கடமைகளை உளசுத்தியுடன் செய்வார்களானால் எவ்வித சிக்கலும் ஏற்படாது - பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம்எம்.வை.அமீர்
பல்கலைக்கழக அபிவிருத்தியில் அக்கறைகொன்டதன் காரணமாகவே உபவேந்தர் நியமனத்துக்காக பலர் முட்டி மோதியதாக தான் கருதுவதாகவும் அவ்வாறு அவர்கள் உண்மையாக பல்கலைக்கழகத்தின் நலனில் அக்கறையுள்ளவர்களாக இருந்தால் தன்னுடன் இணைந்து செயற்பட முன்வருமாறு அறைகூவல் விடுப்பதாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டு நான்காவது உபவேந்தராக கடமைபுரிந்த பேராசிரியர் நாஜீம் ஐந்தாவது முறையாகவும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக தெரிவுசெய்யப்பட்டு பதவியேற்றிருந்த நிலையில் பல்கலைக்கழகத்தில் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வும் கல்விசார், நிருவாக மற்றும் கல்விசாரா ஊளியர்களுடனான சந்திப்பும் 2018-08-23 ஆம் திகதி அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் கேட்போர் கூடத்தில், பதில் பதிவாளர் ஏ. தையூப் தலைமையில் இடம்பெற்றது.
கலாநிதி றமீஸ் அபூவக்கரின் வழிகாட்டலில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பேராசிரியர் நாஜீம்,
தனது முதலாவது உபவேந்தர் காலப்பகுதியில் பல்கலைக்கழகத்தின் கல்விசார் விடயங்களிலும் ஏனைய விடயங்களிலும் நேர்மையாக செயற்பட முற்படுகையில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டதாகவும் சவால்கள் தனக்குப் புதிய விடயமல்ல என்றும் தற்போது பதவியேற்றுள்ள இந்த காலப்பகுதியிலும் இன்னும் உத்வேகத்துடன் செயற்பட உள்ளதாகவும் இதில் பல்கலைக்கழக சட்டக்கோவை, பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் சுற்றுநிருபங்கள் மற்றும் நிதிப்பிரமானங்களுக்கு அமைவாகவே தனது செயற்பாடுகள் அமையும் என்றும் இவைகளை மீறி தான் எதனையும் செய்யப்போவத்தில்லை என்றும் சட்டம் மற்றும் சுற்றுநிருபங்களை மீறும் எதற்கும் தான் எப்போதும் துணைனிற்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.
பல்கலைக்கழகத்தில் கடமைபுரியும் ஒவ்வொருவரும் அவரவரது கடமைகளை உளசுத்தியுடன் செய்வார்களானால் எவ்வித சிக்கலும் ஏற்படாது எனத் தெரிவித்த உபவேந்தர், சம்மந்தமில்லாத விடயங்களில் தங்களது மூக்கை நுளைப்போர் அவைகளில் இருந்து தவிர்ந்துகொள்வது நல்லது என்றும் தெரிவித்தார்.
நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கலை கலாசாரா பீடத்தின் அரசியல் விஞ்ஞான பிரிவின் தலைவர் எம்.எம்.பாசில், மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் சிந்தனையில் உருவான தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வளர்சிகள் தொடர்பாகவும் கடந்தகால உபவேந்தர்கள் ஆற்றிய பங்களிப்புகள் தொடர்பாகவும் பல்கலைக்கழகத்தை தரவரிசையில் முன்னிலைக்கு கொண்டுவர தற்போதைய உபவேந்தர் எடுத்து வரும் பங்குகள் குறித்தும் உரையாற்றிய அதேவேளை கசப்புணர்வுகளை மறந்து பல்கலைக்கழக நன்மைக்காய் ஒன்றுபடுமாறும் கேட்டுக்கொண்டார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...