நாட்டின் எதிர்கால தலைவர் மீண்டும் பொலன்னறுவையில் இருந்து வரவேண்டும் - காதர் மஸ்தான்நாட்டினுடைய எதிர்கால தலைவர் பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து வரவேண்டும் என மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

புத்தெழுச்சி பெறும் பொலன்னறுவை மாவட்டம் என்னும் திட்டத்தின் கீழ் கதுருவெல சாஹிரா ஆரம்ப பாடசாலையில் புதிதாகக் கட்டப்பட்ட இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் பிரதியமைச்சர் காதர் மஸ்தான் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

ஸாஹிராக் கல்லூரியின் ஆரம்ப பாடசாலை கட்டிட திறப்பு விழா எனும் ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் உங்களை நான் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

உங்களது மாவட்டத்திலிருந்து எங்களது நாட்டுக்கும் எமது கட்சிக்குள் ஒரு சிறந்த தலைவரைத் தந்திருக்கிறீர்கள். அதுமாத்திரமன்றி பொலநறுவை மாவட்டத்திற்கு வரலாற்றில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மூலமாகவே அதிகளவிலான நிதியாக 6,000 கோடி ரூபாய்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

அதுமாத்திரமல்லாமல் இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப் படுவது எமது வடக்கு மாகாணத்துக்கு என்பதுடன் இன்னும் பல்வேறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார் என்பதையும் இந்த இடத்தில் நாம் ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புகின்றோம்.

காலத்துக்கு ஏற்ற ஊழலற்ற ஒரு சமூகத்தை உருவாக்கவும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் ஒரு ஜனாதிபதி நமக்குக் கிடைத்திருப்பது ஒரு வரப்பிரசாதமாகவே கருதவேண்டியுள்ளது.

அதுமாத்திரமல்லாமல் நாட்டில் அதிகமான மக்கள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு மரணமடைகிறார்கள் . அந்த நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் சில கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டாலும், அது ஒரு நிரந்தரமான தீர்வாக அமையாது என்பதை கருத்திற் கொண்ட ஜனாதிபதி அவர்கள் ஆசியாவிலேயே மிகச் சிறந்த தரமான சிறுநீரக நோயாளிகளுக்கான வைத்தியசாலை ஒன்றை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் இந்த இடத்தில் தெரிவித்து கொள்கிறேன்.

கடந்த காலங்களில் நாட்டில் காணப்பட்ட குடும்ப ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஜனநாயக அடிப்படையில் மக்களுக்கானது மக்களுக்கு கொண்டு சேர்க்கும் ஜனாதிபதி அவர்களுடைய சேவைகளை இன்று சிலர் விமர்சித்தாலும் காலப்போக்கில் அது வரலாறாக மாறும் அல்லது எதிர்கால வரலாறு இவ்வாறானதொரு தலைவரை மீண்டும் பெற முடியாதா என்று எதிர்பார்க்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

சாதாரணமாக ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஒருவர் இந்த நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகக் காணப்படுவது பொலன்னறுவை மாவட்ட மக்களுக்கு ஓர் கௌரவமாகும்.

அதுபோல இந்த ஸாஹிரா ஆரம்ப பாடசாலையில் இருந்து கற்று இந்த நாட்டுக்குத் தேவையான ஒரு பொருத்தமான தலைவரை மீண்டும் பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து நாம் எதிர்பார்க்கின்றோம்.

அதற்காக இந்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு ஆசிரியர்களின் வழிகாட்டல்ளே
இந்த சமூகத்தை சரியாக வழிநடத்துகின்ற நல்ல பிரஜைகளை உருவாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பல ஆசிரியர்கள் மாணவர்கள் தங்களுடைய சொந்த பிள்ளைகளாக நினைத்து அவர்களுக்கு கற்பிக்கின்றார்கள் அது மாத்திரமன்றி நானறிந்த வகையில் பலர் இரகசியமான முறையில் உதவியும் செய்கின்றார்கள்.

எனவே இவ்வாறு கல்வியை கற்று ஒரு உயர்ந்த இடத்திற்கு செல்லும் மாணவர்கள் தங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் அதற்கான உதவிகளை வழங்கியவர்களையும் என்றுமே மறந்து விடாதீர்கள்.

அதுமாத்திரமல்லாமல் உதவக்கூடிய நிலையில் உள்ள அனைவரும் கல்விக்காக அதிகளவில் தங்களுடைய உதவிகளை செய்ய வேண்டும் என்றும் அதற்காக தங்களுடைய நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டுமெனவும் நான் வினயமாக வேண்டிக் கொள்கின்றேன்.

ஏனெனில் கல்வியால் மாத்திரமே ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்க முடியும் என்பது என்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயம் ஆகும்.

இந்த நாட்டில் ஒற்றுமை என்பது அனைவருக்கும் தேவையான ஒன்றாக காணப்படுகின்றது ஏனெனில் சிறு சிறு குழுக்களால் ஏற்படுகின்ற வன்முறைகள் நாட்டினுடைய எதிர்கால இருப்பை கேள்விக்குறியாக்கி கொண்டிருக்கின்றது அந்த வகையில் சக வாழ்வு என்பது நம்முடைய கட்டாய கடமைகளில் ஒன்றாக தற்பொழுது மாறி இருக்கின்றது என்பதால் அதனை நாம் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கின்றேன்.

கல்வி கற்ற ஒரு நல்ல சமூகம் இருக்குமாக இருந்தால் பிரச்சினைகள் ஏற்படுகின்ற போது அதற்கான உடனடி தீர்வுகளை பெற்றுக் கொள்வதிலும் பிரச்சினைகளை தவிர்ப்பதிலும் இலகுவான நடைமுறைகளை பின்பற்ற முடியும்.

மேலும் சில நிகழ்வுகளில் அரசியல்வாதிகளை விட கல்வியாளர்களுக்கு அதிக கௌரவம் கொடுக்கப்படுகின்றது. அது உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். அரசியல்வாதிகள் இன்று அரசியலில் இருப்பார்கள் நாளை மக்களால் இல்லாமலாக்க செய்யப்படுவார்கள் ஆனால் கல்வி அறிவு என்பதை அவ்வாறு இல்லாமல் ஆக்க முடியாது ஆகவே கல்வியால் ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்க எல்லாவற்றுக்கும் பொதுவானது இறைவனை வேண்டிக் கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

பொலன்னறுவை கதுருவெல ஸாஹிரா ஆரம்ப பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய, இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க, பிரதியமைச்சர் காதர் மஸ்தான்,  பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உட்பட உயரதிகாரிகள் பாடசாலை மாணவர்கள் மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...