அஷ்ரப் நகர் பிரதேச எல்லைக் கிராமங்களில் யானைத்தொல்லை கட்டுப்படுத்த மகஜர்


ஒலுவில் அஷ்ரப் நகர் பிரதேச எல்லைக் கிராமங்களில் அதிகரித்து காணப்படும் காட்டு யானைகளின் தொல்லையைக் கட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதென, ஒலுவில் அஷ்ரப் நகர் காஸான் கேணி காணி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அகமதுலெப்பை மிஸ்பாக், இன்று தெரிவித்தார்.
இந்நிலை தொடர்பாக அம்பாறை மாவட்ட செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரில், அப்பகுதி மக்களின் பிரச்சினை எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
ஒலுவில் அஷ்ரப் நகர், சம்புநகர், ஹிறாநகர் ஆகிய பிரதேசங்களில், யானைத் தொல்லை அதிகரித்து காணப்படுவதால், அங்கு வாழும் மக்கள் பெரும் அச்சத்துடனேயே வாழ்ந்துவருகின்றனர் என்றும் இதனால், அவர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் காட்டு யானைத் தொல்லை காரணமாக, மக்கள் மாலை நேரங்களில் தங்களது குடியிருப்பை விட்டு வெளியேறி, இரவில் பாதுகாப்பான இடங்களில் தங்குவதாகவும், பின்னர், அதிகாலையிலேயே மீண்டும் குடியிருப்புக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், குழந்தைகளின் கல்வி நடவடிக்கை, குடியிருப்பாளர்களின் வருமானம், தொழில், நோயாளர்கள் என பலரும் பல விதமாக பாதிக்கப்படுகின்றனர் என்றும், அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இரவு நேரங்களில் கிராமங்களுக்குள் உட்புகும் யானைகள் கூட்டம், வீட்டுத் தோட்டங்களையும் சேனைப் பயிர்களையும் சேதப்படுத்தி வருவதால் ,விவசாயிகள் பௌருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, யானைத் தொல்லையைக் கட்டுப்படுத்த, மின்சார வேலியை அமைத்துத் தருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, அம்மகஜரில் கோரப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...