Oct 8, 2018

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வார்களா?

ஜனாதிபதித் தேர்தல் நெருங்குகிறது. ஜனாதிபதிக்கு மீண்டும் ஒரு முறை ஜனாதிபதியாக முடியாதா? என்கின்ற ஆசை இல்லாமலில்லை. மகிந்த தரப்பிற்கு ஜனாதிபதித் தேர்தலுக்குமுன் இடைக்கால அரசாங்கம் அமைத்து 19 ஐத் திருத்தி மீண்டுமொருமுறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமுடியாதா? அல்லது ஆகக்குறைந்தது ஜனாதிபதித் தேர்தலில் தான்சார்ந்த ஒருவரை நிறுத்தினாலும் ஆட்சியில் இருந்துகொண்டு தேர்தலை முகம்கொடுப்பது சாதகம்தானே! எனவே, எப்படியாவது இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைத்துவிட வேண்டும்; என்கின்ற எண்ணம்.

இதுதொடர்பாக, ஜனாதிபதியும் மஹந்தவும் மற்றும் அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட அவரது சகோதரர் பசில் ராஜபக்ச ஆகிய மூவரும் மாத்திரமே கலந்துகொண்டு பேசியிருக்கின்றார்கள். முன்னாள் அமைச்சர் S B திசாநாயக்கவின் வீட்டில் இவர்கள் சந்தித்தாகவும் ரணிலுடன் இனியும் பயணிக்கமுடியாது; என ஜனாதிபதி கூறியதாகவும் இன்றைய Sunday Times பத்திரிகை கூறுகின்றது. பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாகவும் விரைவில் ஜனாதிபதி வெளிநாடு சென்று திரும்பியதும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகவும் அப்பத்திரிகை கூறுகின்றது.

ரணிலுக்கோ, முடிந்தால் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதிப் பதவியை ஒழித்து விடவேண்டும். முடியாவிட்டால் தானே அடுத்த ஜனாதிபதியாக வேண்டும்.

இம்முத்தரப்பினருக்கும் ஜனாதிபதி தேர்தலாயினும் சரி, இடைக்கால அரசாங்கமானாலும் சரி, த தே கூ இன் ஆதரவு தேவை.

இதுவரை ஜனாதிபதி த தே கூ இன் ஆதரவை வெளிப்படையாக கோரவுமில்லை. த தே கூ வாக்குறுதி எதனையும் வழங்கவுமில்லை. ஆயினும் த தே கூ இனரிடம் நல்லெண்ணத்தைக் கட்டியெழுப்பும் வகையில் ராணுவம் கைப்பற்றியுள்ள பொதுமக்களின் சகல காணிகளையும் டிசம்பரிற்கு முதல் விடுவிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் ராணுவத்தளபதி சரத்பொன்சேகா காணிகள் விடுவிப்பது தேசியப்பாதுகாப்பிற்கு குந்தகமானது; என எதிர்ப்புத் தெரிவிக்கின்றார். ஆயினும் ஜனாதிபதி உறுதியாக உள்ளார்.

இக்காணி விடுவிப்பு உத்தரவு சிங்கள மக்களின் உணர்வைத் தூண்டுவதற்கு எதிரணிக்கு நல்லதோர் வாய்ப்பு. ஆனாலும் மௌனம் காக்கிறார்கள் த தே கூ ஐ இக்கட்டத்தில் பகைக்கக்கூடாது; என்பதற்காக.

இத்தனைக்கும் அவர்களும் த தே கூ இடம் இன்னும் ஆதரவு கோரவுமில்லை. த தே கூ வாக்குறுதி வழங்கவுமில்லை. எதிர்கால ஆதரவு தொடர்பாக எதுவித பேச்சுவார்த்தையும் நடத்தாமலேயே அவர்கள் சாதிக்கின்றார்கள்; என்றால் அதுதான் த தே கூ அரசியல்.

அதேநேரம் ரணில் விக்ரமசிங்க அவர்களும் ஜனாதிபதி தலைமையிலான ஶ்ரீ சு க அரசை விட்டு வெளியேறினாலும் த தே கூ தன்னைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் காணி விடுவிப்பிற்கு முழு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கின்றார்.

நம்மவர்கள்
—————-
நமது மொத்த 21 பாராளுமன்ற அங்கத்தவர்களும் அரசில் இருக்கிறார்கள். அவற்றில் சொந்தக்காலில் நிற்க, சுதந்திரமாக பேச, சுயமாக முடிவு எடுக்க என புறப்பட்ட இரண்டு தனித்துவக்கட்சிகளும் அதே அரசில் இருக்கின்றன.

நமக்கும் காணிப்பிரச்சினை இருக்கின்றது. திருகோணமலையில் காணிப்பிரச்சினை இருக்கின்றது. அம்பாறையில் இருக்கின்றது. மட்டக்களப்பில் புலிகளின் காலத்தில் பறிகொடுத்த பத்தாயிரம் ஏக்கருக்கு மேற்கட்ட காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

முசலியில் கடந்த ஆட்சியில் பன்னிரண்டாயிரம் ஏக்கர் பறிபோயின. இந்த ஆட்சியில் ஒரு லட்சம் ஏக்கர் கபளீகரம் செய்யப்பட்டது. இவைகள் மக்களின் காணிகளில்லையா? இவர்களுக்கு கட்சிகள் இல்லையா? இந்தக்கட்சிகளின் ஆதரவு மைத்திரிக்கு தேவையில்லையா? மகிந்தவுக்கு தேவையில்லையா? ரணிலுக்குத் தேவையில்லையா?

எதிர்க்கட்சியில் இருப்பவர்களைக் கவர்வதற்காக அவர்களின் காணிகள் விடுவிக்கப்பட முடியுமென்றால் ஆளும் கட்சியில் இருப்பவர்களின் காணிகள் ஏன் விடுவிக்கப்பட முடியாது? அவ்வாறாயின் இவர்களைக் கவரத்தேவையில்லை; என்பதுதானே பொருள்.

ஏன் தேவையில்லை? அவர்கள்தான் காலைச் சுற்றிய பாம்பாய்க் கிடக்கிறார்கள்; எப்போதும் கிடப்பார்கள்; என்கின்ற நம்பிக்கையைத்தவிர வேறு எதுவாக இருக்கமுடியும்?

நமக்கு வேறு பிரச்சினைகள் இல்லையா?

கரையோர மாவட்டம் கிடைத்துவிட்டதா?
ஒலுவில் பிரச்சினை தீர்ந்துவிட்டதா?
கல்முனை மாநகரசபை பிரிக்கப்பட்டுவிட்டதா?
கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் பிரிவு பிரச்சினை தீர்கப்பட்டுவிட்டதா?
கல்முனை புதிய நகரத்திட்டம் தொடங்கிவிட்டதா?
கல்முனை மார்க்கட் கட்டப்பட்டு விட்டதா?
சந்தாங்கேணி அபிவிருத்தி செய்யப்பட்டுவிட்டதா?
நுரைச்சோலை வீட்டுத்திட்டம் கையளிக்கப்பட்டுவிட்டதா?
வடபுல மக்கள் முழுமையாக மீட்குடியேற்றப்பட்டு விட்டார்களா?
குடியேறியவர்களுக்கெல்லாம் வீடுகள் கொடுக்கப்பட்டுவிட்டதா?
சிலாவத்துறை வைத்தியசாலை சீர்செய்யப்பட்டு விட்டதா?
வடபுல அகதிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டுவிட்டதா?
தெகிவளை, கொலன்னாவையில் புதிய முஸ்லிம் பாடசாலைகள் உருவாக்கப்பட்டு விட்டனவா?
கண்டியில் முஸ்லிம் ஆண்கள் பாடசாலை உருவாக்கப்பட்டு விட்டதா?
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மீள கொணரப்பட்டு விட்டதா?
கண்டி- திகனயில் துவம்சம் செய்த பொலிசாருக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதா?
கிந்தோட்டைக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட்டுவிட்டதா?

எது நடந்திருக்கிறது? எதற்காக அரசின் பங்காளியாக இருக்கிறோம்? எதற்காக பங்காளியாக இருந்தும் உதாசீனப் படுத்தப்படுகிறோம்.

ஒரு பெருந்தலைவர் கூறுகிறார்; “ அரசாங்கம் எதுவும் செய்யவில்லையாம்; அடுத்த தேர்தலில் மக்கள் அரசுக்கு பாடம் புகட்டுவார்களாம்”. இதனைச் சொல்வதற்கா மக்கள் இவர்களைத் தெரிவுசெய்தார்கள். அவ்வாறாயின் மக்கள் நேரடியாகவே தேசியக்கட்சிகளுக்கு வாக்களிக்கலாம். ஒரு கட்சி மக்களின் தேவைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த தேர்தலில் அக்கட்சிக்கு பாடத்தைப் புகட்டிவிட்டு மறு கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவருவார்கள். இடையில் தரகர்களாக நீங்கள் எதற்கு?

தேர்தல் மேடைகளில் நீங்கள் சாதிப்போம்! சாதிப்போம்!! என்றவை எங்கே!

இன்னுமொரு தலைவர் கூறுகிறார்: “ அடுத்த தேர்தலில் எல்லாவற்றையும் ஒப்பந்தம் செய்துகொண்டுதான் ஆதரவளிப்பார்களாம். ஏனாம் கடந்த தேர்தலில் ஒப்பந்தம் செய்யவில்லை? அவ்வாறாயின் இந்த ஆட்சியின் எஞ்சியிருக்கின்ற காலப்பகுதியிலும் எதுவும் செய்கின்ற நோக்கமில்லை. அடுத்த தேர்தலுக்கு ஒரு ஒப்பந்தத்தை எடுத்துக்கொண்டு ஒரு புதிய கதையுடன் வரப்போகிறார்கள்.

இன்னும் சிலர் போராட மக்களை அழைக்கிறார்கள். மக்கள் போராடுவதென்றால் உங்களுக்கு வாக்களித்ததெதற்கு? நீங்கள் ஆட்சியில் பங்கெடுத்ததெதற்கு? இவ்வாறு இன்னும் எவ்வளவு காலத்திற்கு இவர்கள் மக்களை மடையர்களாக்கப்போகிறார்கள். மக்களும் மடையர்களாகப்போகிறார்கள்.

அன்புள்ள சகோதரர்களே!

‘மீனும் தேனும் கண்ட இடத்தில்’ என்பார்கள். ஜனாதிபதி ஒரு பக்கம். ஆட்சி மறுபக்கம். ஆட்சி சிறுபான்மைக் கட்சிகளில் தங்கியிருக்கிறது. காலைவாரும் படலமும் ஆரம்பித்துவிட்டது. இது வரலாற்றில் ஓர் சந்தர்ப்பம் சாதிப்பதற்கு. இம்முறை சாதிக்காதவர்கள் இனி என்றுமே சாதிப்பார்களா? என்பது சந்தேகமே!

ஜனாதிபதித் தேர்தலுக்கு 14 மாதமும் பொதுத்தேர்தலுக்கு 22 மாதமுமே இருக்கின்றன. இப்பொழுதாவது நமது கட்சிகள் நமது பிரச்சினைகளை பட்டியலிட்டு அரசுக்கு ஆறுமாத காலக்கெடு கொடுத்துச் செய்யசொல்லவேண்டும். அல்லது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியிலோ அல்லது எதிர்க்கட்சியிலோ அமர்ந்து ஆளுக்கட்சிக்கு நிபந்தனாயுடனான ஆதரவை வழங்கி நமது பிரச்சினைகளைத் தீர்த்துத்தர சொல்லட்டும். அதன்பின் அடுத்த தீர்மானத்தை எடுக்கலாம்.

இதனை இக்கட்சிகள் செய்வதற்கு வாக்காளர்களாகிய நீங்கள் எவ்வகையில் அழுத்தம் கொடுக்கப்போகிறீர்கள்? போராடப்போகிறீர்கள்?

வருகின்ற வரவுசெலவுத் திட்டத்தில் அரசைத் தோற்கடிக்க ஜனாதிபதி திட்டமிடுவதாக Asian Mirror தெரிவிக்கின்றது. அப்பொழுது முஸ்லிம்கட்சிகளும் அச்சதியில் இணைந்து அரசைத் தோற்கடித்து அடுத்த ஆட்சியைக் கொண்டுவருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேநேரம் மௌனமாக தற்போது இருந்துவிட்டு அரசை வரவுசெலவுத் திட்டத்தில் காப்பாற்றுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் இரண்டு சந்தர்ப்பத்திலும் நாம் எதையும் சாதிக்கப்போவதில்லை. இதனால்தான் நாம் எடுப்பார் கைப்பிள்ளைகளாகப் பாவிக்கப் படுகின்றோம்.

நாம் சாதிக்கவேண்டும். எனவே உடனே செயலில் இறங்க வேண்டும். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளவேண்டும். எனவே, மக்கள் இவர்களுக்கு எவ்வாறு அழுத்தம் கொடுக்கப்போகிறீர்கள்?

ஊடகவியலாளர்களே! முகநூல் வேங்கைகளே! போராளிகளே! ஆதரவாளர்களே! என்ன செய்யப்போகிறீர்கள்?

ஊடகவியலாளர்களே! உங்கள் பேனாக்கள் எழுதட்டும்: சாதிக்கப்பிறந்த சமூகத்தின் சாபக்கேடாய் நீங்கள் இருந்ததுபோதும். இப்போதாவது சாதித்துவிட்டு வாருங்கள்; என்று

முகநூல் சிங்கங்களே! கேளுங்கள் உங்கள் முகநூலில்; மௌனமாய்ச் சாதிக்கும் தமிழ்க்கட்சிகளைப் பார்த்தாவது உங்கள் தன்மான உணர்ச்சி உரசுப்படவில்லையா? என்று.

போராளியே! அடுத்த கட்சி ஏசும்போது பொங்கியெழத் தெரிந்த உனக்கு உன் எதிர்கால சந்ததிக்கு வாழ்வளிக்க உன் சமூகம் முகம்கொடுக்கும் தடைகளை உடைத்தெறிய, இழந்தவற்றை மீட்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. கோழையாய் எதுவும் செய்யாமல் குத்துக்கல்லாட்டம் இருந்துவிட்டு தேர்தலுக்கு வந்து தேர்இழுக்கச்சொன்னால் உன்னை ஏற்றி இழுக்கமாட்டேன் அந்தத்தேரை! மாறாக உன்னைத் தெருவில் கிடத்தி உன்மேல் அத்தேரை இழுப்பேன் இதுவரை உனக்காக கோசம் எழுப்பிய குற்றத்திற்காக என்று சொல்வாயா?

ஆதரவாளனே! இவர்களுக்காக வாக்களிக்க எத்தனை தடவை உன் விரல்களில் மை பூசியிருப்பாய்! இந்த சந்தர்ப்பத்திலாவது சாதித்துவிட்டு வரச்சொல். இல்லையெனில் தூக்கு மைவாளியை அவர்கள் மீது மொத்தமாக பூச.

அன்புள்ள சகோதரர்களே! இந்த சந்தர்ப்பத்தைத் தவறவிடாதீர்கள். இவ்வாறான சந்தர்ப்பம் எல்லா நேரமும் கிடைக்காது.

இல்லையெனில் இந்தக்கட்சிகள் அத்தனையும் தூக்கிவீசிவிட்டு பொதுமக்கள் வீதிக்கு இறங்குங்கள்; அரசிடம் நேரடியாக கேட்போம்; போராடுவோம். அரசும் திரும்பிப் பார்க்கும்.

இவர்கள் தரகர்களாக இருக்கும்வரை அரசு நம்மைத் திரும்பிப்பார்க்காது.

எனவே, ஒன்றில் அவர்களை செய்யவை! அல்லது அவர்களைத் தூக்கிவீசிவிட்டு நீ செய்யத்தயாராகு!

நல்ல காற்று வீசுகிறது. தூற்றத் தவறிவிடாதே! அது உன் எதிர்கால சந்ததிகளுக்கு நீ செய்யும் துரோகம்.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network