பிணையில் இன்று விடுதலையானார் ஹிஸ்புல்லாஹ்!

(எம்.எஸ்.எம்.நூர்தீன்)

இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மீது லங்கா பில்டேர்ஸ் கோப்பரடிவ் சொஸையிட்டி என்ற நிறுவனத்தின் தலைவர் பிரபாத் உக்வத்தவினால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டு வழக்கில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரது மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் உட்பட 4 பேரும் இரண்டு இலட்சம் ரூபா ரொக்கப்பிணையிலும் 25 இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் வாழைச்சேனை நீதிமன்றினால் இன்று (19.09.2018) புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரது மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ், முகம்மடட் தாஹீர் மற்றும் அபுல்ஹசன் அல்லது றஊப் ஆகிய நான்கு பேர் மீதும் லங்கா பில்டேர்ஸ் கோப்பரடிவ் சொஸையிட்டி என்ற நிறுவனத்தின் தலைவர் பிரபாத் உக்வத்தவினால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் நிர்மாணப் பணிகளுக்காக இணைத்துக்கொள்ளப்பட்ட ஒப்பந்த நிறுவனத்தின் 9 கோடியே 19 இலட்சம் ரூபா பெறுமதியான இயந்திரங்கள் மற்றும் பொருட்களைக் கடத்தியதுடன், அந்தப் பொருட்கள் குறித்து நம்பிக்கையற்ற தகவல்களை வெளிப்படுத்தியதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் வாழைச்சேனை பொலிசார் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள படி இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உட்பட அவரது மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் உட்பட 4 பேருக்கும் எதிராக வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்தனர். அந்த வழக்கை விசாரணை செய்த வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.சி.எம்.றிஸ்வான் குறித்த நான்கு பேரையும் எதிர் வரும் 3.10.2018 அன்று ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து இன்று (19.09.2018) புதன்கிழமை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரது மகன் உட்பட நான்கு பேரினதும் சார்பாக அவர்களின் சட்டத்தரணிகள் நகர்வு மனுவொன்றை நீதிமன்றில் சமர்ப்பித்தனர்.

இந்த நகர்வு மணுவினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.சி.எம்.றிஸ்வான் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரது மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ், முகம்மட் தாஹீர் மற்றும் அபுல்ஹசன் அல்லது றஊப் ஆகிய நான்கு பேரையும் தலா ஒருவருக்கு இரண்டு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் அதே போல தலா ஒருவருக்கு 25 இலட்சம் ரூபா பெறுதியான இரண்டு பேர் சரீரப்பிணையிலும் விடுதலை செய்தார்.

அத்தோடு இந்த விவகாரம் தொடர்பில் சுதந்திரமான விசாரணைக்கு இடையூறாக இருக்க கூடாது எனவும் வெளிநாடு செல்வதாயின் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு தெரியப்படுத்தி விட்டே செல்ல வேண்டும் எனவும் இதன் போது நீதவான் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...