Oct 16, 2018

2020 ஆம் ஆண்டளவில் மின்-வணிகம் ஊடாக 04 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை இலங்கை எட்டும்!

“உலகில் வேகமாக வளர்ச்சியடைந்த பிராந்தியங்களில் ஒன்றாக தெற்காசியா வளர்ந்து வருகிறது. இப்பிராந்தியங்களின் மத்தியில் வர்த்தகத்தினை அதிகரிக்க, உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி முன்நோக்கி செல்வதற்கு சார்க் நாடுகள் பணியாற்றி வருகின்றன. மேலும், ஆசிய நூற்றாண்டை வடிவமைப்பதற்கு, ஆற்றல் மிகுந்த ஒரு பாரிய பங்களிப்பை சார்க் நாடுகள் வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக நாடுகளின் ஒட்டுமொத்த 20% சதவீதமான வர்த்தகத்துடன் ஒப்பிடும்போது, தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தின் பங்கு 05% சதவீதமாக உள்ளது” என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இஸ்லாமாபாத்தை மையமாகக் கொண்ட, சார்க் பிராந்திய வலையமைப்பின் வர்த்தகம் மற்றும் கைத்தொழில் சம்மேளனங்களின், மின்-வணிகம் மீதான பிராந்திய பட்டறையின் ஆரம்ப அமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் இதனை தெரிவித்தார்.

கல்கிஸ்ஸை, மவுன்ட்லேவினியா ஹோட்டலில் நடைபெற்ற இவ்ஆரம்ப அமர்வில், அமைச்சர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

“சார்க் பிராந்தியங்களில் குறைந்த வர்த்தகம் இருந்தபோதிலும், தெற்காசிய நாடுகளின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றங்களுக்கு பங்களிப்பு செய்யவதற்கு, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான பெரும் சாத்தியங்கள் உள்ளன. சர்வதேச தரத்திலான இந்த மின்-வணிகத்துறையானது, தெற்காசியாவில் அதன் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இருப்பினும் அது வேகமாக வளர்ந்து, தெற்காசியாவின் தொழிற்துறையினருக்கும் முதலீட்டாளர்களுக்கும் ஒரு இலாபகரமான சந்தையை வழங்குகிறது.

இப்பிராந்தியங்களில் உள்ள நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில், மின்-வணிகத்தை தழுவி பாரிய ஒத்துழைப்பு அவசியம் தேவைப்படுகிறது. இந்த பிராந்தியத்தில் மின்-வணிகத்திற்கான முக்கிய தடையாக இருப்பது, உட்கட்டமைப்பு வசதி இல்லாதது ஆகும். எந்தவொரு மின்-வணிகத்தின் முன்முயற்சியின் முதுகெலும்பாக இருக்கும் சட்டரீதியான நிதி, மூலதனம் மற்றும் தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பில், அரசாங்கங்கள் முதலீடு செய்ய வேண்டும். சவால்கள் இருந்தபோதிலும், தெற்காசிய நாடுகளில் மின்-வணிகம் மற்றும் அதனோடு தொடர்புடைய துறைகளில், வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகின்றன.

சார்க் வளையங்கள் மீதான மின்-வணிகத்தின் வளர்ச்சிக்கு, நானும் எனது அமைச்சின் அதிகாரிகளும் எங்களது முழுமையான ஆதரவை முன்வைப்போம். இந்த முன்னெடுப்பை முன்னெடுப்பதற்கு சார்க் வளையத்தின் அதிகாரிகள், இலங்கை அரசாங்க அதிகாரிகளுடன் தொடர்புகொள்ள வேண்டும். உலகளாவிய மின்-வணிக போக்குகள் வேகமாக முன்னேறி வருகிறது. தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள தற்போதைய மின்-வணிக மாதிரியில், தற்போதுள்ள உபாயங்கள், பயனர் அனுபவங்கள், கண்டுபிடிப்பு மற்றும் அளவீடுகள் ஆகியவற்றை இந்த கொழும்பு அமர்வுகள் மேற்பார்வையிடுகின்றன. முக்கியமாக இவ்அமர்வு சிறந்த நடைமுறைகளையும், ஆக்கபூர்வமாக மூலோபாயங்களுடன் ஒத்துழைப்பதற்கும் மற்றும் தற்போதைய போக்குகள் பற்றிய கொள்கை கட்டமைப்பையும் மதிப்பீடு செய்கிறது. மேலும் இவ்அமர்வு, கொள்கை வழிகாட்டல், வர்த்தகம் மற்றும் கைத்தொழில் சம்மேளனங்களுக்கான முன்முயற்சிகளைத் தோற்றுவிக்கிறது.

2015 ஆம் ஆண்டில் இலங்கையில் மின்-வணிகத்துறை வெறும் 01% சதவீதத்தினால் வளர்ச்சியடைந்துள்ளதுடன், அதன் பின் வந்த ஆண்டுகளில் 04% சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. இலங்கை மின்-வணிகத்துறையின் மொத்த வருவாயானது 2016 ஆம் ஆண்டில், 08 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டளவில், 04 பில்லியன் அமெரிக்க டொலருக்கான இலக்கை எட்டும் என இலங்கை மின்-வணிக நிபுணர்கள் கூறுகின்றனர்” என்று அமைச்சர் கூறினார்.

மின்-வணிகத்தில் நடுத்தர வர்த்தக வாய்ப்புகளை ஆராய்வதற்கான உயர்ந்த இடைக்கணிப்பு கொண்ட இந்நிகழ்வில், ஃபிரட்ரிச் நவுமன் அறக்கட்டளையின் (Friedrich Naumann Foundation for Liberty – FNF) பிராந்திய பணிப்பாளர் ரொனால்ட் மியனாடஸ் (Ronald Meinardus), பிராந்தியங்களுக்கிடையிலான வதிவிட பிரதிநிதி திருமதி.சாகரிக்கா தெல்கொட, சார்க் பிராந்திய வலையமைப்பின் வர்த்தகம் மற்றும் கைத்தொழில் சம்மேளனங்களின் தலைவர் ருவன் எதிரிசிங்க மற்றும் அதன் முன்னாள் சிரேஷ்ட உபதலைவர் வி.பி.நவாஸ் ரஜாப்டீன், செயலாளர் நாயகம் அஜித் பெரேரா மேலும், சார்க் நாடுகளிலிருந்து 20 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network