Sep 9, 2018

அம்பாரைப் பள்ளிவாயலுக்கு அரசாங்கத்தால் வெறும் 10 லட்சம் நட்ட ஈடு



அம்பாரையில் நடந்த கலவரத்தில் அம்பாரைப் பள்ளிவாயல் கடுமையாகச் சேதமாகியிருந்தது யாவரும் அறிந்ததே.
இந்த சேதங்களை அம்பாரை மாவட்ட செயலகம் 35 லட்சமாக அளவிட்டிருந்தது.
இத்தனை பாரிய இழப்புகளைச் சந்தித்த பள்ளிவாயலை புணர் நிர்மாணம் செய்ய வெறும் 35 லட்சங்கள் போதாதென்று அதனை நிராகரித்த பள்ளி நிர்வாகம் இழப்புகளுக்கான தங்களது அளவீடு 47 மில்லியன் எனக்கணித்து அதற்கான ஆவணத்தை மாவட்ட செயலகத்திற்கு சமர்ப்பித்திருந்தது.
இந்த நிலையில் பள்ளிவாயலின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இருந்த வாகனத்தை இனவாதிகள் எரித்ததனால் மேல் தட்டின் கொங்ரீட் கடுமையாக எரிந்திருந்ததையும் மேதட்டில் உள்ள டைல் தரையில் வெடிப்புகள் விழ ஆரம்பிப்பதையும் சுட்டிக்காட்டி இந்தப் பள்ளிவாயல் மக்கள் கூடுவதற்கு உகந்தது அல்ல இது மொத்தமாக இடிக்கப்படவேண்டும் என்று பள்ளிவாயலில் மாவட்டசெயலகம் நோட்டீஸ் ஒட்டியிருக்கிறது. உத்தியோகபூர்வமாக இடிக்கப்படவேண்டிய பள்ளியில்தான் இன்றுவரைக்கும் மக்கள் தொழுது கொண்டிருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட செயலகம் மீண்டும் ஒரு கணிப்பினைச் செய்து இழப்புகளை 27 மில்லியனாகக் கணித்திருந்தது.இந்தத் தொகையை பெற்றுத் தருவதாக பள்ளிவாசல் நிருவாகத்திற்கு பல அரசியல்வாதிகளால் வாக்குறுதியும் வழங்கப்பட்டன.
அம்பாரைக் கலவரம் சம்பந்தமாக ஆரம்பத்தில் இருந்தே களத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் குரல்கள் இயக்கம் நிலைமைகளைக் கண்டறிய சென்ற வாரம் அம்பாரைப் பள்ளிவாசலுக்குச் சென்ற போது பல கசப்பான உண்மைகளைக் கண்டறிந்தது.
இறுதியாக மாவட்ட செயலகத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட 37 மில்லியன் அமைச்சரவையினால் அங்கீகரிப்பட்டதென்று சுமார் இரு மாதங்களுக்கு முன்னர் சமூகவலைத் தளங்களிலும் பத்திரிகைகளிலும் செய்திகள் வந்திருந்தன.
அதற்கு என்ன நடந்தது என்று ஆராய்ந்து கொண்டு போனபோது குரல்கள் இயக்கம் சில உண்மைகளைக் கண்டறிந்தது.
சென்ற ஜூலை மாதம் 12ம் திகதி புனர்வாழ்வு அமைச்சினால் அம்பாரைப் பள்ளிவாயலுக்கு நட்ட ஈடு வழங்குவதற்கான வேண்டுகோள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 31ம் திகதி நிதியமைச்சின் அவதானத்திற்குட்பட்டதன் பின்னர் அமைச்சரவையினால் இடித்து மீளக்கட்டப்படவேண்டிய பள்ளிவாயலுக்கு வெறும் பத்து லட்சங்களை அமைச்சரவை ஒதுக்கியிருக்கிறது. அந்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு வட கிழக்கை மையமாகக் கொண்ட முஸ்லிம் கட்சிகளின் எந்த அமைச்சர்களும் பங்கு கொள்ளவில்லை.
இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு முழுமையாக இடித்து மீளக்கட்டப்பட வேண்டிய இந்தப் பள்ளிவாயலுக்கு அதனை மீளக் கட்டப் போதுமான நிதியைக் கொண்டுவர முடியாத அரசியல்வாதிகளாகத்தான் முஸ்லிம் அரசியல்வாதிகள இருக்கின்றனர் என்பது கவலைக்குரிய விடயம்.
மேற்கொண்டு என்ன செய்வது என்று கலந்துரையாடுவதற்காக அம்பாரைப் பள்ளிவாயலின் நிர்வாகத்தினரை குரல்கள் இயக்கம் சென்ற புதன்கிழமை சந்திந்தது. குரல்கள் இயக்கம் சார்பாக அதன் பிரதான செயற்பாட்டாளர் றாஸி முஹம்மத் ஜாபீர்,மற்றும் சட்டத்தரணிகளான முஹைமின் காலித்,றுஸ்தி ஹஸன்,றதீப் அஹமட்,முகமட் சாஜித் ஆகியோர் கலந்துகொண்டனர்.பள்ளிவாயல் சார்பாக அதன் தலைவர்,செயலாளர்,உப தலைவர்,பொருளாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முஸ்லிம் அரசியல்வாதிகளால் கைவிடப்பட்ட அம்பாரைப் பள்ளிவாயலை மீளக் கட்டியெழுப்புவது சம்பந்தமாக அங்கு கலந்துரையாடப்பட்டதுடன் நிர்வாகத்திற்கு குரல்கள் இயக்கம் பல ஆலோசனைகளையும் வழங்கியது.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network