“முஸ்லிம் தேசியத்தின் விரக்தி விரதம்”


அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பர்களும் இல்லை. இதனால் மைத்திரியும், மஹிந்தவும் சந்திப்பது புதுமையும் இல்லை. அண்மையில் நடந்த இச்சந்திப்பு அரசியல் களத்தை ஒரு கலக்குக் கலக்கியுள்ளது. மஹிந்தவின் கடந்தகாலத்தைக் கிளறி, அவரின் அரசியல் இமேஜை சீரழிக்கும் பிரயத்தனங்களில் நல்லாட்சி அரசாங்கம் முனைப்புடன் செயற்படும் இக்காலத்தில், ராஜபக்ஷக்களை அரசியல் களத்திலிருந்து ஓரங்கட்டும் அரசின் வீராப்புக்கள் அதிகரித்துள்ள சூழலில், அரசின் ஆயுளைத் தீர்மானிக்கும் "பட்ஜட்" நெருங்கும் நிலையில், அதுவும் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கிய கதாநாயகன் ரணில் விக்கிரமசிங்க நாட்டில் இல்லாத நிலையில், இச்சந்திப்பு ஏன் இடம்பெற்றது?

பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, பாதுகாப்பு உயர் தரப்பினருக்கும் அரசின் உயர்மட்டத் தலைவர்களுக்கும் இடையிலான நெருக்கம் குறைந்து வரும் சூழல், மேலும் வெளிநாடுகளின் தலையீடுகள் என்பவற்றால் அரசாங்கத்தின் செல்வாக்கு நாளாந்தம் மங்கிக்கொண்டு செல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டி உள்ளது. சாதாரண ஆட்டோ ஓட்டுநர் தொட்டு, அரச அதிகாரிகள் வரை எவரைக் கேட்டாலும் சலிப்புடனே பதிலுரைக்கின்றனர். குறிப்பாக, வடக்கிலும், தெற்கிலும் இந்த அதிருப்திகள் அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

விடுவிக்கப்படாதுள்ள எஞ்சிய காணிகளை மக்களிடம் கையளிப்பதற்கு அரசாங்கம் தயக்கம் காட்டுவதில் வட பகுதி மக்களுக்கு ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. “மஹாவலி அபிவிருத்தி” எனும் போர்வையில், வடக்கில் தமிழரின் சனச்செறிவை குறைக்கும் முயற்சிகளும், தென் பகுதி மீனவர்கள் வட பகுதிக்கு வந்து மீன் பிடிப்பதுடன் நின்று விடாமல், அப்பகுதிகளில் குடியிருப்புக்களை நிறுவ முயல்வதையும் தமிழ் தேசியத்துக்கு எதிரான பலவந்தங்களாகவே புலம்பெயர் அமைப்புக்கள் நோக்குகின்றன. இந்தக்கருத்தை வடக்கில் ஆழ விதைப்பதில் தமிழ் வேளாள சிந்தனாவாதிகளின் பங்குகள் பெறுமதிமிக்கவை.

இந்நிலையில் இம்மாதம் 24 ஆம் திகதி  வடமாகாண சபையின் ஆயுள் முடிவடைந்ததும் தமிழ் வேளாள சித்தாந்தம் மிகக் கடுமையாகக் களத்தில் இறங்கவுள்ளது. மிதவாதப்போக்குள்ள தமிழ் தலைமைகளை ஓரங்கட்டி, ஒட்டுமொத்த தமிழர்களின் ஆதரவையும் கடும்போக்குத் தமிழ் தலைமைகளுக்குப் பெற்றுக்கொடுக்கும் பணிகளை தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் பொறுப்பேற்கவுள்ளன. இவ்வாறு தமிழ் கடும்போக்குவாதத்தை வடக்கில் பலப்படுத்தி, வடக்கிற்கு மாத்திரமாவது சமஷ்டியைப் பெறுவதே, புலம்பெயர் அமைப்புக்களின் நோக்கம்.

இந்த நோக்கத்தை நிறைவேற்றும் நிகழ்ச்சி நிரலை ஐரோப்பிய நாடுகளில் ஒன்றுகூடிய "டயஸ்போராக்கள்" தயாரித்துள்ளதாகவும் ஒரு தகவல். ஐரோப்பாவில் உள்ள சகல தமிழர்களையும் ஒன்று திரட்டி, பெல்ஜியத் தலைநகர் புரூஸெல்ஸில் ஆர்ப்பாட்டம் நடத்தி, சமஷ்டிக் கோரிக்கைக்கு வலுச்சேர்ப்பதும் இந்நிகழ்ச்சி நிரலில் உள்ளன. நம்பிக்கையிழந்து துவண்டு போயுள்ள தமிழர்களையும், இளைஞர்களையும் இவ்வாறான செயற்பாடுகளூடாக உற்சாகப்படுத்தி தமிழ் தேசியத்துக்கு புதுவடிவம் கொடுப்பதற்கே தமிழ் வேளாளர்கள் தயாராகின்றனர்.
புலிகளின் போராட்டத்தால் பெறமுடியாது போன உரிமைகளை இனிப் பெறுவதற்கு, "டயஸ்போரா" கையாளவுள்ள பல யுக்திகளில் சிலவற்றை இப்போதிருந்தே ஊகிக்க முடிகின்றன. தமிழ் மிதவாதத்தை தோற்கடித்து கடும்போக்குவாதத்தை வளர்ப்பது, புலம்பெயர் நாடுகளில் தமிழ் தேசிய எழுச்சி விழாக்களை நடாத்துவது, இங்குள்ள தமிழர்களின் பலத்தை பிரயோகித்து, வெளிநாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பது என்பவையே அவற்றில் பிரதானமானவையாகும். சிங்கள தேசியத்துக்கு அடிபணிந்து இணங்கிச் செல்லும் மனநிலையில் தமிழர்கள் இல்லையென்பதை நிரூபிப்பதற்கான ஒரேவழி வடக்கில் கடும்பேக்குவாதத்தை வளர்ப்பதே!

இந்தக் கடும்போக்குவாதம்தான் யுத்தத்தில் இழந்தவற்றுக்கு ஈடாக அமைய உள்ளது. நாடுபூராகவுமுள்ள தமிழ் அரசியல் கைதிகளைக்கூட விடுதலை செய்யாத அரசுடன், வடக்கில் இராணுவப் பிரசன்னங்களை மட்டுப்படுத்தாத நல்லாட்சியுடன், தமிழரின் எஞ்சிய காணிகளை விடுவிப்பதற்கு கஞ்சத்தனம் காட்டும் அரச உயர்மட்டத் தலைவர்களுடன் எதையும் பேசிப்பலனில்லை, என்ற நிலைப்பாட்டில்தான் தமிழ் வேளாளச்சிந்தனை உயிரூட்டப்படவுள்ளது. இதற்கான அடித்தளம் இம்முறை நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தலில் இடப்படலாமென்பதே பலரதும் எதிர்பார்ப்பு. இதன் வெள்ளோட்ட முயற்சிகளை இம்முறை நடந்த ஐநாவின் 73 ஆவது கூட்டத் தொடரிலும் காணமுடிந்தது.

தமிழர் தரப்பும், சிங்களத் தரப்பும் தத்தமது நியாயங்களை முன்வைத்ததில் ஒரு யதார்த்தம் மறைந்து கிடந்தது. சமாதானம், ஐக்கியம், இன நல்லிணக்கம் என எந்த முயற்சிகளை முடுக்கிவிட்டாலும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வென்பது துருவப்படப் போவதே அந்த யதார்த்தத்தின் வெளிப்பாடு. இச்சூழலில் மூன்றாவது இனமான முஸ்லிம்களின் நிலை என்ன? மூன்றாவது இனமாக அடையாளப்படுத்துவதற்கான வழிகளை புலிகள் ஏற்படுத்தி இருந்தாலும் இதை சர்வதேசம் அங்கீகரிப்பதற்கான நடைமுறைகளை முஸ்லிம் தலைமைகள் செய்ததாகத் தெரியவில்லை. ஆகக்குறைந்தது இம்முறை நடந்த ஐ.நா அமர்வில் தமிழ்,சிங்கள தரப்பினர் முன்வைத்த நியாயங்களுடன் முஸ்லிம் தரப்பு நியாயங்களும் முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

சர்வதேச தரத்தில் இதற்குப் பின்னர், முஸ்லிம்கள் பலப்படுவதற்கு மிகநீண்டகாலங்கள் தேவைப்படலாம். எனவே, தேசிய அரசியலில் முஸ்லிம்களின் தேசியத்தை அங்கீகரிக்கும் அரசுகளை உருவாக்குவது, வளர்ப்பது அல்லது தோற்கடிக்கப்படவுள்ள தமிழ் மிதவாதக் கட்சிகளைக் காப்பாற்றி, புரிந்துணர்வை வளர்ப்பதூடாக வடக்கு, கிழக்கில் நிலைப்படுவது இவை பற்றியே முஸ்லிம் தலைமைகள் சிந்திக்க வேண்டும். இதை விடுத்து மஹிந்தவைப் பலப்படுத்துவது, மைத்திரியை ஸ்திரப்படுத்துவது பற்றி சிந்திப்பது உகந்ததல்ல.

_சுஐப் எம் காசிம்

“முஸ்லிம் தேசியத்தின் விரக்தி விரதம்” “முஸ்லிம் தேசியத்தின் விரக்தி விரதம்” Reviewed by NEWS on October 09, 2018 Rating: 5