கோத்தபாயவுக்கு பாதுகாப்பு வழங்க தயார் - பிரதமர்முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு பாதுகாப்பு வழங்கத் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

தனக்கு பாதுகாப்பு தேவை என அதிகாரபூர்வமாக கோத்தபாய கோரினால் பொலிஸ் பாதுகாப்பு வழங்கத் தயார்.தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுகின்றது என கோத்தபாய கருதினால், அரசாங்கத்திடம் பாதுகாப்பு கோர முடியும்.

கூட்டு எதிர்க்கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக கோத்தபாயவிற்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.ஜனாதிபதி கொலை சதி குறித்த தகவல்களைஅடிப்படையாகக் கொண்டு அரசியல் சதித் திட்டங்களை தீட்ட வேண்டாம்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு நீக்கப்பட்ட போது கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் வாய் திறக்கவில்லை.எனினும், தற்பொழுது ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சி காண்பித்து வரும் கரிசனை ஆச்சரியமளிக்கின்றது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு நானும், ஜனாதிபதியும் உத்தரவிட்டுள்ளோம். விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் அனைத்து விடயங்களையம் அம்பலப்படுத்த முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...