ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட மாணவர்கள் கைது!

தென்கிழக்குப் பல்கலைக்கழக நிருவாக கட்டடத்தை கடந்த இரு வாரங்களாக ஆக்கிரமித்திருந்த 15 மாணவர்களை, இன்று காலை பொலிஸார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
அக்கரைப்பபற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் வருகை தந்த பொலிஸார், நிருவாகக் கட்டடத்தை ஆக்கிரமித்திருந்த மாணவர்களை கைது செய்தனர்.
தென்கிழக்கு பல்லைக்கழக நிருவாகக் கட்டடத்தை ஆக்கிரமித்திருந்த மாணவர்களை அங்கிருந்து அகன்று செல்லுமாறு ஏற்கனவே, அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதனையும் மீறி, தொடர்ச்சியாக அந்த மாணவர்கள் நிருவாகக் கட்டடத்தை ஆக்கிரமித்திருந்தமையினால், அவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் கட்டளை பிறப்பிருந்தது.
இந்த நிலையில், குறித்த மாணவர்களை கைது செய்யாமல், பொலிஸார், அலட்சியமாக நடந்து கொண்டார்கள் எனக் குற்றம் சாட்டியிருந்த பல்கலைக்கழக சமூகத்தினர், பொலிஸாருக்கு எதிராக அண்மையில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், நேற்று புதன்கிழமை இரவு, பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த பொலிஸார், நிருவாகக் கட்டடத்தை ஆக்கிரமித்திருந்த மாணவர்களை அங்கிருந்து அகன்று செல்லுமாறு வலியுறுத்தியிருந்தனர்.
அம்பாறை பொலிஸ் பிரிவுக்கான பொலிஸ் அத்தியட்சகர், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரின் தலைமையிலான பொலிஸ் குழு, இதன்போது வருகை தந்திருந்தது.
ஆயினும், அம்பாறை மாவட்டத்துக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட்ட பின்னரே, தாம் ஆக்கிரமித்துள்ள இடத்திலிருந்து விலகிச் செல்வது குறித்து தீர்மானிக்க முடியும் என்று, அங்கிருந்த மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து, குறித்த பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்து தருவதாக, அந்த மாணவர்களிடம் கூறிச் சென்ற பொலிஸார், இன்று காலை, பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து, ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருந்த மாணவர்களை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், குறித்த மாணவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.
பகிடி வதையில் ஈபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில், தகவல் தொழில்நுட்ப பீட மாணவர்கள் சிலருக்கு வழங்கப்பட்டுள்ள வகுப்புத்தடையினை நீக்குமாறு கோரி, அதே பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள், இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட மாணவர்கள் கைது! ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட மாணவர்கள் கைது! Reviewed by Ceylon Muslim on October 25, 2018 Rating: 5