Sep 7, 2018

ஜக்கிய நாடுகள் மாநாட்டில் இலங்கைக்கான ஜக்கிய நாடுகள் நிரந்தர பிரதிநிதி ஏ.எல்.ஏ அசீஸ் உரை


ஜ.நா. இலங்கைப் பிரநிதி - தூதுவர் அஸீஸ்

கொத்தணிக்குண்டுகளில் இருந்து உலகை விடுவிக்கும் நோக்கினை நடைமுறை படுத்துவதில் பாரிய அர்ப்பணிப்பு, கருத்தொருமித்த தொலைநோக்கு, கூட்டு முயற்சிகள் முக்கியமானவை" ஜெனிவாவில் இன்று நடைபெற்ற கொத்தணிக்குண்டுகள் குறித்த சர்வதேச உடன்படிக்கை மீதான 8 ஆவது அங்கத்துவ நாடுகளின் மாநாட்டில் தலைமைத்துவத்தை பொறுப்பேற்று பேசுகையில், ஜெனீவாவிலுள்ள ஐ நா செயலகத்திற்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி தூதுவர் ஏ.எல்.ஏ. அஸீஸ் அவர்கள் கூறினார் (9 MSP -2019) .
செப்டம்பர் 3, 2018 அன்று தொடங்கிய மூன்று நாள் மாநாட்டில், கொத்தணிக்குண்டுகளின் தயாரிப்பு, சேமிப்பு, பரிமாற்றம் மற்றும் பயன்படுத்துதலை தடை செய்தல் தொடர்பான மனிதாபிமான ஆயுதப் பரவல் தடை மாநாட்டில் இணைந்து கொண்டதற்காக இலங்கை விசேடமாக பாராட்டப்பட்டது. இலங்கை இச் சர்வதேச உடன்படிக்கையில் மார்ச் 01, 2018 அன்று 103 வது அங்கத்துவ நாடாக இணைத்துக்கொள்ளப்பட்டது .
2009 மே மாதம் முடிவுக்கு வந்த மூன்று தசாப்த கால ஆயுத மோதலை தொடர்ந்து, நாட்டில் நல்லிணக்கம் மற்றும் நிலையான அமைதி என்பவற்றில் அடையும் முன்னேற்றம், தொடர்பாகக் குறிப்பிட்ட தூதுவர் அஸீஸ் அவர்கள், "வெற்றிகரமான தேசிய முயற்சிகளின் மூலம் கட்டமைக்கப்பட்ட இலங்கையின் தலைமைத்துவம், பிற தேசங்களில் அமைதியையும் எல்லோரையும் உள்ளடக்கியதுமான சமூகங்களை உருவாக்கும் முயற்சிகளுக்கு முன்னுதாரணமாக அமையும் " என கூறினார்.
அங்கத்துவ நாடுகளின் 9 ஆவது மாநாட்டிற்கு தூதுவர் அஸீஸ் அவர்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்வதேச உடன்படிக்கையின் 10 வது ஆண்டு பூர்த்தியை நிறைவு செய்யும் வேளையில் இத்தெரிவு நடை பெற்றுள்ளது. 2020 க்கான மீளாய்வு மாநாட்டிற்கான ஊக்குவிப்பு சக்தியாகவும் ஒரு முக்கியமான திருப்பு முனையாகவும், தூதுவர் அஸீஸ் அவர்களின் தலைமைத்துவம் அமையும். பரிந்துரைகள் வழங்குதல், நடவடிக்கை ஆலோசனைகள் அளித்தல், ஒருங்கிணைப்பு மற்றும் மூலோபாய வழிகாட்டல், சிவில் சமூகத்தை உள்ளடக்கிய பல பங்குதாரர் தளத்தில் செயல்படுதல் என்பவற்றை இலங்கையின் தலைமைத்துவம் முற்படுத்தி செப்டம்பர் 2019 வரை தொடர்ந்தியங்கும்.
தூதுவர் அஸீஸ், மேலும் தனது ஏற்புரையில், 2015 முதல் இலங்கை அரசு எடுத்த மனிதாபிமான ஆயுதப் பரவல் தவிர்ப்பு முயற்சிகளில், இலங்கை காட்டிய புதிய அணுகுமுறை பொது மக்களின் தேவைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு என்பவற்றை சமநிலைப்படுத்தி அபிவிருத்தியை மேற்கொள்ளும் நோக்கில் அமைந்தது எனக் குறிப்பிட்டார். நிலக்கண்ணி வெடிகளை தவிர்ப்பதற்கான ஒட்டாவா உடன்படிக்கையில் இலங்கை கடந்த ஆண்டு சேர்ந்து கொண்டமையானது உலக அரங்கில் இலங்கை மீதான நன் மதிப்பை மேலும் உயர்த்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை பிரதிநிதிகள் குழுவில் இராணுவ தலைமை வெளிக்கள பொறியாளர் மேஜர் ஜெனரல் குமார பீரிஸ், உதவி நிரந்தர பிரதிநிதி திருமதி. சமந்தா ஜயசூரிய, மற்றும் இராஜதந்திர ஆலோசகர் ஷஷிகா சோமரட்ன ஆகியோர் பங்குபற்றினர். இலங்கையிலுள்ள சிவில் அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான திரு. வித்யா அபேகுணவர்தன மற்றும் யானித்ரா குமாரகுரு ஆகியோரும் இந்த மாநாட்டில் பங்குபற்றினர்
கொத்தணிக்குண்டுகளின் பயன்பாடு சம்பந்தமான மாநாடானது 104 நாடுகளை அங்கத்தவர்களாக கொண்ட ஒரு மனிதாபிமான அடிப்படையிலான சட்டரீதியான அமைப்பாகும்.
இது கொத்தணிகுண்டுகளின் தயாரிப்பு, சேமிப்பு, பரிமாற்றம் மற்றும் பயன்படுத்துதலை தடை செய்தலுக்கு மேலதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைத்தால், இடர் குறைப்புக் கல்வி, மற்றும் கையிருப்பிலுள்ள கொத்தணிக்குண்டுகளை அழித்தல், பாதிப்பில் இருந்து உயிர் பிழைத்தவர்களுக்கான ஒத்துழைப்பு மற்றும் உதவிக்கான ஒரு கட்டமைப்பை வழங்குதல் போன்றவற்றை பிரதான நோக்கமாக கொண்டதாகும். .
ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பணியகம்
ஜெனிவா 05 செப்டம்பர் 2018
நன்றி: Ashraff A Samad
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post