இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சி ஐ டி விசாரணைக்கு!

இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் அவரது மகன் ஹிராஸ் அஹமட், வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.தாஹீர், அபுல்ஹசன் மீது லங்கா பில்டேர்ஸ் கோப்பரடிவ் சொஸையிட்டி என்ற நிறுவனத்தின் தலைவர் பிரபாத் உக்வத்தவினால் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (03) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டு வழக்கின் இரண்டாவது தவணை இன்று வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது இதன் அடுத்த விசாரணை டிசம்பர் மாதம் 07 ஆம் திகதி என உத்தரவிடப்பட்டது. 

சந்தேக நபர்கள் நால்வரும் எதிர்வரும் 09 ஆம் திகதி கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு காலை 9.00 மணிக்கு சமூகமளித்து தங்களது வாக்கு மூலங்களை பதிவு செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

100 மில்லியன் ரூபா பெறுமதியான நிர்மாணப் பணிகளுக்கான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை கடத்தியமை தொடர்பாக வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் 2018.08.14 ஆம் திகதி குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வு தினைக்களத்தினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி பிரதிவாதிகளினால் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் விரட்டியடிக்கப்பட்டு, பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் குறிப்பிட்டிருந்தனர். 

இது குறித்து வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் கட்டிட நிர்மாண நிறுவனத்திற்கு எவ்வித தீர்வும் கிட்டாத நிலையில் பொலிஸ் மா அதிபர் ஊடாக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முறையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

சவூதிஅரேபிய நிதி உதவியின் கீழ் தனியார் பல்கலைக் கழகம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஜெயந்தியாய பிரதேசத்தில் நிர்மானிக்கப்பட்டு வருகிறது. இதில் லங்கா பில்டேர்ஸ் கோப்பரடிவ் சொஸையிட்டி என்ற நிறுவனம் மேற்கொண்டு வந்த வேலைகளை அதன் ஒப்பந்தத்தை இரத்துச் செய்து இதன் கட்டுமானப் பணிகள் பிரிதொரு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிலையில் நிறுவனத்தின் தலைமையை பொறுப்பேற்றிருந்த பிரதி அமைச்சர் மற்றும் அவரது மகன் ஆகியோர் நிர்மாணப் பொருட்களை கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

இவ்வழக்கில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்ற அமர்வு காரணமாக வருகை தரவில்லை என்பதுடன், இதில் ஹிராஸ் அஹமட், முகம்மட் தாஹீர் மற்றும் அபுல்ஹசன் ஆகிய மூவரும் சமூகமளித்தனர். 
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சி ஐ டி விசாரணைக்கு! இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சி ஐ டி விசாரணைக்கு! Reviewed by NEWS on October 03, 2018 Rating: 5