இராஜதந்திர தலையிடியாக உருமாறும் ஜமால் கசோக்ஜி விவகாரம்
Dilshan Mohamed

சவூதி அரேபியாவின் பத்திரிகையாளரான ஜமால் கசோக்ஜி துருக்கி இஸ்தான்பூலில் இருக்கும் சவூதி அரேபியாவின் கண்சுலேட் எனப்படும் இணைதூதரகத்தில் வைத்து கொடூரமாக கொலைசெய்யப்பட்ட சம்பவங்கள் அதன் பின்னணிகளை அவதானிக்கும் போது ஒரு ஹோலிவூட் த்ரில்லர் படத்தை பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுவது தவிர்க்கமுடியாததாகியிருக்கிறது.

ஒரு காலத்தில் சவூதி அரேபியா மன்னர் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமாகயிருந்த ஜமாலை வெறுமனே ஒரு பத்திரிகையாளராக மட்டும் மட்டுப்படுத்திவிட முடியாது. சவூதி அரேபியாவின் வெளியுறவு கொள்கை வகுப்பாளர்களில் ஒருவர். அது மட்டுமல்லாது அமெரிக்காவின் இராஜதந்திர மற்றும் ஊடக வட்டத்திற்குள் நன்கு அறியப்பட்டவர். வோஷிங்க்டன் போஸ்ட் போன்ற பலம்மிக்க பத்திரிகைகளில் பத்தி எழுத்தாளர்.

ஏற்கனவே பேச்சு சுதந்திரம் மட்டுப்படுப்பட்ட சவூதி அரேபியாவில், முஹம்மத் பின் சல்மானின் (MBS) வருகையின் பின்னர், பேச்சு சுதந்திரம் மிகவும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது. சவூதி அரேபியாவின் அரச கொள்கைகளை விமர்சிப்பவர்களை விடுங்கள், யேமனில் சவூதி தலைமையில் நடாத்தப்படும் குண்டு தாக்குதலில் கொல்லப்படும் அப்பாவி குழந்தைகளை பற்றி அனுதாபம் தெரிவிக்கும் ஒரு ட்வீட் அல்லது பகிரங்கமாக ஒரு துஆ செய்பவர்களையே கேள்வி கணக்கு இன்றி சிறைச்சாலைக்கு அனுப்பபடுகிறார்கள். இதற்கும் மேலாக சவுதிக்கு சார்பாக இருக்கும் முக்கிய புள்ளிகள் நீண்ட நாட்கள் அமைதியாக இருந்தாலே அவர்களையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் ஒரு நெருக்கடி நிலை சவூதி அரேபியாவில் நிலவுகிறது. 
இப்படி தனக்கு நெருக்கமானவர்கள் பலர் கைது செய்யப்பட்ட பின்னணியில்தான் ஜமால் இதனை வெளியில் பேசவேண்டும் என்ற முடிவு செய்கிறார். சவூதி அரேபியா உள்ளே இருந்து இதை பேச முடியாது என்ற நிலையில், நாட்டைவிட்டு வெளியேறி அமெரிக்காவில் குடியேறுகிறார்.

நாட்டைவிட்டு வெளியேறியிருந்தாலும் , தனது எழுத்துக்களை எழுத்துக்களில் சவூதி அரசை கண்ணாபின்னா என்று திட்டியிருக்கவில்லை. சவுதியின் வெளிவிவகார கொள்கைகள் எவ்வாறு மாற்றமடைய வேண்டும் என்ற அடிப்படையில் பல கட்டுரைகள் எழுதியிருந்தார். குறிப்பாக, முறிவடைந்திருக்கும் சவூதி- கட்டார் விவகாரம், யேமன் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர சவூதி முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முஸ்லிம் உலகில் பலம் பொருந்திய நாடுகளான சவூதி அரேபியா மற்றும் துருக்கி கூட்டிணைந்து செயல்படவேண்டிய இந்த நெருக்கடியான காலகட்டத்தில், பிரிந்திருப்பதால் ஏற்படப்போகும் விளைவுகள் போன்றவற்றை வலியுரித்தி வந்திருக்கிறார்.

ஒரு ட்விட்டை கூட சகித்துக்கொள்ளமுடியாத அரசாங்கம், ஜமால் போன்றவர்களுக்கு அமெரிக்காவின் இராஜதந்திர வட்டத்தில் இருக்கும் செல்வாக்கு அச்சத்தை ஏற்படுத்தியது ஆச்சரியமில்லை. ஏனெனில் அமேரிக்கா- சவூதி உறவு என்பது எழுபது வருட பழமையானது. மிகவும் இரகசியமான கட்டமைப்பில் உருவாக்கபட்ட பொருளாதார- வர்த்தக- இராஜந்திர- இராணுவ பொறிமுறைகளை உள்ளடக்கிய பன்முகப்படுத்தப்பட்ட நெருக்கமான உறவு.

ஜமாலின் வெளியேற்றம் இந்த உறவுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதே சவுதியின் அச்சத்துக்கு காரணம். இந்த நிலையில் ஜமாலை தீர்த்துக்கட்டுவதற்குரிய ஐடியாக்கள் இருந்திருந்தாலும், அதை அமெரிக்காவில் வைத்து செய்யப்போய் சகுனம் பிழைத்தால், ஏற்கனவே 9/11 தாக்குதலுக்கு சவுதியர்கள் காரணம் என்ற குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள் ,வழக்குகள் இருக்கும் நிலையில், தமது மண்ணிலேயே மீண்டும் ஒரு பத்திரிகையாலாரை கொலை செய்து கருத்து சுதந்திரத்தை முடக்கப்பார்க்கிரார்கள் என்ற ஒரு விடயம் மிகச்சாதரணமாக கடந்து போகக்கூடிய ஒரு விடயமாக இருக்காது என்பதால் சவூதி அரேபியா அமெரிக்காவுக்கு வெளியில் ஒரு தருணம் பார்த்திருக்க கூடும்.

தருணம் பார்த்திருந்த நேரம், ஜமால் தனது விவாகரத்து பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு வாஷின்டனில் உள்ள சவூதி தூதரகத்திற்கு விண்ணப்பிக்கிறார். உடனே இந்த ஆவணத்தை துருக்கியில் உள்ள தூதரகத்தில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார். 
வெளிநாடுகளில் தமது உளவுப்பிரிவுகளால் நடாத்தப்பட்டும் அரசியல் படுகொலைகளுக்கான அஸ்ஸாசிநேஷன் ஒபரேஷேன் ஒன்றை சவூதி போன்ற நாடுகளால் நடத்துவதற்குரிய உளவு பலம் இல்லை என்பதால், சொதப்பியிருக்கிறார்கள் என்றும் என்ன நடக்கப்போகிறது என்பதை அறியமுடியாமல் துருக்கி உளவுப்பிரிவு தோல்வியடைந்திருக்கிறது என்றும் சில நினைக்கக்கூடும்.

ஆனால் ஜமாலை படுகொலை செய்வதற்கான திட்டம் சவூதி அரேபியாவால் மிக நுணுக்கமாக திட்டமிடப்பட்டிருக்கிறது என்பதே உண்மையாகும். இதற்கு சவூதி அரேபியாவுடேன் சேர்ந்து இயங்கும் மேலும் சில உளவு அமைப்புக்கள் உதவியிருக்கக்கூடும்.

திட்டத்தின் படி, சவூதி அரேபியா பிரஜையான ஜமால் அமெரிக்காவில் இருந்து துருக்கிக்கு செல்கிறார். துருக்கி மண்ணில் வேறு எங்காவது வைத்து அவரை போடப்போய், அது பிசுபிசுத்து விடுவதற்கு வாய்ப்பு இருப்பதால், தூதுரகமே பொருத்தமான இடமாக தெரிவு செய்யப்படுகிறது.

நிற்க..

இரு நாடுகளுக்கு இடையிலான தூதரக இராஜதந்திர உறவுகள் என்பது வெறும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் என்பதை விட இராஜதந்திர உறவுகளை ஒழுங்கு படுத்தும் சர்வதேச சாசனமான வியன்னா சாசனத்திற்கு கட்டுப்பட்டது. தூதுவர்களுக்கு பாதுகாப்பு அளித்தல் அல்லது Don’t shoot the messengerஎன்பது பல ஆயிரம் ஆண்டு மரபுகளில் ஒன்று. உங்கள் நாட்டுக்கு எதிராக போரை துவங்கப்போகிறோம் என்று குறிப்பிட்ட ஒரு நாட்டு தலைவனின் தூதுவன் ஓலை கொண்டு வந்தாலும் , போருக்கு தயாராகவேண்டுமே தவிர ஓலையை கொண்டுவந்த தூதுவரை கொலை செய்ய முடியாது என்பதே அந்த மரபு.

இந்த மரபுகளை கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட வியன்னா சாசனப்படி, ஒரு குறிப்பிட்ட நாட்டில் இருந்து (Sending State என்று அழைப்பார்கள்) ஒரு தூதுவரை பெற்றுக்கொள்ளும் நாடு (Receiving State) , அந்த தூதுவர், தூதுவராலயம், தூதுவரின் உத்தியோகபூர்வ வீடு, தூதுவராலத்தின் ஆவணங்கள் அனைத்திற்கும் பாதுகாப்பு வழங்க்கவேண்டியதுடன், அவற்றின் இரகசியத்தன்மையை தகர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது என்பதே சாசனத்தின் அடிப்படை. 
இந்த இரகசியத்தன்மையை பாவித்து தனது திட்டத்தை செயல்படுத்துவதற்கே சவூதி அரேபியா முனைந்திருக்கிறது. மேலும் இது வெறும் கொலையோடு முடிந்துவிடாமல் ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடிப்பதற்கான திட்டமும் தீட்டப்பட்டிருக்கிறது.

திட்டப்படி, ஒரு தனிப்பட்ட தேவைக்காக ஜமால் தூதுரகத்திற்குள் வருகிறார். இந்த விடயம் வெளியாருக்கு தெரியப்போவதில்லை. உள்ளே வந்தவர் வெளியேறகூடாது. அதற்கான பின்புல வேலைகள் நடந்துவிட்டன. உள்ளே நடந்தவற்றை நீங்களும் அறிந்திருப்பீர்கள்.

திட்டப்படியே எல்லாம் நடந்திருந்தால், ஏற்கனவே விவாகரத்து பெற்றிருந்த ஜமாலை காணவில்லை என்ற செய்தி ஆகக்குறைந்தது ஒரு வாரத்தின் பின்னரே கசிந்திருக்கும். அவரின் பாஸ்போட் ரெக்காட் படி, இறுதியாக துருக்கிக்கு சென்றார் என்றும் அங்கிருந்த அவரை காணவில்லை என்றே செய்திகள் வெளிவந்திருக்கும். உடனே இது தொடர்பாக அமெரிக்க ஊடகங்கள் சர்ச்சையை கிளப்பும் போது, எமது நாட்டின் பிரஜையை ஒப்படைக்கும் படி , சவூதி அரேபியா துருக்கிக்கு ஒரு அழுத்தம் கொடுத்திருக்கும். ஏற்கனவே உடைந்து போயிருக்கும் அமெரிக்க- துருக்கிய இராஜந்திர உறவுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் துருக்கி இராஜந்திர ரீதியில் மிகப்பெரிய நெருக்கடியை சந்திருக்கும்.

மிக நுணுக்கமாக தீட்டமிடப்பட்டிருந்தாலும், அவர்கள் எதிர்பார்க்காத ஒரு புள்ளியில் எல்லாம் சொதப்பபட்டிருக்கிறது. அதாவது ஜமால் தனியாக கொன்சுலேட்டுகு செல்லாமல், தனது காதலியான கதீஜாவையும் கூட்டிக்கொண்டே சென்றிருக்கிறார். அதுவும் இருவரும் வேறு வழியில் வந்து கொன்சுலேக்கு முன்னாலேயே சந்தித்திருக்கிறார்கள். தனது Apple கைக்கடிகாரத்தையும் அவளிடம் கொடுத்துவிட்டே உள்ளே போயிருக்கிறார். 
உள்ளே போனவர் சில மணித்தியாலங்களாகியும் இன்னும் வெளியேறவில்லை என்ற தகவலை கதீஜா துருக்கிய போலிசுக்கு அறிவித்தவுடன்தான் துருக்கி உட்பட முழு உலகின் கவனமும் கொன்சுலேட்டில் குவியத்துவங்கியது. இந்த புள்ளிதான் சவூதி அரேபியா சிக்கிக்கொள்வதற்கு முழு காரணமாகியது.

உள்ளேவந்த விடயம் கசிந்து விட்டது என்பதை அறிந்த சவூதி அதிகாரிகள் வந்தவர் சென்று திரும்பி சென்றுவிட்டார் என்று அறிக்கை விட்டு சமாளிக்க முனைந்த தருணத்தில், துருக்கிய அதிகாரிகளால் அவர் உள்ளே வந்தததற்காக வீடியோ அத்தாட்சி இருக்கிறது, வெளியேறியதற்கான இதைப்போல அத்தாட்சியை ஒப்படையுங்கள் என்றவுடன் , இதிலிருந்து சவூதி அரேபியா தப்பிப்பதற்கான அனைத்து அடைபட்டுவிட்டன.

தற்போதைய நிலையில், உள்ளே நடந்தவற்றிக்கான அத்தனை அத்தாட்சிகளும் தம்மிடம் இருப்பதாக துருக்கிய உளவுத்துறை அறிவித்திருக்கிறது. மிகப்பெரிய இராஜந்திர இழுபறிகளுக்கு பின்னர், துருக்கிய தடயவியல் மற்றும் துப்பறியும் நிபுணர்கள் தூதுவராலத்திற்கு உள்ளே சென்று திரும்பியிருகிரார்கள். உள்ளே வைத்து விசாரிக்கும் போது மரணித்துவிட்டார் என்று குற்றத்தை ஒப்புக்கொள்வதற்கு சவூதி தயாராவதாக செய்திகள் வெளியாகிய பின்னர், தூதுவராலயம் என்பது விசாரணை கூடு இல்லை என்று துருக்கிய வெளிவிவகார அமைச்சர் கூறியிருப்பது இந்த விடயத்தை இலகுவில் துருக்கி விட்டுக்கொடுக்கப்போவதில்லை என்பதை காட்டுகிறது. அதுபோக, உள்ளே மரணித்தார் என்றால், உடலை ஒப்படைக்க கோரப்படும் என்ற மிகவும் இக்காட்டான நிலையில், நேற்று அமேரிக்கா வெளிவிவகார செயலாளர் ரியாத்துக்கு சென்றிருக்கிறார். அமெரிக்காவுக்கு நூறு பில்லியன் அமெரிக்க டாலரை லஞ்சமாக கொடுக்க சவூதி முன்வந்திருப்பதாக நிவ்யோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருகிறது. ஆனாலும் அமேரிக்காவை வெளிவிவகார கொள்கை வகுப்பை பொறுத்தவரை, எமது நாடுகளை போல அஆட்சியில் இருக்கும் கட்சிகளில் தங்கியிராமல், பெண்டகன், காங்கிரஸ், வெள்ளை மாளிகை, லாபி அமைப்புக்கள், ஊடகங்கள் என்ற வலைப்பின்னலுடன் நிறுவனமயப்படுத்தப்பட்டது. ஒன்றுக்கான லஞ்சம் இன்னுமொன்றை கட்டுப்படுத்தாது , கூடவே ஊடகங்கள், காங்கிரஸ் மற்றும் லாபி அமைபுக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர் ஜமால்.

அரச குடும்பத்திற்கு தெரியாமல் கொலையை யாரோ செய்துவிட்டார்கள் என்று இலகுவில் முடிக்கவும் முடியாது காரணம் கொலை நடந்த இடம் சர்வதேச இராஜந்திர சாசனத்திற்கு கட்டுப்பட்ட இடம். இதைப்போலவே தூதுவரை துருக்கி விசாரிக்க முடியும் ஆனால் தூதுவர் என்ற அடிப்படையில் அவருக்கிருக்கும் இராஜந்திர விடுகை (Diplomatic Immunity) காரணமாக அவருக்கு துருக்கியால் தண்டனை வழங்கமுடியாது. வியன்னா சாசனப்படி தூதுவரலத்தின் பாதுகாப்பை துருக்கி உறுதிப்படுத்தும் என்றாலும், ஒரு நாட்டின் இறைமையை மீறிய குற்றச்செயல்களுக்குரிய தண்டனை என்ன போன்ற பல விடயங்களுகடேன் கூடிய மிகப்பெரும் இராஜந்திர சிக்கலுக்குள் தள்ளியிருக்கிறது ஜமால் கசோக்ஜி விவகாரம்.
இராஜதந்திர தலையிடியாக உருமாறும் ஜமால் கசோக்ஜி விவகாரம் இராஜதந்திர தலையிடியாக உருமாறும் ஜமால் கசோக்ஜி விவகாரம் Reviewed by NEWS on October 18, 2018 Rating: 5