இமாம் றிஜா

நல்லாட்சியின் வேலைத்திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கானதே தவிர மக்கள் பிரதிநிதிகளுக்கானது அல்ல 
என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள் குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி பிரதியமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.

மீள்குடியேற்ற புனர்வாழ்வு வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சினூடாக புனர்வாழ்வு அதிகார சபையின் கீழ் சுயதொழில் கடன் திட்டத்தின் பயனாளிகளான மீள் குடியேற்றப்பட்ட குடும்பங்கள், சமூகத்துடன் மீளிணைக்கப்பட்ட பயனாளிகள் ஆகியோரின் உற்பத்திபொருட்களின் கண்காட்சியும், சுய தொழிலுக்கான கடனுதவி வழங்கும் நிகழ்வும் இன்று மட்டக்களப்பு கல்லடி பிரிட்ச் மார்கட் பகுதில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் பிரதியமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி பிரதியமைச்சர் என்ற வகையில் கௌரவ சுவாமிநாதன் அமைச்சருடன் இணைந்து இந்த நிகழ்வில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

அத்துடன் மட்டக்களப்பில் மனித அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட சிலருக்கு இழப்பீட்டுக் கொடுப்பனவை நேரடியாக இணைந்து வழங்குவதிலும் மகிழ்ச்சியடைகின்றேன்.

எமது அமைச்சு இழப்பீடுகளை வழங்குவதுடன் நின்றுவிடாமல் பலதரப்பட்ட மக்களுக்கும் நிவாணன்களை வழங்குதல் வாழ்வாதார உதவிகளை வழங்குதல், இடம்பெயர்ந்தவர்களை மீள் குடியமர்த்துதல், அவர்களுக்கான வீடுகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறான செயற்றிட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றது.

அது மாத்திரமல்லாமல் சுய தொழில்களை செய்வதற்கான அதனுடன் சம்பந்தப்பட்ட இலக்கு வழியிலான  கடன் திட்டங்களையும் வழங்குகின்றோம்.

இக்கடன்கள் குறைந்த வட்டியிலும், நீண்டகால தவணை அடிப்படையிலும் அவரவருக்கு ஏற்ற அவர்கள் தொழில் செய்வதற்கு ஏற்றதாகவும் வழங்கிவைப்படுகின்றது.

இத்தகைய கடன்களின் ஊடாக உங்களது வாழ்வாதாரம் உயர்த்தப்படுவதோடு நாட்டினுடைய தேசிய பொருளாதாரத்திலும் அது தாக்கம் செலுத்துகின்றது.

சுய தொழிலை ஊக்குவிக்கும் முகமாகவும் மக்களிடம் உற்பத்திப்பொருட்களை அறிமுகம் செய்யும் முகமாகவே இவ்வாறான கண்காட்சிகளையும் ஏற்பாடு செய்கின்றோம்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட நமது சகோதர சகோதரிகளுக்கு இவ்வாறு உதவிகள் வழங்கப்படுவதுடன் அவர்களது திறமைகளை வெளிக்கொணரும் முகமாகவும் நாம் இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்கின்றோம்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்து நிற்கும் எமது மக்களுக்கான சேவைகளை வழங்க எமது அமைச்சு எப்பொழுதும் தயாராக இருக்கின்றது என்பதுடன் அது தொடர்பான புதிய வேலைத்திட்டங்களையும் நாம் ஆரம்பிக்க முனைகின்றோம்.

நல்லாட்சி அரசாங்கம் இவ்வாறு பல வேலைத்திட்டங்களைக் கொண்டுவரும்போது அதனை சிலர் விமர்சனம் செய்கின்றனர் ஆனாலும் இந்த அரசின் அனைத்து வேலைத்திட்டங்களும் மக்களுக்கானதே தவிர மக்கள் பிரதிநிதிகளுக்கானது அல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

எவ்வாறு இந்த ஆட்சி சிறுபான்மையினரின் பெரும்பான்மையான ஒத்துழைப்புடன் கொண்டுவரப்பட்டதோ அதுபோல இந்த ஆட்சியைச் சரியாக கொண்டு செல்ல சிறுபான்மையினர் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக மீள்குடியேற்ற புனர்வாழ்வு, வடக்கு மாகாண அபிவிருத்தி  மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டீ.எம் சுவாமிநாதன் கலந்துகொண்டதுடன் கௌரவ விருந்தினராக அவ்வமைச்சின் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் அமைச்சின் செயலர் கலாநிதி பொன்னையா சுரேஷ் ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்த நிகழ்வில் உயரதிகாரிகள் மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share The News

Post A Comment: