-நாச்சியாதீவு பர்வீன்-

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 28ஆவது பேராளர் மாநாடு, கண்டி, பொல்கொல்ல மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளக அரங்கில் இன்று (05) நடைபெற்றது. இதன்போது, கட்சியின் தலைவராக, அமைச்சர் ரவூப் ஹக்கீம் அங்கிகரிக்கப்பட்டார்.

முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாத்தில், கடந்த வெள்ளிக்கிழமை (03) மாலை நடைபெற்ற கட்டாய உச்சபீடக் கூட்டத்தில், மீண்டும் கட்சித் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட  அமைச்சர் ஹக்கீமின் தெரிவை அங்கிகரிக்கும் முகமாக, பேராளர்கள் ஒருமித்த குரலில் தக்பீர் முழங்கினர்.

பேராளர்களின் அங்கிகாரத்தை ஏற்றுக்கொண்ட அமைச்சர் ஹக்கீம், அக்கூட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட கட்சியின் பதவிநிலை அலுவர்களைப் பிரகடனம் செய்தார். அதில், கட்சியின் தவிசாளராக ஏ.எல்.அப்துல் மஜீத், செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், பொருளாளராக எம்.எஸ்.எம்.அஸ்லம் ஆகியோரும், மேலும் ஏனைய பதவிநிலை அலுவலர்களும் அறிவிக்கப்பட, பேராளர்கள் அவ்விவரத்தை அங்கிகரித்தனர்.

தொடர்ந்து, கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பரால் ஆண்டறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் பிரதானமாக, கட்சி எதிர்நோக்கிய  முக்கிய அரசியல் சவால்களும் நெருக்கடிகளும் எடுத்துரைக்கப்பட்டன. முக்கியமாக, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபைச் சட்டமூலம், முஸ்லிம் சமூகத்தை பாதிக்கும் ஒன்று எனவும், அதன்போது அது சாணக்கியமாக எதிர்கொள்ளப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டது.

அத்தோடு கட்சியின் ஸ்தாபகத்தலைவர் பிரதிநிதித்துவப்படுத்திய அம்பாறை நகரிலும், தற்போதைய தலைவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டி மாவட்டத்திலும், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இனவன்முறைகள், முஸ்லிம் காங்கிரஸை ஒடுக்குவதற்காகச் செய்யப்பட்ட சதி நடவடிக்கைகள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஒரு வருட காலத்தில், முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய பல்வேறு பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதில், பலத்த சவால்களை முஸ்லிம் காங்கிரஸ் முகங்கொடுத்தது எனவும், எனினும் அவை வெற்றிகொள்ளப்பட்டன எனவும், செயலாளர் நிஸாம் காரியப்பர், மேலும் குறிப்பிட்டார்.

Share The News

Post A Comment: