அக்குறணை நகரம் அடிக்கடி வெள்ளத்தில் மூழ்குவதாகவும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறி சிவில் அமைப்புக்கள் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை அக்குறணை பிரதேச செயலாளர் காரியாலயம் முன்னாள் நடத்தியது.

ஒரு சில அதிகாரிகள் சட்ட விரோத நிர்மாணங்களுக்கு அனுமதி வழங்குவதால் முழு அக்குறணை நகரும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு எதிராக பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை என்பன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக அரசையும் ஏனைய நிறுவனங்களையும் விழிப்புணர்வூட்டும் வகையில் மாபெரும் ஆர்பாட்டம் மற்றும் கடையடைப்பு என்பன இடம்பெற்றது.

பெருந்தொகையான பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் கண்டி மாத்தளை பிரதான வீதியில் வாகனங்கள் செல்ல முடியாது சுமார் ஒரு மணி நேரம் தடைப்பட்டது.

சிவில் அமைப்புக்கள் சார்பாக மகஜர் ஒன்றையும் பிரதேச செயலாளர் மாதவ வர்ணகுலசூரியவிடம் கையளிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் இரு முறை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் முதன் முதலாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இது வரை 17 முறை அக்குறணை நகரம் பாதிப்படைந்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

இது தொடர்பாக பிரதேச செயலாளர் கருத்துவெளியிடுகையில்,
பேராதனைப் பல்கலைககழகத்துடன் இணைந்து மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி வெள்ளப் பெருக்கு ஏற்பட பிங்கா ஓயாக் கரையில் அமைந்துள்ள 113 சட்டவிரோத கட்டிடங்களே காரணம் என தெரியவந்துள்ளதாகவும் அதனை அகற்ற பிரதேச சபை நடவடிக்கை எடுக்கும்படி பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Share The News

Post A Comment: