Sep 3, 2018

சமூகத்தின் பாதுகாப்பினைக் கருதியே அஸ்வர் கடைசிவரை மஹிந்தவுடன் இருந்தார்


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
முன்னாள் அமைச்சர் ஏ. எச்.எம். அஸ்வர் கடும் விமர்சனங்களுக்கு மத்தியிலும் கடைசிவரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இருந்தது முஸ்லிம்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் தூரநோக்கிலாகும் என நெடுஞ்சாலைகள் வீதிப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வரின் முதலாவது நினைவு தினத்தை முன்னிட்டு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் ஒழுங்கு செய்திருந்த நினைவு தினக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டுரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைப்பின் தலைவர் பீ. எம். பாரூக் தலைமையில் கொழும்பு அல் - ஹிதாயா கல்லூரியின் பஹார்தீன் கேட்போர் கூடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை  நடைபெற்ற மேற்படி நிகழ்வில் பேசிய அமைச்சர் மேலும் கூறியதாவது,
ஆயிரக்கணக்கானவர்கள் நாளாந்தம் எம்மை விட்டு பிரிகின்றார்கள். அவர்களில் ஒரு சிலரை மாத்திரம் இன்றும் நாம் நினைவு கூருகின்றோம். ஒரு சமூகத்தினுடைய - தேசத்தினுடைய வெற்றிக்காக யாரெல்லாம் பாடுபடுகின்றார்களோ அவர்களை நாம் இன்று மாத்திரமல்ல இன்னும் 500 ஆண்டுகள் சென்றாலும் அவர்கள் அவ்வாறு நினைவு கூரப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.
முன்னாள் அமைச்சர் மர்ஹும் அஸ்வரை நான் 1989ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு வந்த போதுõன் முதன்முதலாகச் சந்தித்தேன். அன்று அவர் அரசாங்கத்தில் இருந்தார். நான் எதிர்க்கட்சியிலே இருந்தேன். நான் அந்த கால யுத்த பிரச்சினை மற்றும் இதர பிரச்சினை காரணமாக அரசாங்கத்தை கடுமையாக விமர்சிப்பேன். அவர் அரசாங்கத்தை ஆதரித்துப் பேசுவார். இப்படி கடுமையான சொற்போர்கள் பாராளுமன்றத்திலே நிகழும். அவரிடம் நல்ல பண்புகள் இருந்தது. எவ்வளவுதான் சொற்போர்கள் நிகழ்ந்தாலும் வெளியிலே வந்தவுடன் அவர்  இளம் வாலிபனாக இருந்த என்னிடம் இது பற்றி ஒன்றும் சிந்திக்கக் கூடாது. அப்படி பேசுவது உங்களுடைய கடமை. இது என்னுடைய கடமை என்று ஒன்றாகக் கூட்டிச் செல்வார்.
அவர் மிக சுவாரஸ்மாகப் பேச பழகக் கூடிய ஒருவர். நாங்கள் சந்திக்கின்ற எவ்வேளையிலும் நல்ல பண்புகளை எங்களுக்குச் சொல்லுவார்.
பாராளுமன்றத்திலே பாங்கு சொன்னவுடன் அதே நிமிடத்தில் தொழும் மனிதராக அஸ்வர் இருந்தார்.  பாராளுமன்றத்தில் எவ்வேலைகள் இருந்தாலும் நான் பள்ளிக்குச் செல்கின்ற வேளையில் எனக்கு முன்பதாக அஸ்வர் அங்கே உள்ள தொழும் அறையில் இருப்பார்.  ஒருவேளை கூட பிந்தி வந்து தொழும் மனிதராக அவரை நான் காணவில்லை. வேறு எந்த முஸ்லிம் எம்.பியோ அமைச்சரோ அவ்வாறு நேரத்துக்கு வரமாட்டார்கள். உரிய நேரத்தில் தொழுவதில்வேலைகளைச் செய்வதில் அவர் மிகவும் அவதானமாக இருந்தார். 
மர்ஹும் அஸ்வர் இறுதிக் காலத்திலே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோடு இருந்ததினால் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஆனால்,மஹிந்த ராஜபக்ஷவோடு இறுதிக் காலம்வரை இருந்து  முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்காகஎவ்வளவு தூரம் விமர்சித்த போதிலும் அதுபற்றி அவர் கவலைப்படாமல் தூர நோக்கம் கருதி எடுத்த முயற்சிகள் ஏராளம். அதுதான் அரசியல் தலைமைத்துவத்திற்கு இருக்க வேண்டிய பண்பு. விமர்சனங்கள் பற்றி நாம் ஒரு போதும் கவலைப்படக் கூடாது. இந்தச் சமூகம் இன்று நல்லவிதமாக விமர்சிப்பார்கள். நாளை மோசாக விமர்சிப்பார்கள். நான் எனது 30வருட அரசியலிலே பார்த்த விடயம் இது. இவர்கள் இப்படி விமர்சிக்கிறார்களே என்று நினைத்தால் நாங்கள் தூர நோக்கம் கொண்டு அரசியல் செய்ய முடியாது. எனவேஎது சமூகத்துக்கு சரியானது என்று படுகின்றதோ அதை அந்த சந்தர்ப்பத்திலே பேசிஅந்த சந்தர்ப்பத்திலே கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு அரசியல் தலைமைகளிடம் இருக்கின்றது.
எனவே எந்த விமர்சனத்தையும் கருத்தில் எடுக்காது இறுதிவரை அவர் ஒரே அரசியல் நிலைப்பாட்டிலே இருந்தார்.  விஷேடமாக அவர் மூன்று மொழிகளிலும் திறமையாக  பாராளுமன்றத்திலே முஸ்லிம்களின் பிரச்சினை பற்றி பேசுவார். இவ்வாறு அமைச்சர்களிடம்கல்விமான்களிடம் இருந்து கொண்டு அவர் முஸ்லிம் சமூகத்துக்கு ஆற்றிய பணிகளை என்றும் மறக்க - மறுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
நிகழ்வில் விசேட பேச்சாளராக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கலந்து கொண்டதோடுமர்ஹும் அஸ்வர் பற்றிய நினைவுப் பேருரையை பேராசிரியர் ஏ.ஜீ.ஹுஸைன் இஸ்மாயில்வரவேற்புரை சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி றஷீட் எம். இம்தியாஸ்,தலைமை உரை தலைவர் கலாநிதி பி.எம்.பாறுக்நன்றியுரை முன்னாள் தலைவர் என்.எம்.அமீன் ஆகியோர் நிகழ்த்தினர்.
சிறப்பதிதிகளாக இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் சுபைர் மொஹமட் ஹம்தல்லா சைட்கொழும்பு மாநகர பிரதி மேயர் எம்.ரீ.எம்.இக்பால்,முன்னாள் அமைச்சர்களான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மற்றும் திஸ்ஸ விதாரனசப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் நிஹால் பாரூக்அஸ்வரின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன் போது மர்ஹும் அஸ்வரின் நினைவாக பாடசாலை உபகரணங்களும் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
நிகழ்ச்சித் தொகுப்பை முன்னாள் முஸ்லிம் சேவை பணிப்பாளர் அஹ்மத் முனவ்வர் தொகுத்து வழங்கினார்.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network