Aug 25, 2018

சமூகத்திற்காக தனது கட்சியை எதிர்த்த இளம் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான்புதிய மாகாணசபை சட்டமூலம் திருகோணமலையில் உள்ள இனங்களுக்கிடையே குழப்பநிலையை ஏற்படுத்துவதால் நான் இதற்கு எதிராக வாக்களிக்கிறேன் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். புதிய மாகணசபை திருத்த சட்டமூலம் தொடர்பான விவாதம் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

மாகணசபை தேர்தல் தொகுதி உருவாக்கம் என்பது நீண்ட நடைமுறைகளை கொண்டு செய்யப்படவேண்டிய ஒன்றாகும். புவிவியல் காரணிகள் சனத்தொகை இனவிகிதாசாரம்மாவட்ட பிரதிநிதித்துவம், மாகாண பிரதிநிதுத்துவம் என பல விடயங்களை இதன்போது கவனத்தில் கொள்ள வேண்டும்.ஆயினும் மிக குறுகிய காலத்துக்குள் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு சமர்பிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு குறைபாடுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.

குறிப்பாக  சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதித்துவம் இழக்கப்படுகின்றமை, மாகாணசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாமல் பழைய முறையில் உள்ள உறுப்பினர் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு அந்த மாவட்ட எல்லைகள் பிரிக்கப்பட்டமை. இதனால் மாவட்டத்துக்கு உள்ளேயே இது பல குளறுபடிகளை உண்டுபண்ணியுள்ளது.

நான் பிரதிநிதித்துவப்படுத்தும் திருகோணமலை மாவட்டத்தை பொறுத்தவரை பத்து மாகாணசபை உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவேண்டும்.அதனால் அங்கு ஐந்து தேர்தல் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும். அதாவது ஐம்பது வீதம் தொகுதி ஐம்பது வீதம் விகிதாசாரம் ஊடாகவும் தெரிவுசெய்யப்பட வேண்டும். ஆகவே இந்த ஐந்து தொகுதிகளை உருவாக்கும்போது அங்குள்ள இனச்சமநிலை, புவியியல் காரணிகள், புள்ளிவிபரம்,உள்ளிட்ட பல காரணிகள் கவனத்தில்கொள்ளப்படவேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது.
குச்செவெளி பிரதேச செயலகங்களுடன் கோமடங்கடவள, மொரவேவே போன்ற பிரதேசங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஐந்து கிராமசேவகர் பிரிவுகள் முதூர் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டு தம்பலகாமத்தின் பத்து கிராமசேவகர் பிரிவுகள் கிண்ணியாவுடன் இணைக்கப்பட்டு ஒரு குழப்பகரமான நிலையில் ஒரு எல்லை நிர்ணயம் அமைந்துள்ளது.

இது மாவட்டத்தில் உள்ள இனங்களுக்கிடையில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாகவும் ஒருவரை ஒருவர் சந்தேககன்கொண்டு பார்க்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடந்த காலங்களில் பத்து மாகாணசபை உறுப்பினர்களில் நான்கு முஸ்லிம் உறுப்பினர்களும் தமிழ் சிங்கள சமூகங்களில் இருந்து மூன்று உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர். 43% வீதம் வாழும் முஸ்லிம்களும்  30% வீதம் வாழும் தமிழர்களும் 27% வீதம் வாழும் சிங்களவர்களாலும் இந்த வீதத்திலேயே உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டு வந்தனர்.
இந்த புதிய எல்லை நிர்ணயம் ஊடாக இந்த சமநிலை பாதிக்கும் ஆபத்துக்கள் நிறையவே உள்ளது. எனவே இவ்வாறான குறைபாடுகளால் நாம் என்ன நோக்கத்துக்காக புதிய தேர்தல் முறையை உருவாக்க முயற்சிக்கின்றோமோ அந்த நோக்கத்தை எம்மால் அடைய முடியாது. விகிதாசார முறையில் உள்ள குறைபாடுகளை களைய கொண்டுவரவுள்ள இந்த புதிய சட்டமூலமும் எல்லை பிரிப்பும் சற்று ஆழமாக நீண்ட கால முன்னெடுப்புடன் செய்யப்படவேண்டும். இவ்வாறு அவசரமாக குறுகிய காலத்துக்குள் உருவாக்கினால் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாம் எதிர்நோக்கிய அதே சிக்கல்களை இதன்மூலமும் எதிர்கொள்ள நேரிடும். இதனால் ஆட்சி அமைப்பதிலும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதிலுமே காலமும் நேரமும் செலவாகுமே தவிர மக்களுக்கு தேவையான சேவைகளை எம்மால் செய்ய முடியாது.

ஏற்கனவே மாகாணசபைகள் என்பது மக்களுக்கு எதுவித பிரயோசனமற்றது. இது வீணே நிர்வாகத்தை இழுத்தடிக்கின்ற ஒரு நிலைமை என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவுகிறது. இன்று சமர்பிக்கப்பட்டுள்ள இந்த புதிய சட்டமூலம் அந்த கருத்தை மேலும் உண்மைப்படுத்தும் விதமாக உள்ளது. மேலும் முன்னர்  இந்த தேர்தல் முறைக்கு ஆதரவளித்த பலரும் இன்று இதற்கு எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றன.ர் கடந்த ஆட்சியில் இது சம்மந்தமாக மூச்சு விடாமல் ஆதரவளித்துவிட்டு இன்று இதற்கு எதிராக கருத்து வெளியிடுவதும் வேடிக்கையானதே.
ஆதரவளித்தவ்ர்களே எதிர்க்கும் இந்த முறை பற்றி நாம் சிந்தித்தே ஆகவேண்டும். அதிகார பரவலாக்கம் மக்களை சென்றடைய வேண்டுமாயின் விகிதாசார முறையில் உள்ள சில குறைபாடுகள் களையப்பட்டு புதிய தேர்தல் முறை உருவாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.என்றாலும் அது மேலே குறுப்பிட்ட முறைகளை அடிப்படையாக கொண்டு நீண்டகால ஆய்வுடன் செய்யப்பட வேண்டும்.

எனவே அவசரமாக செய்யப்பட்ட இந்த சடமூலம் பல குறைபாடுகளை கொண்டிருப்பதாலும் சிறுபான்மை மக்களின் பிரதிநிதுத்துவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாலும் நான் இந்த சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிக்கின்றேன்
.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network