக மாதா ஆலயத்தில் பங்குத்தந்தை அருட்பணி லோரன்ஸ் தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் இவ்வாறு  தெரிவித்தார்.

குறித்த மக்கள் சந்திப்பில் பிரதி அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மீண்டும் தமது சொந்த நிலங்களில் மீள்குடியேறியுள்ள முள்ளிக்குளம் கிராம மக்களுக்கு  வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளின் அடிப்படையில் யாவர்க்கும் வீடு செயற்திட்டத்தின் கீழ் மாதிரிக் கிராமம் ஒன்றை அமைத்து மக்களுக்கு முதற்கட்டமாக 50 வீடுகள் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளார் .

முள்ளிக்குளம் மக்கள் நீண்ட காலமாக யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து மடு பகுதியில் வசித்து மீண்டும் தமது சொந்த நிலங்களுக்கு வருகை தந்தாலும் மக்களுடைய காணிகள் இன்னும் கடற்படையினர் வசம் இருப்பது கவலையளிக்கின்றது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப்பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது கடற் படையினர் வசமுள்ள பொது மக்களது காணிகள் விடுவிக்கப்படும் என மக்களுக்கு வாக்குறுதிகள் வழங்கப்பட்டாலும் அது இன்றுவரை நிறைவேற்றப்படாமல் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும் என்றாலும் இது தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது என்னுடைய பொறுப்பாகும்.

என்னுடைய அமைச்சினூடாக தற்காலிகமாக இப்பகுதியிலுள்ள மன்னார் மறைமாவட்ட ஆலயத்திற்குச் சொந்தமான  30 ஏக்கர் காணி சுத்தம் செய்யப்பட்டு உங்களை இவ்விடத்தில் தற்காலிகமாக குடியமர்த்த நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றேன்.

மன்னார் மறைமாவட்ட நிர்வாகம் இந்த மக்களுக்கு மறைமாவட்டத்துக்கு சொந்தமான காணிகளை துப்பரவு செய்து குடியமர்த்துவதற்கு விருப்பம் தெரிவித்தமைக்கு என்னுடைய 
மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதுமாத்திரமல்லாமல் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச உடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் மக்களுக்கான சொந்த காணிகள் இருக்குமானால் அவர்களுக்கான வீடுகளை வழங்குவதில் எந்த தடையும் இல்லை என்றும் எத்தனை வீடுகள் வேண்டுமானாலும் அம்மக்களுக்கு வழங்குவதற்கு தமது அமைச்சு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அந்த வகையில் இங்குள்ள 50 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக வீடுகளை வழங்க வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றது  என்ற மகிழ்ச்சியான செய்தியை இவ்விடத்தில் பதிவு செய்து கொள்கின்றேன்.

அதுமாத்திரமல்லாமல் இங்குள்ள பலரால் தம்முடைய வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக வேலைத்திட்டங்களைச் செயற்படுத்துமாறு கோரிக்கை விடுத்தனர் அதற்கமைவாக எனது அமைச்சு மாத்திரமின்றி எந்தெந்த அமைச்சின் ஊடாக மக்களுக்கான நல்ல செயற்திட்டங்களை கொண்டு சேர்க்க  முடியுமோ அவற்றை இப்பகுதிக்கு கொண்டுவருவது எனது பொறுப்பும் கடமையுமாகும்.

அத்துடன் இங்குள்ள இருபத்து மூன்று குடும்பங்களுடைய வீடுகள் கடற்படையினர் தம்வசம் வைத்திருப்பதாகவும் அதில் அவர்களது குடும்பங்கள் தங்கி இருப்பதாகவும் கூறப்படுகின்றது. உண்மையாகவே இது வேதனைக்குரிய விடயமாகும் தமது சொந்த வீடுகளில் வேறொருவர் குடியிருக்க நாம் வேலிக்கு வெளியில் நின்று பார்த்துக் கொண்டு இருப்பதை அனுமதிக்க முடியாது எனவே இது தொடர்பில் ஜனாதிபதி அவர்களுடன் பேசி உங்களுக்கான ஒரு நல்ல பதிலை விரைவில் வழங்குகின்றேன்.

அதிகம் பேசுவதை விட நான் என்னுடைய செயற்பாடுகள் மூலம் உங்களை திருப்தி படுத்த முயற்சிக்கின்றேன் அந்த வகையில் நான் என்னுடைய கடமையை என்னால் முடியுமான வரை சரியாக செய்வேன்.

மிக விரைவாக முள்ளிக்குளம் பகுதிக்கு வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களுடன் யாவர்க்கும் வீடு செயற்திட்டத்துடன் உங்களை வந்து சந்திக்க வேண்டுமென்று எல்லாவற்றுக்கும் பொதுவானது இறைவனை வேண்டிக் கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் மீள் குடியேற்றம் புணர்வாழ்வு மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் முள்ளிக்குளம் பரலோக மாதா ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி லோரன்ஸ் மற்றும் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர்கள்  உட்பட கிராம அமைப்புகளின் தலைவர்கள் மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share The News

Post A Comment: