அக்குறனை வெள்ளத்திற்கு நிரந்தரத் தீர்வு!

மழை காலங்களில் அக்குறணை பிரதேசத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாணும் நோக்கில் நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று அமைச்சர்களான எம்.எச்.ஏ. ஹலீம், கபீர் ஹாசீம் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்தனர்.
முறையற்ற பாலங்களும் கட்டடங்களும் அமைத்திருப்பதானாலும் ஆறுகளின் மேலாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பாலங்கள் போதியளவு உயரத்தில் நிர்மாணிக்கப்படாமல் இருப்பதனாலும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாக அடையாளம் காணப்பட்டன.
இதுதவிர, உரிய காலங்களில் அங்குள்ள ஆறுகளிலிருந்து மண் அகழப்படாமை, ஆறுகளில் கழிவுப் பொருட்களை கொட்டுதல் போன்ற காரணங்களினால் நீர் வழிந்தோடும் பாதைகள் மூடப்பட்டுள்ளதால் இலகுவில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காரணிகளாக கூறப்பட்டன.
நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு, தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் கலாசார அமைச்சு, நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சு, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு ஆகிவற்றுடன் பேராதனை பல்கலைக்கழகம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், மாகாவலி அதிகாரசபை, நீர்ப்பாசனத் திணைக்களம் , நில அளவைகள் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை, அக்குறணை பிரதேச செயலகம், அக்குறணை பிரதேச சபை, பூஜாப்பிட்டிய பிரதேச சபை, தாழ்நில அபிவிருத்தி கூட்டுத்தாபனம் மற்றும் பிரதேச சிவில் அமைப்புகள் என்பவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய விசேட செயலணி ஒன்று இதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயலணி இப்பிரதேசத்திலுள்ள மக்களின் ஒத்துழைப்பை பெற்று மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான திட்ட வரைபொன்றை உருவாக்கி அதற்குத் தேவையான நிதியுதவியை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...